குலை நடுக்கத்தை ஏற்படுத்தி, வயிற்றிலே புளியைக் கரைத்துள்ளது - ரிஷாட்
-சுஐப் எம் காசிம்-
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் மறைவிற்குப் பின்னர் அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களை கணக்கிலெடுக்காது அரசியல் செய்தவர்கள் இப்போது ஓடித்திரிகிறார்கள். மக்கள் காங்கிரஸின் வரவு அவர்களை கொழும்பில் இருக்கவிடாமல் அம்பாறை பிரதேசங்களுக்கு அடிக்கடி வரும் நிலையை ஏற்படுத்தியுள்ளதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
சம்மாந்துறையில் நேற்று (04) மாலை இடம்பெற்ற மக்கள் காங்கிரஸின் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றினார். இக்கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் உரையாற்றியதாவது,
மர்ஹூம் அஷ்ரப்பின் மறைவின் பின்னர் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு எதுவுமே செய்யாது தூங்கிக் கிடந்தார்கள். பசப்பு வார்த்தைகளாலும் வார்த்தை ஜாலங்களாலும் இந்த சமூகத்தை ஏமாற்றி ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடாத்தினர். தலைமையை தட்டிக் கேட்பவர்களை கட்சியிலிருந்து வெட்டியெறிந்தார்கள். தலைமைக்கு கூஜா தூக்கிகளாக இருப்பவர்களையும் தலைமைக்கு சாமரை வீசுபவர்களையும் தியாகிகளாக வெளியுலகத்திற்கு காட்டினார்கள்.
பிழைகளை தட்டிக் கேட்பவர்களை துரோகிகளாக முத்திரை குத்தினர். இவர்களின் இனிமையான பேச்சுகளில் கவர்ந்து இந்த சமூகம் தொடர்ந்தும் ஏமாறிக்கொண்டிருக்கின்றது. அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களில் எந்த அபிவிருத்தியும் நடைபெறவில்லை, பாதைகள் சீரழிந்து கிடக்கின்றன. இளைஞர் யுவதிகள் தொழிலின்றி அலைகின்றனர். முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி ஏமாற்றி தொடர்ந்தும் பிழைப்பு நடத்தலாம் என்று எண்ணியிருந்தவர்களுக்கு மக்கள் காங்கிரஸின் வரவு குலை நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் சமூகத்தைத் தேர்தல் காலங்களில் உசுப்பேற்றி உசுப்பேற்றி ஆயிரம் விளக்குப் பாடல்களை போட்டுக்காட்டி வாக்குகளைக் கொள்ளையடித்தவர்களுக்கு இன்று வயிற்றிலே புளியைக் கரைத்துள்ளது மக்கள் காங்கிரஸ்.
இந்தக் கட்சி இங்கு வருகின்றது என்று சும்மா சொன்னால் கூட அதற்கு முதல் நாளே இங்கு வந்து பெட்டிக் கடைகளில் முச்சந்திகளில் தேநீரை அருந்தும் நிலையை நாம் ஏற்படுத்தியுள்ளோம். நாம் முஸ்லிம் சமூகத்தை அடகுவைத்து அவர்களின் தலைகளை எண்ணிக்காட்டி அரசிடமிருந்து கிடைப்பதைச் சுருட்டிக் கொள்ளலாம் என நினைப்பவர்கள் அல்ல, நல்லாட்சி அரசுக்கு ஆதரவளித்த போது முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை முன்வைத்து ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்ட பின்னரே பிரசாரங்களில் ஈடுபட்டோம்.
”மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள்” என்று உங்களிடம் நாம் கோரவில்லை. அப்படிக் கூறுவதென்றால் ஒரு அரசியல் கட்சி நமக்குத் தேவையில்லை. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப்பின் பின்னர், அந்தக்கட்சி தடம் புரண்டு தவறான பாதையிலே பயணித்ததை பொறுக்கமாட்டாதே நாம் புதிய கட்சியை ஆரம்பித்தோம். முஸ்லிம் காங்கிரஸ் தலைமையுடன் இருந்து நாம் அரசியல் செய்த காலங்களில் நாம் அனுபவத்தில் குறைந்தவர்களாக இருந்தோம். இருந்த போதும் தலைமை சமூகத்தின் தலையை தடவித்தடவி தன் காலத்தை ஓட்டியபோது “ நாம் செல்லும் பாதை சமூகத்திற்கு பயன் அளிக்காது” என்பதை பலதடவை சுட்டிக் காட்டினோம்.
செய்வோம் செய்வோம் என்று கூறி எம்மையும் தப்புக்காட்டி மக்களையும் ஏய்ப்புக்காட்டி காலத்தை அவமாக்கியதனால் தான் நாம் பிரிந்து சென்று புதுக்கட்சியை ஆரம்பித்தோம். இறைவன் அருளால் இன்று நாம் ஒரு விருட்சமாக வளர்ந்து அவர்களுக்கு சமனான சக்தியாக உயர்ந்து நிற்பதை பொறுக்கமாட்டாது எம் மீது சேற்றை வாரிப் பூசுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் நாம் முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்களுக்குக் கூட இப்போது முட்டுக்கட்டை போடுகின்றனர்.
சமுதாயம் வாழவேண்டும் சமூகத்தின் மீது நடத்தப்படும் அநியாயங்கள் அத்தனையையும் தட்டிக் கேட்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டுமென்ற இதய சுத்தியோடேயே நாம் அரசியல் நடத்துகின்றோம். எந்தக் காலத்திலும் யாருக்கும் விலை போக மாட்டோம். முள்ளந்தண்டுள்ள கட்சியாக திராணியுள்ள கட்சியாக எமது மக்கள் காங்கிரஸை நாங்கள் வழிநடாத்தி வருகின்றோம். இந்தப் பயணத்திலே நீங்களும் இணைந்து கொள்ளுங்கள் என அமைச்சர் கூறினார்.
ரிசாத் பதுர்தீன் அவர்களே, நீங்களும் ரவுப் ஹக்கீமும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். தயவு செய்து அரசியல் பிழைப்பு நடத்தும் கூட்டத்தை உருவாக்காதீர்கள். அதாவது ஹக்கீமிடம் கிடைக்காததை உங்கள் மூலம் அடைந்து கொள்வதற்கே உங்கள் கட்சியில் ஓடி வருகிறார்கள். இந்த அரசாங்கத்துடன் உங்களால் தொடர்ந்து பயணிக்க முடியாது. உங்களால் எதிர்கட்சி அரசியலும் நடாத்த முடியாது. இனிவரும் காலம் உங்களால் சேர்த்து வைத்த ( ராஜபக்ச அரசாங்கத்தில் ) அனைத்தும் கரைந்து செல்லும் காலமாகவே ( ஒரு நாலு தேர்தல் நடந்தால் உங்களிடம் உள்ள பசையின் வன்மம் குறைந்துவிடும்) இருக்கும். கொள்கை அற்ற சுயநலக் கும்பல்கள் தான் உங்களை சுற்றி இருக்கிறது. கொள்கைகள் பற்றி கதைக்கக் கூடிய ஒருவர் (YLS) இருந்தார் அவரையும் நீங்கள் கொத்தி விரட்டி விட்டீர்கள் உங்களை கேள்வி கேட்டதற்காக. இந்த அரசுடன் ஒப்பந்தம் பற்றி கதைக்கிறீர்கள் அது எவை ( YLS Hameed திடம் தான் இருக்கும் என்று நினைக்கிறோம்) என்று கூரினால் நன்றாக இருக்கும். ஹக்கீமின் தலைமைத்துவத்தில் மாற்றம் வந்தால் எதை கொண்டு மக்களிடம் அரசியல் செய்வீர்கள் என்று தெரியவில்லை. முடிந்தால் உங்கள் அரசியல் கொள்கைகளையையும் முஸ்லிம்களின் உரிமைகளையும் முன்னிறித்தி கூட்டத்தை சேருங்கள் நிட்சயம் அது நிலைத்து நிற்கும். அது முஸ்லிம் சமூகத்துக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
ReplyDelete