"லால் விஜேநாயக்காவின், அதிரடி ரிப்போர்ட்"
-நஜீப் பின் கபூர்-
கடந்த 7ம் திகதி உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க அம்மையார் அவர்களின் 100 வது ஜன்ம தின நிகழ்வு ஜனாதிபதி மைத்திரி அவர்களின் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. 1978ம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன அவர்களின் அரசியல் யாப்பு கொண்டுவரப்பட்ட போது அவர் பின்வருமாறு அன்று குறிப்பிட்டிருந்தார்.
ஜே.ஆர். ஜெயவர்தன அவர்களின் இந்த அரசியல் யாப்பு எதிர் காலத்தில் இந்த நாட்டில் மிகப் பெரிய ஒரு நாசத்தை உண்டு பண்ணும். இதன் மூலம் இந்த நாட்டில் மிகப் பெரிய சர்வாதிகாரிகள் தோன்றி பெரும் அட்டகாசங்கள் நிகழும். எனவே இந்த அரசியல் யாப்புக்கு எதிராக மக்கள் அணி திரண்டு போரிட வேண்டும் என்று அவர் தீர்க்கதரிசனமாக கூறி இருந்தார் என்ற குறிப்பை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்துவது பொறுந்தும் என்று கருதுகின்றோம்.
கடந்த ஐந்தாம் திகதி யாப்புத் தொடர்பான நடவடிக்கைகளை நாடாளுமன்றம் உத்தியோகபூர்வமாக துவக்கி இருக்கின்றது. வருகின்ற திசம்பர் மாதமளவில் இந்த வேலைகளை முடித்துப் புதிய அரசியல் யாப்பை அமுல் படுத்த முடியும் என்று எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்திருக்கின்றார்.?
இந்த யாப்பு வடிவமைக்கின்ற 21பேர் அடங்கிய பாராளுமன்றக் குழுவில் விமல் வீரவன்சவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அவர் அந்தக் குழுவில் இடம் பெறுவதற்குத் தனக்கு நாட்டம் இல்லை என்று கூறி ஒதுங்கி இருக்கின்றார். எனவே அந்த இடத்திற்கு மாற்றுப் பாராளுமன்ற எதிர்க் கட்சிகளின் அழைப்பாளி பிரசன்ன ரணதுங்ஹ அவர்களின் பெயர் உள்வாங்கப்பட்டிருக்கின்றது.
அதே நேரம் சில தினங்களுக்கு முன்னர் மாற்று எதிர்க் கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தொலைக் காட்சி நிகழ்ச்சியொன்றில் இந்த அரசியல் யாப்பு வேலை மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் என்பவைகள் எல்லாம் தேலையில்லாத விடயங்கள். இதை இன்று மக்கள் எதிர்பார்க்கவில்லை. மக்களுடைய தேவைகள் இவைகள் அல்ல என்று அலட்சியமாக பேசி இருக்கின்றார். இவரை அரசியலுக்குக் கொண்டு வந்த பேராசிரியர் சரத் அமுனுகம மைத்திரி அணியில்! அவருக்கு இவர் பாதுகாப்பு இவருக்கு அவர் பாதுகாப்பு என்ற ஏற்பாடு போலும்?
யாப்பு விடயத்தில் மஹிந்த அணியினர் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதனை எதிர் வரும் நாட்களில் பார்க்க முடியும். ராஜபக்ஷ நலன்களை முன்னிருத்தி இது விவகாரத்திலும் அவர்கள் ரகலைகளைப் பண்ண நிறையவே இடமிருக்கின்றது. இவர்கள் இதய சுத்தியுடன் இந்த விடயங்களுக்கு எவ்வளவு தூரம் ஒத்துழைப்பார்கள் என்ற விடயத்தில் எமக்கு நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றன.
மறுபுறத்தில் இனவாத பௌத்த கடும் போக்காளர்கள் இந்த யாப்பில் வருகின்ற ஒவ்வொரு வார்த்தைகளையும் பிழையான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள் விமர்சிப்பார்கள். குழப்பங்களைப் பண்ணுவார்கள். எனவே இந்த யாப்பு அங்கிகாரம் பெறும் வரை பல சவால்களை எதிர் நோக்கி இருக்கின்றது என்று நாம் வழக்கம் போல் இங்கு சுட்டிக் காட்டுகின்றோம்.
பிரதமர் ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் 1972 கொல்வின் ஆர் டி சில்வா அவர்களினால் வடிவமைக்கப்பட்ட குடியரசு அரசியல் யாப்பும், 1978ம் ஆண்டு நாட்டை சிங்கப்பூராக மாற்றுதற்கு ஜே.ஆர். ஜெயவர்தன அவர்களினால் வடிவமைக்கப்பட்ட அரசியல் யாப்பும் மக்கள் கருத்துக்களுக்கு செவிமடுத்து அவர்களின் கருத்துக்களைப் பெற்று உருவாக்கப்பட்ட ஒரு யாப்பல்ல. அன்று மக்கள் அப்படி எதிர்பார்க்கவுமில்லை. இப்போது எல்லாவற்றிலும் மக்கள் கேள்வி கேட்கின்ற நிலை வந்திருக்கின்றது. மறு புறத்தில் அரசு துணிந்து ஒரு யாப்பை மக்கள் முன்வைப்பது ஆபத்தான காரியம் என்று பார்க்கின்றது. எனவே நன்மையையும் தீமையையும் எல்லோரும் பங்கிட்டுக் கொள்வோம் என்ற பாதுகாப்பு உத்தியில் அரசு காய் நகர்த்துகின்றது என்பது கட்டுரையாளன் போடும் கணக்கு!
இப்போது நமது கதையின் நாயகன் லால் விஜேநாயக்க அவர்களின் விவகாரத்துக்கு வருவோம்.
இந்த யாப்பு வடிவமைக்கின்ற குழுவில் மக்கள் கருத்துக் கேட்கின்ற குழுவுக்கு என்னைத் தலைவராக தெரிவு செய்யும் வரை அது பற்றி நான் எதுவும் அறிந்திருக்கிவில்லை. அப்படி ஒரு எதிர்பார்ப்பும் என்னிடத்தில் இருக்கவுமில்லை. என்னை இந்த பதவிக்கு யார் சிபார்சு பண்ணினார்கள் என்று இன்றுவரை நான் தேடிப்பார்க்கவுமில்லை. அப்படி ஒரு அவசியமும் எனக்கில்லை. நாட்டுக்கு பெரும் சாபக்கேடாக இருக்கின்ற 1978-ஜே.ஆர். யாப்பு மாற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்களில் நானும் ஒருவன்.
எனது நியமனம் பற்றியும் அடுத்த உறுப்பினர்கள் நியமனம் பற்றிய கடிதங்களும் வந்து சேர்ந்து இருந்தன. கடிதங்கள் கிடைத்ததும் இது விடயத்தில் இதயசுத்தியுடன் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அதற்குப் பின்னர் இது பற்றி எவரும் என்னுடன் பேசவில்லை. என்றாலும் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்களில் 2016 மார்ச் 31ம் திகதிக்கு முன்னர் மக்கள் கருத்துக் கோறும் அனைத்து விடயங்களும் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று கடிதத்தில் ஓர் இடத்தில் சொல்லப்பட்டிருந்தது.
இந்தப் பின்னணியில் நான் பிரதமரின் செயலாளரைச் சந்தித்து உங்கள் கடிதங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. இது விடயத்தில் நீங்கள் எம்மிடமிருந்து எதை எதிர்பார்க்கின்றீர்கள் என்று நான் அவரிடத்தில் கேள்வி எழுப்பினேன். எனது பேச்சை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வில்லை. அவசரப்பட வேண்டாம்;. மெதுவாகப் பார்ப்போம் என்பது அவர் எனக்குக் கொடுத்த பதிலாக இருந்தது.
எங்களை ஒரு பதவிக்கு நியமித்து விட்டு அதற்கான கால எல்லையும் நிர்ணயம் நீங்களே செய்துவிட்டு, மெதுவாக போகும் படி கூறுவதை எங்களால் புரிந்து கொள்ளமுடியாது. எனவே இது பற்றி தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று நான் அவரிடத்தில் குறிப்பிட்டேன். இந்த யாப்புத் தொடர்பான மக்கள் கருத்துக் கோறும் விடயத்தில் அவரிடத்தில் தெளிவு இருக்கவில்லை.
பொறுப்பான ஒரு பதவி என்று தந்திருக்கின்றார்கள். இதனைச் செய்து முடிப்பதாக இருந்தால் கொழும்பில் பல நாட்கள் தங்கி இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது என்பது எல்லோருக்கும் புரியும். எனக்கு கொழும்பில் தங்கி இருக்க ஒரு இடம் இருக்க வில்லை!
செயலாளரைச் சந்தித்து விட்டு நான் திரும்பக் கண்டிக்குப் போய், மீண்டும் அடுத்த நாளே கொழும்பிற்கு வந்தேன். அப்போது என்னை இது விடயமாக சரித்த ரத்வத்தையைச் சந்திக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது. அவரைச் சந்தித்த நான் இந்தக் காரியத்தை உறுப்படியாகச் செய்வதாக இருந்தால் எமக்கு சில வசதிகளைச் செய்து தரவேண்டும் என்று கேட்டேன்.
இதனை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இதனை ஒரு முறையாக செய்ய வேண்டும். என்று நான் அவர்களிடத்தில் நேரடியாகவே கூறினேன். இதனை முறையாகச் செய்ய வேண்டும் என்ற தேவை அரசுக்கு இல்லை என்பது எனக்குப் புரிகின்றது. அவர்களுடைய எதிர் பார்ப்பு வெறுமனே பத்திரிகைகளுக்கு ஒரு விளம்பரத்தைக் கொடுத்து மக்களுடைய கருத்தைப் பெற்றுக் கொண்டால் போதும் என்பது அவர்கள் நிலைப்பாடு.
எங்களுக்குத் தேவைப்பட்டது இதனை நல்ல முறையில் செய்வதாக இருந்தால் நாடு பூராவிலும் போய் மக்கள் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது. இப்படி நாங்கள் கூறியபோது ஒரு நான்கு ஐந்து மாவட்டங்களில் மட்டும் கருத்தைப் பெற்றுக் கொண்டால் போதாதா என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டார்கள்.
எங்கள் குழுவில் 20 பேர் இருந்தார்கள். அவர்களுக்கு இந்தப் பணிக்காக எந்தக் கொடுப்பணவுகளும் வழங்கப்படுவது கிடையாது. தங்களுடைய சொந்தப் பணத்தை செலவு செய்து கொண்டு முழு நாட்டுக்கும் போய் இந்தப் பணிகளை மேற் கொள்வது என்பது நடை முறைச் சாத்தியம் இல்லாத விடயம். இது பற்றிக் கூறிய போது போக்கு வரத்து, தங்குமிட வசதியை செய்து தருவதற்கு அரசு இணங்கியது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக எங்களுக்கு செயல்படுவதற்கு ஒரு காரியாலயம் கூட இருக்க வில்லை-தரப்பட வில்லை இது பற்றிக் கேட்ட போது 'விசும்பாயவை' எங்களுக்குக் கொடுத்தார்கள். என்றாலும் அது பயன் படுத்தும் நிலையில் இருக்கவில்லை. பின்னர் அதனை ஒருவாராக ஒழுங்கு படுத்தித் தந்தார்கள்.
எமது உறுப்பினர்கள் இருபது பேருக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருந்தது. எம்மில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ஆறு பேர் இருந்தார்கள். இந்த வேலையைச் செய்வதற்காக அவர்கள் சொந்த லீவில் வர வேண்டி இருந்தது. எனவே நாங்களே முயன்று அவர்களுக்குத் தேவையான லீவை பெற்றுக் கொடுத்தோம்.
என்னையும் சேர்த்து இந்தக் குழுவில் சட்டத்தரணிகள் ஏழு பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் போல் சிரேஷ்ட சட்டத்தரணிகள் அவர்கள் தமது வழக்கமான நீதிமன்றப் பணிகளுக்குப் போக வேண்டி இருந்தது. எனவே அவர்களுடைய வழக்குகளுக்கு திகதியை மாற்றிப் பெற்றுக் கொள்ள வேண்டிய விடயங்களை நாமே செய்து கொள்ள வேண்டி இருந்தது. இன்னும் பல அரசாங்க ஊழியர்கள் எம்மில் இருந்தார்கள். அவர்களது தேவைகளையும் பிரச்சினைகளையும் நாமே பார்க்க வேண்டி இருந்தது.
இந்தப் பின்னணியில்தான் வேலைகளை நாம் ஆரம்பித்தோம். கணணிகள் போட்டோ கொப்பி இயந்திரங்கள் எமது தேவைக்குப் போதுமானவாறு கிடைக்காததால் அங்கும் இங்கும் சென்று இந்தப் பணிகளை செய்ய வேண்டி இருந்தது. இதனை எங்களுடைய சொந்த வேலையைப்போல் நாங்கள் செய்ய வேண்டி இருந்தது. இதய சுத்தியுடன் நாங்கள் இந்தப் பணிகளில் ஈடுபட்டோம். இவ்வாறு பல சவால்களுக்கு மத்தியில்தான் எமது இந்தப் பணிகள் நடந்திருக்கின்றது.
அண்மையில் பிரதமர் என்னிடத்தில் இப்படி ஒரு விடயத்தைச் சொன்னார். எங்களை இந்தப் பணிக்கு நியமிப்பதற்கு முன்னர் இது போன்று ஆறு ஆணைக்குழுக்களை நாம் நியமித்திருந்தோம். அதில் ஒன்று கூட தமது பணியை இன்னும் ஆரம்பிக்க வில்லை என்று!
இப்போது எமது மக்கள் கருத்துப் பெறும் பணிகள் நிறைவுக் கட்டத்தில் இருக்கின்றது. எனவே நாமே முன்னின்று ஆர்வமாக இருந்தால் எந்தப் பணிகளையும் நிறைவு செய்யலாம்.
வாசகர்களே புரிகின்றதா ஒரு பொறுப்பான விடயத்தில் அதன் அந்தரங்கப் பக்கம் எப்படி இருக்கின்றது என்பது. எனவே இப்படித்தான் நமது நாடு நகர்ந்து கொண்டிருக்கின்றது. எனவே எமது எதிர்பார்ப்புக்கள் நமது சந்ததியினர் எதிர்காலம் எல்லாம் எப்படி அமையும் என்பதை அரச செயல்பாடுகளில் பார்க்க முடிகின்றது.
இந்த சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க ஒரு இடதுசாரி எனவே துணிந்து வாக்குமூலம் கொடுத்துப் பேசி இருக்கின்றார். எல்லோரும் இப்படி நடந்து கொள்ள மாட்டார்கள். எனவே மக்களது எதிர்பார்ப்புக்கள் விடயத்தில் அரசு எந்தளவு கரிசனையுடன் செயல்பட்டிருக்கின்றது என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே! -நன்றி லால் விஜேநாயக்க
Post a Comment