Header Ads



பொத்துவில் - சாங்காம மக்கள் பெரும் துயரில் - கவலையடைகின்றேன் என்கிறார் றிசாத்

-சுஐப் எம். காசிம்-

“ வாழ்க்கையில் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகின்றோம். குடிப்பதற்கு நீரில்லை. குளிப்பதற்கும் எந்த வசதிகளும் இல்லை. இரவு நேரங்களிலே மிருகங்களின் தொல்லைகளால் மிகவும் பீதியுடனேயே நாங்கள் காலத்தைக் கழிக்கிறோம். எங்களுக்கு உதவி செய்ய எவருமே முன்வருகிறார்கள் இல்லை. நீங்களாவது உதவி செய்வீர்களா? “ என்று சாங்காம மக்கள் அமைச்சர் றிசாத்திடம் மிகவும் கவலையுடன் வேண்டினர். 

பொத்துவில் சாங்காமத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியுதீன் தலைமையிலான அக்கட்சியின் எம்பிக்கள், கட்சிப் பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள் ஆகியோர் விஜயம் மேற்கொண்டு, அந்த மக்களை சந்தித்த போது ஆண்கள், பெண்கள், குழந்தைகளாக திரண்டிருந்த மக்களே தமது குறைகளை இவ்வாறு எடுத்துக்கூறினர். சாங்காமம் பகுதியில் மூன்றாம் கட்டை, நான்காம் கட்டை, ஐந்தாம் கட்டை ஆகிய பகுதிகளில் உள்ள மக்களே இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்   

இரவு 8.30 மணி அளவில் அங்குள்ள ஒரு கட்டிடத்தில், குப்பி லாம்பிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது. ஏக்கம் தோய்ந்த முகத்துடன் இருந்த அவர்கள், தமக்கு ஏதாவது விமோசனம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பிலேயே தமது பிரச்சினைகளையும், கஷ்டங்களையும் வெளிப்படையாக அமைச்சரிடம் தெரிவித்தனர்.

“ நாம் குடியிருக்கும் வீடுகள் அரச சார்பற்ற நிறுவனங்களினால் பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டவை. பல வீடுகளின் கூரைகள் ஓரளவு சேதம் அடைந்துவிட்டன. அநேகமான வீடுகளின் ஜன்னல்கள் உக்கி, உளுத்து, பழுதடைந்துவிட்டன. மழை காலத்தில் நாம் வீட்டில் இருப்பதற்கு பாடாய்ப் படுகின்றோம். பள்ளக் காணிகளில் எமது வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதால், சிறிய மழை பெய்தாலும் வீட்டிற்குள்ளே வெள்ளம் வருகின்றது. ஜன்னலினால் தூவானம் அடிக்கின்றது. மழை வந்தால் எமது மனங்கள் இருளடைகின்றன. எனினும் இந்த மழை நீரைச் சேமித்தே நாம் பாவனை செய்து வருகின்றோம். இங்கே கிணறுகள் இல்லை. ஆழமாகத் தோண்டினால் உப்பு நீரே வருகின்றது. நாங்கள் தோண்டி இருக்கும் குழிகளுக்குள், மழை காலத்தில் சேமிக்கப்பட்ட நீரையே குளிப்பதற்காக பயன்படுத்துகின்றோம். தொலைவில் இருக்கும் ஆறுகளுக்கும் சென்று நாம் குளிப்பதுண்டு. குடிநீரும் சிறிது தூரம் சென்றே அள்ளிக்கொண்டு வருகின்றோம். அதனைச் சேமித்து வைத்தே அன்றாடம் பாவிக்கின்றோம். 

நாம் படுகின்ற அவஸ்தைகள் சொல்ல முடியாதவை. பிள்ளைகளுக்கு முறையான கல்வி இல்லை. ஒன்பதாம் வகுப்பு வரை இங்குள்ள பாடசாலைகளில் ஆசிரியர் இல்லை. வைத்திய வசதிகள் எதுவுமில்லை. பஸ் வசதிகள் அறவே இல்லை. பிரதான வீதிக்கு நெடுந்தூரம் நடந்து சென்றே பஸ்களை பிடிக்க வேண்டும். எமது அன்றாடத் தேவைகளுக்காக நகரத்துக்கு செல்வதென்றால் நாம் படுகின்ற கஷ்டங்கள் கூற முடியாதவை. 

நான்காம் கட்டை கிராமத்தில் உள்ள மக்கள் இரவு நேரங்களில் அங்கு தங்குவதில்லை. பாம்புக்கடியும், மிருகங்களின் தொல்லையும் அங்கு அதிகம் என்பதால், மூன்றாம், ஐந்தாம் கட்டை கிராமங்களில் உள்ள தமது உறவினர்களின் வீடுகளுக்கு இரவில் வந்து தங்கிவிட்டு, காலையில் சென்று தமது வாழ்வாதாரத்தை தேடுகின்றனர். 

எமது பிரதான தொழில் விவசாயமே. வரட்சிக் காலங்களில் நாம் செய்யும் பயிர்கள் நீர் பற்றாக்குறையினால் வாடிவிடுகின்றன.” இவ்வாறு அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.

அமைச்சர் றிசாத் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,  

இந்தப் பிரதேசத்துக்கு நான் வருவது இதுவே முதற்த்தடவை. உங்களைக் காண்கின்ற போது, நான் மிகவும் கவலையடைகின்றேன். நீங்கள் படுகின்ற கஷ்டங்களை, என் சக்திக்கு உட்பட்டவரை நிறைவேற்றித் தருவேன். வெறுமனே வாக்குறுதி அளித்துவிட்டு செல்லும் நோக்கம் எனக்கில்லை. உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டங்களை தயாரிக்க நடவடிக்கை எடுப்பேன்.  குடிநீர்ப் பிரச்சினைக்குத் தற்காலிக நிவாரணம் தருவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கின்றேன். யுத்த காலத்திலும் நீங்கள் வேதனைப்பட்டு, இப்போதும் அதே போன்ற கஷ்டத்தை அனுபவிக்க இடமளிக்க மாட்டோம் என அமைச்சர் கூறினார்.   

அமைச்சர் பொத்துவில் ஆஸ்பத்திரிக்கும் விஜயம் செய்து அங்குள்ள குறைபாடுகளை அறிந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.                               

3 comments:

  1. மிகவும் நல்ல காரியம். இதை வெளிக்கொண்டுவந்த சுஐபுக்கும், Jaffna Muslim இக்கும் மிக்க நன்றி. அமைச்சர் ரிசாத் பதுர்டீனுக்கும் அவரை வழிநடத்தி சென்றவர்களுக்கும் எமது நன்றி. இந்த மக்களின் அடிப்படை வசதிகள் ( நீர், வீடு, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு) முக்கியத்துவம் கொடுத்து தீர்த்து வைக்கப்பட வேண்டும். இப்பிரதேசத்தை அண்டிய தமிழ் சகோதரர்களும் கிராமங்களும் உள்ளன, அவர்களும் கருத்தில் கொல்லப்படுவது எமது கடமையாகும். அமைச்சர்கள் ஹகீம், ஹரீஸ், பைசால் என்ன செய்கிறார்களோ தெரியவில்லை. நிட்சயமாக இந்த கிராமத்துக்கு ஒரு தரிசனம் கொடுப்பார்கள் என்று எதிர் பார்க்கிறோம்.

    ReplyDelete
  2. மிகவும் நல்ல காரியம். இதை வெளிக்கொண்டுவந்த சுஐபுக்கும், Jaffna Muslim இக்கும் மிக்க நன்றி. அமைச்சர் ரிசாத் பதுர்டீனுக்கும் அவரை வழிநடத்தி சென்றவர்களுக்கும் எமது நன்றி. இந்த மக்களின் அடிப்படை வசதிகள் ( நீர், வீடு, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு) முக்கியத்துவம் கொடுத்து தீர்த்து வைக்கப்பட வேண்டும். இப்பிரதேசத்தை அண்டிய தமிழ் சகோதரர்களும் கிராமங்களும் உள்ளன, அவர்களும் கருத்தில் கொல்லப்படுவது எமது கடமையாகும். அமைச்சர்கள் ஹகீம், ஹரீஸ், பைசால் என்ன செய்கிறார்களோ தெரியவில்லை. நிட்சயமாக இந்த கிராமத்துக்கு ஒரு தரிசனம் கொடுப்பார்கள் என்று எதிர் பார்க்கிறோம்.

    ReplyDelete
  3. Rishard is hero for East, North and other parts of the Island. Inshallah Eastern and northern people will dump Rauf incoming elections.

    ReplyDelete

Powered by Blogger.