நிறைவேற்று அதிகாரங்களுடன் ரணில் - சஜித், ரவியிடமிருந்த பதவிகள் ரத்து
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஐ.தே.க.வின் செயற்குழுக் கூட்டத்தின் போது கட்சியின் பதவிகள் சிலவற்றை ரத்துச் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியாக எதிர்க்கட்சியில் இருந்த நிலையில் உருவான தலைமைத்துவப் பிரச்சினையின் போது கட்சியின் ஒற்றுமையைப் பாதுகாப்பதற்காக துணைத்தலைவர், உபதலைவர், பிரதி தேசிய அமைப்பாளர் போன்ற பதவிகள் உருவாக்கப்பட்டிருந்தன.
கட்சியின் துணைத்தலைவர் பதவி சஜித் பிரேமதாசவுக்கும், உப தலைவர் பதவி ரவி கருணாநாயக்கவுக்கும் வழங்கப்பட்டிருந்தது.
இந்தப் பதவிகளுக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வசம் இருந்த அதிகாரங்கள் சிலவும் வழங்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் ஏற்படுத்தப்பட்ட தலைமைத்துவக்குழு கட்சியின் தலைவர் ரணிலின் அதிகாரங்களில் பெரும்பகுதியை பறித்தெடுத்திருந்தது.
இதனை கேடயமாகப் பயன்படுத்தியே கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ரணில் போட்டியிடுவதினின்றும் தடுக்கப்பட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் அனைத்துத்தரப்புகளின் ஆதரவுடன் ரணில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டிருந்த நிலையில் தலைமைத்துவக்குழுவின் தலைவர் என்ற வகையில் கரு ஜயசூரியவுக்கு கொம்பு சீவும் முயற்சியில் சில தரப்புகள் ஈடுபட்டிருந்தன.
அவரை பொது வேட்பாளராக முன்னிறுத்த குறித்த தரப்புகள் முன்வந்திருந்தன. அதன் காரணமாகவே பொதுவேட்பாளராக மைத்திரியை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஆதரவு வழங்கும் நிலைக்கு ரணில் தள்ளப்பட்டிருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் மேற்குறித்த தலைமைத்துவ சபை, துணைத்தலைவர், உபதலைவர், பிரதி தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகள் ரத்துச் செய்யப்படவுள்ளன.
கட்சியின் தலைவர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மீண்டும் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், இளம் அரசியல்வாதிகள் பலருக்கு கட்சியின் இரண்டாம், மூன்றாம் நிலை அதிகாரங்கள் வழங்கப்படவுள்ளது.
இதன்போது ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, அமைச்சர் சாகல ரத்நாயக்க, தேசிய இளைஞர் சம்மேளனங்களின் தலைவர் எரந்த வெலியங்க ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் கட்சியின் தொழிற்சங்க நடவடிக்கைகளும், கிரிசாந்த குரேயிடம் ஊடகத்துறையின் பொறுப்பும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
Post a Comment