பேராசிரியர் பீரிஸை, கைதுசெய்து புனர்வாழ்வளிக்க வேண்டும் - சிறிதரன்
'ஒரு செம்பு தண்ணி கொடுத்தவர்கள், தகவல் தெரிவிக்காதவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகள் சிறைகளில் வாழ்கின்ற நிலையில், சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள், வெள்ளவத்தைக்கு கொண்டு வரப்படவிருந்ததாக முன்னரே அறிந்தும் அரசாங்கத்துக்கு தகவல் தெரிவிக்காத முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை கைது செய்து புனர்வாழ்வளிக்க வேண்டும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் வெள்ளிக்கிழமை (01) அவரிடம் கருத்துக்கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், 'ஆயுதங்கள் மீட்கப்பட்டமை ஒரு நாடகம் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிரச்சினைகள் இல்லாமல், வெடியோசைகள் இல்லாது நிம்மதியாக இருக்கின்ற எமது மக்கள் மத்தியில் பயத்தை உண்டுபண்ணவும், சமாதானம் பற்றி பேசும் நிலையில் அதனைத் திசைமாற்றுவதற்காகவும் இவ்வாறு நாடகம் ஆடப்பட்டுள்ளது. தமிழர்கள் தாங்கள் சிந்திய இரத்தத்துக்கு நியாயம் வேண்டும் என்ற அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தி கொண்டு வந்த அரசாங்கமும் மக்களை ஏமாற்றுகின்றது.
வடக்கு, கிழக்கு இணைந்த ரீதியில் தீர்வு கிடைக்கும் என்ற நோக்குடன் இருந்த மக்களை ஏமாற்றும் செயற்பாடாக சாவகச்சேரி மற்றும் மன்னாரில் ஆயுதங்கள் மீட்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. அரசாங்கம் தனது புலனாய்வாளர்களை வைத்து இந்த செய்தியை சிங்கள ஊடகங்கள் வாயிலாக சிங்கள மக்கள் மத்தியில் பெரிய பூதாகரமாகக் கொண்டு சென்றுள்ளனர். சிங்கள் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் இன்னமும் யுத்த சிந்தனையில் இருக்கின்றார்கள் என்ற மாயையை ஏற்படுத்த முயல்கின்றார்கள். இந்த ஆயுதங்களை இராணுவத்தினரும் கொண்டு வந்து வைத்திருப்பதற்கான ஆதாரங்களும் உள்ளன. முன்னாள் போராளிகள், பேரால் பாதிக்கப்பட்ட மக்கள், காணாமற்போனோரின் உறவினர்கள், சிறைகளில் உள்ள அரசியல் கைதிகள் ஆகியோர் நிம்மதியாக வாழமுடியாமல் யுத்த சூழ்நிலையில் வைத்திருப்பதற்கு அரசாங்கம் செய்யும் இந்த கபட நாடகத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இதன் வெளிப்படத்தன்மை கொண்டுவரப்பட வேண்டும்' என்று அவர் மேலும் கூறினார்.
Post a Comment