Header Ads



'முன்பகை' தீர்த்த சாமுவேல்ஸ்

உலகக் கோப்பை டி20-யில் 2-வது முறையாக சாம்பியனாகி வரலாறு படைத்த மேற்கிந்திய தீவுகள் அணியின் இறுதிப்போட்டி ஆட்ட நாயகன் மர்லன் சாமுவேல்ஸ், ஷேன் வார்ன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் மீதான முன்பகையை தீர்த்துக் கொண்டார்.

பிக்பாஷ் லீக் டி20 போட்டிகளின்போது ஷேன் வார்ன், சாமுவேல்ஸ் மோதல் வெடித்தது. இருவரும் கைகலப்பு வரை சென்றனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் தனது கொதிப்பைக் கொட்டித் தீர்க்க, ஆட்டம் முடிந்த கையோடு கால்காப்பைக் கூட அவிழ்க்காமல் வந்தார் மர்லன் சாமுவேல்ஸ்.

தனது ஆட்ட நாயகன் டிராபியைக் காண்பித்து, “இது ஷேன் வார்னுக்கு. நான் எந்த அணிக்காக ஆடினாலும் ஷேன் வார்ன் என்னுடன் பிரச்சினை செய்கிறார். அது என்னவென்றுதான் எனக்குத் தெரியவில்லை. இத்தனைக்கும் நான் அவரை மரியாதை குறைவாக மதிப்பிட்டதில்லை. அவர் உள்மனதில் இருக்கும் நிறைய விஷயங்களை வெளியில் கொண்டு வரவேண்டிய தேவை அவருக்கு உள்ளதாகவே எனக்குப் படுகிறது.

அவர் தொடர்ந்து என்னைப்பற்றி பேசிவரும் விதமும் அவர் செய்து வரும் காரியங்களும் எனக்கு அறவே பிடிக்கவில்லை. எனக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை, என் முகம் நிஜமானது அவரது முகம் நிஜமற்றது என்பதனால் கூட இருக்கலாம்" என்றார்.

அதேபோல் நேற்று கடைசி ஓவரில் 4 சிக்சர்கள் விளாசப்பட்ட பென் ஸ்டோக்ஸுடன் கூட சாமுவேல்ஸுக்கு தகராறுகளுக்கான வரலாறு உள்ளது.

நேற்று, சாமுவேல்ஸுக்கு பிடிக்கப்பட்ட கேட்ச் தரையில் பட்டுச் சென்றது, சாமுவேல்ஸ் அவுட் என்று இங்கிலாந்து கொண்டாட, ரீப்ளேயில் அந்த கேட்ச் தரையில் பட்டு பிடித்தாக முடிவாக ஆட்டத்தின் திருப்பு முனைத் தருணமாக சாமுவேல்ஸ் மீண்டும் கிரீஸுக்கு வந்தார். இதில் ஸ்டோக்ஸுக்கும் சாமுவேல்ஸுக்கும் இடையே சில கோபாவேச வார்த்தைகள் பறிமாறிக் கொள்ளப்பட்டன.

இதனையடுத்து மே.இ.தீவுகள் வெற்றி பெற்றவுடன் தனது மேல் சட்டையை கழற்றிய சாமுவேல்ஸ் இங்கிலாந்து ஓய்வறைக்கு சென்று சில செய்கைகளை செய்ய முயன்றார். பிறகு சாமுவேல்ஸுக்கு 30% தொகை அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மர்லன் சாமுவேல்ஸ் தொடர்ந்து கூறும்போது, "ஸ்டோக்ஸ் பதற்றமானவர். அதனால் கடைசி ஓவருக்கு முன்பாக நான் பிராத்வெய்ட்டிடம், உறுதியுடன் ஆடுமாறு கூறினேன், எப்படியிருந்தாலும் அவர் இரண்டு புல்டாஸ்களை வீசுவார், அது எப்பவும் போல நமக்குச் சாதகமாக முடியும் என்றேன்.

ஸ்டோக்ஸ் எதையும் கற்றுக் கொள்வதில்லை. எனக்கு எதிராக விளையாடும்போது என்னிடம் பேசக்கூடாது என்று அவருக்கு பலரும் அறிவுறுத்தியிருந்தனர். என்னிடம் பேசினால் நிச்சயம் நான் சிறந்த ஆட்டத்தை ஆடுவேன் என்பதை அறிந்திருந்தனர். ஆனால் ஸ்டோக்ஸ் கற்றுக் கொள்ளவில்லை. நான் பந்தை எதிர்கொள்ள தொடங்கும் முன்பே அவர் என்னிடம் ஏகப்பட்ட வார்த்தைகளை பேசினார். இதனால் கடைசி வரை நின்று பார்த்து விடுவது என்ற உறுதி என்னிடம் ஏற்பட்டது.

இத்தகைய செயல்களால்தான் நான் இன்னமும் நீடிக்கிறேன். இதனால் எவ்வளவோ ஏற்ற இறக்கங்கள் இருந்த போதிலும் நான் நீண்ட காலம் ஆடமுடிவதற்கு எதிரணியினர் என்னைத் தொடர்ந்து உசுப்பேத்தி வருவதுதான் காரணம்" என்றார்.

ஏனோ இந்தச் செய்தியாளர் சந்திப்பு பாதியிலேயே முடிந்தது. ஆனால் மர்லன் சாமுவேல்ஸ் மேலும் பேசவே ஆசைப்பட்டார். அவர் இன்னமும் பேசினால் என்னெல்லாம் பேசுவாரோ என்ற அச்சம் காரணமாக பாதியிலேயே முடிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

No comments

Powered by Blogger.