மகிந்தவின் பாதுகாப்பு தொடர்பில், பாராளுமன்றத்தில் கூச்சல்குழப்பம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தொடர்பில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி (பொது எதிர்க்கட்சி) இடையே இன்று -06- சபையில் கடும் வாதப் பிரதிவாதங்களும், கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது.
பாராளுமன்றம் இன்று புதன் கிழமை நன்பகல் 1.00 மணிக்கு கூடியது. இதன் போது பிரேரணைகள் முன் அறிவிப்புக்களின் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கொழும்பு மாவட்ட எம்.பி. தினேஷ் குணவர்த்தன நிலையியற் கட்டளை 23இன் கீழ் இரண்டில்-கேள்விகளை முன்வைத்தார்.
அண்மையில் புலிகளின் புதிய தற்கொலை அங்கி உட்பட ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பயங்கரவாதத்தை ஒழித்த புலிகளின் மரண அச்சுறுத்தலுக்கு உள்ளான முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள விசேட பயிற்சியளிக்கப்பட்ட கொமாண்டோ படையினர் பாதுகாப்பு நீக்கப்படவுள்ளது. இதற்கான உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதன் போது குறுக்கிட்ட சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தற்கொலை அங்கி மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் தினேஷ் குணவர்த்தன எம்பிக்கு தகவல்கள் தெரியும் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இரகசிய பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார் என்றார்.
இதன் போது எதிர்த்தரப்பில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து தனது கேள்விகளை முன்வைத்த தினேஷ் எம்.பி. இந்தியாவில் பிரதமருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு படையினரின் பயிற்சி பெற்ற விசேட கமாண்டோ படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாகவே இப்பாதுகாப்பு வழங்கப்பட்டது. தற்போது இது நீக்கப்பட்டு பொலிஸாரின் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு இத்தீர்மானத்தை எடுத்துள்ளதா? மே 10ஆம் திகதி பாதுகாப்பு நீக்கப்படுமா? இத் தீர்மானம் முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் . இதற்கு பிரதமர் பதிலளிக்க வேண்டுமென்றார்.
இதற்கு பிரதமர் சார்பில் சபையில் பதிலளித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல முன்னாள் ஜனாதிபதியின் விசேட பாதுகாப்பை நீக்க எந்தத் தீர்மானத்தையும் அரசு மேற்கொள்ளவில்லை.
முன்னாள் ஜனாதிபதிக்கு 103 இராணுவத்தினரும் 103 பொலிஸாரும் தற்போதும் பாதுகாப்பு வழங்குகின்றனர். மாற்றம் எதுவும் ஏற்படுத்தப்படவில்லை என்றார்.
இதனை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என எம்பிக்களான விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன உட்பட எதிர்த்தரப்பினர் தமது எதிர்ப்பை சபையில் வெளியிட்டதோடு கூச்சலிட்டனர்.
இதன் போது எழுந்த அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
2010 ஜாதிபதி தேர்தல் முடிந்த 5 நிமிடத்தில் எனக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பதுகாப்பு நீக்கப்பட்டது.
என்னை சிறையில் அடைத்தார்கள் அங்கு விடுதலைப்புலி உறுப்பினர்களும் இருந்தார்கள். ஆனால் அங்கும் எனக்கு எதுவிதமான பாதுகாப்பும் வழங்கப்படவில்லை.
எனக்கும் விடுதலைப்புலி அச்சுறுத்தல் இருந்தது. அத்தோடு நாட்டின் பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டே பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றார்.
அமைச்சர் சரத் பொன்சேகா சபையில் உரையாற்றும் போது எதிர்த்தரப்பினர் அவரை பேசவிடாது கூச்சலிட்டனர்.
இதன் போது எதிர்க்கட்சி எம்.பி. சேமசிங்க (செவ்வாய்கிழமை) பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்கள் தொலைக்காட்சி நேர்காணலில் முன்னாள் ஜனாதிபதியின் விசேட பாதுகாப்பு நீக்கப்படும் என தெரிவித்தார் என்றார்.
இதனை மறுதளித்த சபை முதல்வர் லக் ஷமன் கிரியெல்ல அது நேற்று (செவ்வாய்) நான் இன்று கால விடயத்தை கூறுகிறேன்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை. அது தொடர்பாக தீர்மானமும் எடுக்கப்படவும் இல்லையென்று திட்டவட்டமாக சபையில் தெரிவித்தார்.
இதன் போது சபாநாயகர் கரு ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில் முன்னாள் ஜனாதிபதி இந்நாள் ஜனாதிபதி உட்பட பிரதமர் ஆகியோரது பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்துவதில் எனக்கும் பொறுப்புள்ளது என்றார்.
Post a Comment