Header Ads



பொலிஸ் நிலையத்தில், சரியான சாவியைத் தேடி எடுத்த கொள்ளையன்

லக்கலை பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற ஆயுதக்கொள்ளை சம்பவத்துடன் குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதா? என சந்தேகம் எழுந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு தெரிவிக்கின்றது.

மேலும் பொலிஸ் நிலையத்திற்கு கடந்த நான்கு மாதங்களாக பொறுப்பதிகாரி ஒருவர் இருக்கவில்லை என்றும் பதில் பொறுப்பதிகாரியொருவரே கடமையாற்றி வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாளாந்த தேவைகளுக்காக ஆயுதங்களை எடுக்கும் ஆயுத களஞ்சியசாலையிலிருந்தே இந்த ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இங்கு 14 சாவிகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேக நபர் எவ்வாறு சரியான சாவியைத் தேடி எடுத்துள்ளார் என்பது பொலிஸார் மத்தியில் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

இவற்றினை கருத்தில் கொண்டு விசாரித்த போதே சில பொலிஸ் அதிகாரிகளுக்கும் இந்த சம்பவத்திற்கும் இடையில் தொடர்புகள் ஏதும் உள்ளனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

லக்கலை பொலிஸ் நிலையத்திற்குள் கடந்த 13ம் திகதி புதுவருட தினத்தன்று அதிகாலை 1.00 மணியளவில் வெள்ளை நிற சேர்ட் மற்றும் வேஷ்டி அணிந்திருந்த நபர ஒருவர நுழைந்துள்ளார். அங்கு உறங்கிக் கொண்டிருந்த கான்ஸ்டபிளிடமிருந்து களஞ்சியப் பெட்டியின் சாவியைத் திருடி ரி56 ரகத் துப்பாக்கி ஒன்றையும் 5 கைத்துப்பாக்கிகளையும் எடுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்தில் குறித்த நேரத்தில் கடமையிருந்த பொலிஸ் சார்ஜன்ட், பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை பொலிஸ் அதிரடிப்படையினரும் இராணுவத்தினரும் இணைந்து கொள்ளையிடப்பட்ட ஆயுதங்களை மீட்க தேடுதல் நடத்தி வந்தனர்.

இந்தத் தேடுதலின் போது லக்கலையிலிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள விகாரையொன்றின் தண்ணீர் தாங்கியின் பின்னால் ஆறு துப்பாக்கிகளும் இருப்பதாகக் கடைத்த தகவலுக்கமையவே ஆயுதங்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர். மேலும் கொள்ளையடித்தவர் இந்த ஆயுதங்களை குறித்த இடத்தில் வைத்துவிட்டு சென்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதில் பொலிஸ் மா அதிபர் எ்.எஸ்.விக்ரமசிங்கவின் கண்காணிப்பின் கீழ். குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

No comments

Powered by Blogger.