Header Ads



இலங்கையரின் கறுப்புப் பணம், 3 கிரிக்கெட் வீரர்களும் அடக்கம் - புதிய பட்டியல் வெளியாகிறது

நிதி மோசடி சம்பந்தமான பனாமா பேப்பர்களில் தற்போது வெளியாகியுள்ள இலங்கையர்களின் பெயர் பட்டியல் பழையது எனவும் புதிய பெயர் பட்டியல் அடுத்த இரண்டு வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது என நம்புவதாகவும் ட்ரான்ஸ் பேரன்ஸி இன்ரநஷனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜே.சி. வெலியமுன தெரிவித்துள்ளார். 

தற்போது வெளியாகியுள்ள இலங்கையர்களின் பெயர்ப் பட்டியல் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சுவிட்சர்லாந்தில் பணத்தை வைப்புச் செய்தவர்களின் பட்டியலில் தான் அவதானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

பனாமாவில் உள்ள மோசேக் பொன்சிகா என்ற சட்ட நிதியத்துடன் இணைந்து கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றியவர்களின் பெயர்கள் அண்மையில் வெளியானதுடன் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நிதி மோசடியுடன் சம்பந்தப்பட்ட பல முக்கிய நபர்களின் பெயர்கள் அதில் வெளியிடப்பட்டன. வெளிநாடுகளில் பணத்தை முதலீடு செய்வதற்கு அப்பால் சென்று வரி ஏய்ப்பு, போதைப் பொருள் வியாபாரம் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் சம்பாதிக்கும் பணம் வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளன. 

இலங்கையில் வரி ஏய்ப்பு செய்து, வெளிநாடுகளில் வங்கி கணக்குகளில் வைப்புச் செய்துள்ள மோசடியாளர்கள் குறித்து உடனடியாக தேடி அறிய வேண்டுமென மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

பனாமாவில் மாத்திரமல்ல சீசெல்சிலும் இவ்வாறான கொடுக்கல் வாங்கல்கள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இப்படியான இரகசியமான வங்கி கணக்குகள் காரணமாக நாட்டில் பணப் புழக்கம் தடுக்கப்படுவதுடன் வரி ஏய்ப்புகளும் நடைபெறும் எனவும் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2

விளையாட்டுகளில் பணம் விளையாடுவதாலேயே ஊக்கமருந்துப் பாவனை அதிகரிப்பதாகக் கூறிய ஜே.வி.பி.எம்.பி. பிமல் ரட்நாயக்க பனாமா பண விவகாரத்தில் இலங்கை விளையாட்டு வீரர்கள் 3 பேரின் பெயர்கள் இருப்பதாக அறியவருவதாகவும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விளையாட்டுகளில் ஊக்கமருந்து பாவனை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த பிமல் ரட்நாயக்க மேலும் கூறுகையில்; விளையாட்டில் ஊக்கமருந்து பாவனை தொடர்பில் கடுமையான சட்டங்கள் தேவை. விளையாட்டுத் துறையில் தற்போது பணமும் விளையாடுவதாலேயே விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்துகளை நாடுகின்றனர். இதற்கு விளையாட்டு வீரர்களின் பொருளாதார நிலைமையும் ஒரு காரணமாகின்றது. இலங்கையில் விளையாட்டுத் துறையை தூய்மையாக்க வேண்டும். அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பனாமா பண விவகாரத்தில் இலங்கையைச் சேர்ந்த 3 விளையாட்டு வீரர்களின் பெயர்களும் இருப்பதாக அறிய வருகின்றது. கோல்டன் கீ பிரச்சினை எழுந்த போதும் அதில் விளையாட்டு வீரர்களும் தொடர்புபட்டிருந்தமை தெரியவந்தது. 

No comments

Powered by Blogger.