Header Ads



கிருலபனையிலிருந்து பந்து வீசும் மஹிந்த, காலியிலிருந்து துடுப்பாடும் மைத்திரி

-நஜீப் பின் கபூர்-

ரீ-20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் முடிந்த கையோடு தற்போது இந்தியாவில் ஐபிஎல்-20 துவங்கி இருக்கின்றது. கிரிக்கட் ரசிகர்களின் கவனம் முழுவதும் இப்போது இந்திய ஐபிஎல் பக்கம் இருக்கின்றது.

உள்ளுர் அரசியல் ஆர்வலர்கள் அனைவரினதும்  கவனம் தற்போது இங்கு நடக்கின்ற அரசியல் ஆதிக்கப் போட்டிகள் தொடர்பில் இருக்கின்றது. குறிப்பாக வருகின்ற மே தினத்தில் ஏட்டிக்குப் போட்டியாக ஏற்பாடாகிக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி மைத்திரி அணிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அணிக்கும்  இடையில் நடக்கின்ற தொழிலாளர் தினப் பேரணி விவகாரங்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

இது விடயத்தில் எமக்குக் கிடைத்துள்ள தகவல்களை இந்த வாரம் நமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று எதிர்பார்க்கின்றோம். இந்த மைத்திரி-மஹிந்த அணிகளுக்கிடையிலான அரசியல் ஆதிக்கப் போட்டியும், ஒரு கிரிக்கட் போட்டி போன்றுதான் இன்று காணப்படுகின்றது. எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் அவை குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் இரு அணிகளும் மோதுவதுதான் வழக்கம். அப்படித்தான் மோதியாகவும் வேண்டும். ஆனால் இந்த மைத்திரி - மஹிந்த அணிகளுக்கிடையிலான போட்டி சற்று வித்தியாசமானது.     கிருலபனையிலிருந்து பந்து வீசுகின்றார் மஹிந்த ராஜபக்ஷ! காலியிலிருந்து துடுப்பாடுகின்றார் ஜனாதிபதி மைத்திரி!! என்றுதான் இதனைக் குறிப்பிட வேண்டி இருக்கின்றது. 

மைதானத்தில் போட்டிகள் நடைபெறும் போது ஒரு அணி மற்ற அணியை பலயீனப்படுத்தி வெற்றி இலக்கை அடைவதுதான் வழக்கம். ஆனால் இந்த இரு அணிகளும் போட்டி துவங்க இருக்கின்ற காலத்துக்கு முன் ஒருவரை ஒருவர் பலயீனப்படுத்துவதில்தான் ஆர்வமாக இருக்கின்றார்கள்.  இந்த இரு அணிகளினதும் வெற்றி இந்த இராஜதந்திரத்தில்தான் தங்கி இருக்கின்றது. அதனைத்தான் அவர்கள் இப்போது செய்து கொண்டிருக்கின்றார்கள். எனவே இந்த இரு அணிகளின் செயல்பாடுகள் பற்றி தற்போது பார்ப்போம்.

பாம்புக்குத் தலையும் மீனுக்கு வாலும் என்று இருந்த சுதந்திரக் கட்சி மாற்று எதிரணியினர் தற்போது மைத்திரி வரைந்த கோட்டைத் தாண்டி மஹிந்த பக்கம் போய்ச் சேர்ந்து விட்டனர். என்பதனை ஹைட் பார்க் கூட்டத்தில் பார்க்க முடிந்தது. 

இந்தக் கூட்டத்துக்குப் போகின்றவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை என்ற மைத்திரி தரப்புக் கோஷம் ஒரு அரசியல் ஜோக்காக அமைந்து விட்டது. இதனால் சுதந்திரக் கட்சியில் மஹிந்த அணியினர் தற்போது உற்சாகத்துடன் அடுத்த கட்டப் பாய்ச்சலை துவக்கி இருக்கின்றார்கள்.

சுதந்திரக் கட்சி மே தினத்தை ஜனாதிபதி மைத்திரி ஒரே பேரணியாக நடத்த எடுத்த முயற்சிகள் தற்போது முற்றும் முழுதாக தோல்வியைத் தழுவி இருக்கின்றது. எனவே இப்போது சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் இரு அணிகளாக நின்று ஏட்டிக்குப் போட்டியான மே தினம் என்று அங்கு கோஷ்டி மோதல் உச்ச கட்டத்தில் களை கட்டி இருக்கின்றது.

காலியில் நடக்கின்ற மே தின ஏற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரி ஒரு ஏற்பாட்டுக் குழுவை நியமித்திருந்தார். அதில் மஹிந்தானந்த அலுத்கமகே, மற்றும் பவித்தரா வன்னியாரச்சி, குமார் வெல்கம ஆகியோரது பெயர்களும் இடம் பெற்றிருந்தது. இது தொடர்பாக மஹிந்த அணியினர் நடத்திய கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது எம்மை இப்படி நியமித்திருப்பது பற்றி எமக்கு எதுவும் தெரியாது. 

நாம் இல்லாத இடத்தில்தான் இப்படி எமது பெயர்களை அங்கு உச்சரித்திருக்கின்றார்கள். நாங்கள் அந்த ஏற்பாட்டுக் குழுவின் நடவடிக்கைகளில் ஒரு போதும் கலந்து கொள்ள மாட்டோம் என்று அவர்கள் அங்கு உறுதியளித்திருக்கின்றார்கள். இது மைத்திரி அணிக்கு இந்த ஆதிக்கப் போட்டியில் ஏற்பட்ட பின்னடைவாகும்.

காலியில் சமனல (பட்டாம் பூச்சி) மைதானத்தில் நடக்கின்ற மைத்திரி அணியின் மே தினக் கூட்டம் தொடர்பாக அண்மையில் மற்றுமோர் சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.  இதில் காலி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தொகுதி அமைப்பாளர்களும் வருகை தந்திருந்தனர். ஆனால் பெந்தர எல்பிட்டிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்ஹ அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

தென் மாகாண சபை முதல்வர் ஷான் விஜேலால் த சில்வா, தான் இந்த மே தினப் பேரணிக்கு 3000 பேரை அழைத்து வருவதாக அங்கு குறிப்பிட்டார். சர்ச்சைக்குரிய சச்சின் வாஸ்  தான் 50 பேரூந்துகளை  ஆட்களை அழைத்துவர ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார். தற்போது மஹிந்த அணியில் இருக்கின்ற ருமேஷ் பத்திரன   இந்த கூட்டத்துக்கு தானும் 15 பேரூந்துகளில் ஆட்களை அழைத்து வருவதாக அங்கு கூறினார். 

அதிகார பலத்தில் இருக்கின்றவர் என்றவகையில் சில ஆயிரம் பேரை இந்தக் கூட்டத்தில்  கலந்து கொள்ளச் செய்வதில் ஜனாதிபதி மைத்திரி அணி வெற்றி பெற முடியும். என்றாலும் இந்த பட்டாம் பூச்சி மே தினப் பேரணி எந்தளவு உணர்வுபூர்வமானதாக இருக்கும் என்று தெரியவில்லை. எத்தனை சுதந்திரக கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எதிர் கட்சி நடாத்துகின்ற கிருலபனைக் கூட்டத்திற்குப் போகின்றார்கள். என்பதும், அவர்களுக்கு கட்சி என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகின்றது என்பதனையும் தெரிந்து கொள்ள இன்னும் சில தினங்கள் காத்திருக்க வேண்டி இருக்கின்றது.

இதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சி முக்கிஸ்தரும் அமைச்சருமான வஜிர அபேவர்தன தானும் இந்த மைத்திரி அணி நடாத்துகின்ற மே தினக் கூட்டம் வெற்றி பெற தன்னால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்குவதாக வாக்குறுதி கொடுத்திருக்கின்றார்.

மிரிஹானையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ இல்லத்தில் கூட்டு எதிர்க் கட்சியினர்களின் மே தினம் தொடர்பான கூட்டம் நடைபெற்ற போது, காமிணி லொக்குகே தாம் இந்த முறை தனியாக மே தினத்தை நடாத்த வேண்டும் என்ற தீர்மானத்தை அங்கு முன் மொழிந்த போது அதற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். உண்மையான எதிர்க் கட்சியினர் நாங்கள், எனவே நாம் இந்த மே தினத்தில் எமது பலத்தை நாட்டுக்குக் காட்ட வேண்டும.; இது வருகின்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கு எமது செல்வாக்கு நிரூபிக்க உதவும் என்று அங்கு குறிப்பிட்டார்.   

கூட்டு எதிர்க் கட்சித் தலைவர் தினேஷ் குனவர்தன  முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தி இந்த மே தினத்தை எமக்கு வெற்றிகரமாக நடத்தி முடிக்கலாம் என்று கூறிய போது, இது ஒரு நல்ல ஆலோசனை  என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அந்த ஏற்பாட்டிற்கு தனது அங்கிகாரத்தை வழங்கி அவர்களை உற்சாகப் படுத்தி இருக்கின்றார். எனவே கூட்டு எதிர்க் கட்சிகளின் மே தினக் கூட்டங்கள் தற்போது முன்னாள் ஜனாதிபதி அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் நடந்து கொண்டிருக்கின்றது. எனவே இந்த மே தினக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  பங்கு கொள்வது உறுதி என்பது இதிலிருந்து தெரிகின்றது.

சுதந்திரக் கட்சியின் மைத்திரி தரப்பு மே தின ஏற்பாடுகள் தொடர்பான மற்றுமொரு கூட்டம் 18ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் கொழும்பில் நடைபெற இருக்கின்றது. அதே போன்று மஹிந்த அணியினரின் கூட்டமும் 21ம் திகதி நடைபெறுகின்றது.

கிருலபனையிலிருந்து மைத்திரிக்குப் பந்து வீசுகின்ற மஹிந்த, மைத்திரி அணியிலுள்ள எத்தனை பேரை வீழ்த்தி தனது அணியில் இணைத்துக் கொள்கின்றார் என்பதும்,  மஹிந்த வீசுகின்ற பந்துக்கு மைத்திரி எப்படி முகம் கொடுக்கப் போகின்றார்  என்பதனையும் உலகத் தொழிலாளர் தினத்தில் எமக்குப் பார்க்க கூடியதாக இருக்கும்.

காலியில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறுகின்ற கூட்டத்தில் குழப்பங்களை விளைவித்து அவருக்கு அவமானம் ஏற்படுத்துகின்ற முயற்சியில் மஹிந்த விசுவாசிகள் ஈடுபடவும் அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி இந்த முறை தனது மே தினத்தில் நான்கு இலட்சம் பேரைக் கொழும்பில் கொண்டு வந்து நிறுத்தப் போகின்றதாம்! நான்கு இலட்சம் பேராவது ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிலாளர் தினமாவது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கின்றது. ஒரு இருபத்தி ஐயாயிரம் பேரையாவது இவர்கள் மே தினத்தில் கூட்டினால் அதுவே பெரிய விடயம்.! எனவே அவர்களது நான்கு இலட்சம் பேர் என்பது ஒரு கோமாளித்தனமான கதையாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

No comments

Powered by Blogger.