Header Ads



முஸ்லிம் காங்கிரஸில் எந்த சலசலப்பும் இல்லை - அடித்துச்சொல்கிறார் ஹக்கீம்

முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரையில் எமது கட்சி எப்போதும் போலவே மிகப் பலமானதொரு நிலையிலேயே இருக்கின்றது. அதில் எந்தவிதமான தளம்பலோ அல்லது சலசலப்போ துளியளவும் கிடையாது. இதுவே உண்மை. ஆனால் ஒருசிலர் இதற்கு நேர் மாறாக ஊடகங்களில் அறிக்கைகளை விட்டு வருகின்றனர். அது அவர்களது சுயதேவைக்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒரு செயற்பாடாகவே நாம் பார்க்கின்றோம். அத்தகையவர்களை ஏறெடுத்தும் பார்க்க வேண்டிய எந்தவிதமான தேவையோ அவசியமோ எமக்குக் கிடையாது என்று மு. கா வின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கட்சிக்குள் தளம்பல் நிலையொன்று காணப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் உலாவுகின்றன. அதில் உண்மை ஏதும் உள்ளதா எனக் கேட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

எமது கட்சியின் வரலாற்றில் நாங்கள் பல சவால்களைச் சந்தித்துள்ளோம். கட்சியைக் கூறுபோட்டு சிதறடித்துப் பலவீனமாக்க முனையும் தீய நோக்குடைய வெளிச் சக்திகளுடன் இணைந்து அவ்வப்போது எம்முடன் கூடவே இருந்துவந்த சிலர் துரோகமிழைத்தனர். ஆனால் இறுதியில் அவர்கள்தான் இருந்த இடம்தெரியாது போயுள்ளனர். உண்மையில் சவால்கள் வருகின்றபோதுதான் கட்சியை மேலும் பலமுள்ளதாக்க வேண்டும் எனும் உத்வேகம் கட்சித் தொண்டர்களிடம் ஏற்படுகிறது.

தேசியப்பட்டியல் விவகாரம் இழுபறியில் இருந்து வருவது தொடர்பாக வினவியபோது, சுடுகுது மடியைப் பிடி என இவ்விடயத்தில் எம்மால் செயற்பட முடியாது. அது தொடர்பாக நாம் ஆழமாக ஆராய்ந்து வருகின்றோம். விரைவில் வெற்றிடமாகவுள்ள அவ்விடத்திற்குத் தகுதியுள்ள ஒருவர் தலைமையினால் நியமிக்கப்படுவார். சிலருக்கு ஒரு தடவை தேசியப் பட்டியலில் அங்கம் வகித்தமை போதாதாம். இன்னும் சிலருக்கு இரண்டு மூன்று தடவைகள் இருந்தும் அடுத்தவருக்கு விட்டுக் கொடுக்க மனமில்லாது இருக்கிறது எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

இவ்விடயத்தில் கிழக்கிலிருந்து சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவரை நியமிக்குமாறு சம்பந்தப்பட்டவரிடமிருந்தும், வேறுசில ஊடகவியலாளர்கள் மூலமும் கோரிக்கை விடுக்கப்பட்டதா எனக் கேட்டபோது, இவ்வாறு ஒருவர் இருவர்அல்ல பலரும் கேட்டு வருகின்றனர். கேட்பவர்கள் எல்லோருக்கும் தூக்கி வழங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றும் சாதாரண பதவி அல்ல. அது எமது மக்களுடனும் சமூகத்துடனும் தொடர்புபட்டதொன்று. அதனால் அதுகுறித்து மேலெழுந்தவாரியாக முடிவு செய்ய முடியாது. கட்சித் தலைமை சரியான முடிவை எடுக்கும் எனத் தெரிவித்தார்.

கடந்த வெள்ளியன்று தாருஸ்ஸலாமில் இடம்பெறவிருந்த கூட்டம் இரத்தானது தொடர்பாகக் கேட்டபோது, விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வந்தமையினால் அந்தக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதே தவிரவும் அதில் விசேடமாகக் கூறுவதற்கு ஒன்றுமில்லை. விரைவில் அக்கூட்டம் நடத்தப்படும் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

2 comments:

  1. ஆமாம் சலசலப்புவராமல் இருக்க அது ஒன்றும் ஆழமான நீரோடை இல்லை.
    தவிசாளருக்கும் செயலாளர் நாயகத்திற்கும் எதிராக சாணக்கியத்திற்கு சாமரம் வீசுபவர்கள் ஏசிப்பேசிக்கொண்டிருந்தபோது "நான் இப்பொழுது வாயே திறப்பதில்லை வம்பாய் முடிகிறது "என்று கூறியதும் நீங்கள் தான்.

    கட்சிக்கு இடைக்கால தடையுத்தரவு வந்துவிடும் என்ற பயத்தில்;காய்நகர்த்திவிட்டு இப்போது எந்த சலசலப்புமில்லை பலகாரம் பொங்கிவருகின்றதெனக் கூறுவதும் நீங்களே !

    ReplyDelete
  2. ஒரு கட்சியின் தலைவர் அந்த கட்சியின் செயலாளரையும், தவிசாலரையும் பார்த்து கூறும் முறையா இது. ஏன்னா சார் கிண்டலா??? ஹசன் அலி அவர்களை தேசிய பட்டியலில் போடும் போது எங்கே போனது இந்த ஞானம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல் கபடத்தனமாக நடந்து விட்டு அதில் கிண்டலாய் ஒரு பேச்சு வேற. கட்சியில் சல சலப்பே இல்லை என்று கூறும் அளவுக்கு தலைமையின் புரிதல் உள்ளது. இதில் இருந்து ஒன்று மட்டும் புரிகிறது, கேள்வி கேட்டவரிடம் குறையிருக்க வேண்டும் அல்லது பதில் கூறியவரிடம் குறையிருக்க வேண்டும். அது சரி, அது என்ன சுடுகுது மடியைப் பிடி என்று ஒரு வார்த்தை பாவித்துள்ளீர்கள். விரலுக்கு ஏத்த வீக்கம். நல்லா யோசியுங்கள் அடுத்த தேர்தல் வரைக்கும் யோசியுங்கள். உங்களது நண்பர் அதிஸ்ரகாரர் தான். நல்லா மூலைய போட்டு யோசித்து திருகோணமலை மாவட்டத்துக்கு ஒரு தேசிய பட்டியலை கொடுத்துள்ளீர்களே ( தெளபீகின் அபிமானிகள் மன்னிக்கவும்; மக்களால் நிராகரிக்கப்பட்ட, எம்பி பதவியையும், அரை மந்திரி பதவியையும் வைத்துக் கொண்டே கட்சியை வழக்க முடியாமல் போனவர். எனது கிண்ணியா நண்பர் கூரினார், தெளபீக் நல்லம் தானாம், ஆனால் ரவூப் ஹக்கீமுக்கு ஒரு பாடம் படிப்பிக்கத்தானாம் இரண்டு மஹ்ரூப்புக்கும் வாக்களித்ததாம் ). இப்படியான தலைமையின் பின்னால் ஆமாசாமி போடுவதற்கு, புத்தி ஜீவிகளும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும் மெளனிகளாக இருக்க மாட்டார்கள் என நம்புகிறோம். இந்த தலைமை இருக்கும் வரைக்கும் ரிசாத் பதுர்டீனின் காட்டில் பெரும் மழைதான்.

    ReplyDelete

Powered by Blogger.