சிங்கப்பூரைப் பின்பற்றவுள்ள சிறிலங்கா
தற்போது சிறிலங்கா தூதரகங்கள் இல்லாத வெளிநாடுகளுக்கு, நிரந்தர வதிவிடமற்ற தூதுவர்களை நியமிக்கும் திட்டம் ஒன்றை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு செயற்படுத்தவுள்ளது.
வெளிவிவகார அமைச்சை மறுசீரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, கொழும்பில் இருந்து செயற்படத்தக்க தூதுவர்களை சிறிலங்கா அரசாங்கம் நியமிக்கவுள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நியமிக்கப்படவுள்ள தூதுவர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர்களில் சிலர் நிதி வசதியுள்ளவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் வெளிவிவகார அமைச்சில் இவர்கள் பணியகம் ஒன்றைக் கொண்டிருப்பர். குறிப்பிட்ட நாட்டுக்கு ஆண்டுக்கு குறைந்தது இரண்டு தடவைகள் பயணம் மேற்கொள்வர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த திட்டத்து ஆதரவு தெரிவித்திருப்பதாகவும், இதே நடைமுறை சிங்கப்பூரில் பின்பற்றப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். சிறிலங்காவுக்கான சிங்கப்பூர் தூதுவர் அங்கிருந்தே செயற்படுகிறார் என்பதையும் அவர் உதாரணத்துக்கு எடுத்துக் காட்டினார்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கே இவ்வாறான தூதுவர்களை நியமிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்னுரிமை கொடுத்துள்ளது.
இவ்வாறான நடைமுறையின் மூலம், குறிப்பிட்ட நாடுகளில் தூதரகங்களை அமைத்துச் செயற்படுவதற்கான செலவினங்களைக் குறைத்துக் கொள்ள முடியும் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment