கிழக்கில் தமிழ் - முஸ்லிம் விரிசல் ஏற்படும் நிலை - விஜித ஹேரத்
வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களை அடையாளப்படுத்துவதற்கான காலத்தை இரண்டு வருடங்களாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நேற்று -06- சபையில் தனது இணக்கத்தை தெரிவித்தது.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷவினால் முன்வைக்கப்பட்ட ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலத்தின் இரண்டாம், மதிப்பீடு மீதான விவாதத்தின் போது ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உரையாற்றினார்.
இதன்போது, இச் சட்ட மூலத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ள வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்தக் காணிகளை அடையாளப்படுத்துவதற்காக ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அக்கால அவகாசம் போதுமானதல்ல. எனவே அதனை இரண்டு வருடங்களாக அதிகரிக்க வேண்டும். அதற்கான திருத்தத்தை உள்ளீர்க்க வேண்டுமெனத் தெரிவித்தார்.
இதற்கு சபையில் பதிலளித்த போதே அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ தமது சொந்தக் காணிகளை அடையாளப்படுத்துவதற்கான காலத்தை இரண்டு வருடமாக அதிகரிக்கும் திருத்தத்தை அரசு ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
இவ் விவாதத்தில் தொடர்ந்து உரையாற்றிய ஜே.வி.பி. எம்பி. விஜித ஹேரத்
வடக்கு மக்களின் காணியில் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அரசின் நடவடிக்கைகளை வரவேற்கின்றோம். 30 வருட காலயுத்தத்தால் வடக்கில் தமிழ் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். இடம்பெயர்ந்து பல பிரதேசங்களில் வாழ்ந்தனர். பலர் இந்தியாவிற்கும் சென்றுள்ளனர்.
இன்று யுத்தம் முடிந்த பின்னர் அவர்கள் வாழ்ந்த இடங்களில், வீடுகளில் வேறு குடும்பங்கள் வாழ்கின்றார்கள். எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். அவர்களது சொந்த இடங்களை அடையாளப்படுத்துவதற்காக இச் சட்டமூலத்தில் ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது வசதிபடைத்தோருக்கு பிரச்சினையாக இருக்காது.
ஆனால் வசதி குறைந்த நடுத்தர மக்களுக்கு இக்கால அவகாசம் போதாது. எனவே அக்கால அவகாசம் இரண்டு வருடங்களாக அதிகரிக்கப்பட வேண்டும். வடக்கைப் போன்று கிழக்கிலும் காணிப் பிரச்சினைகள் உள்ளன.
கிழக்கின் பிரச்சினை தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் விரிசலை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. அங்கு பெரும்பாலான தமிழ் மக்களின் காணிகள், கருணா குழுவினரும் இனியபாரதி போன்ற தமிழ் குழுக்களினால் பறிக்கப்பட்டன. யுத்த காலத்தில் இக் குழுக்கள் தமிழ் மக்களின் காணிகளை பறிமுதல் செய்தனர்.
எனவே இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வுகள் காணப்பட வேண்டும். இது புரையோடிப்போனால் மீண்டும் இனங்களுக்கிடையில் மோதல்கள் தலைதூக்க இடமுள்ளது. யுத்தம் முடிந்த பின்னர் அதேபோன்று கடந்த ஆட்சியாளர்கள் தெற்கிலிருந்து சிங்கள மக்களை கொண்டு வந்து வடக்கின் போகஸ்வெவ பகுதியில் குடியேற்றினர்.
இதன் போது அவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்கப்படும். சட்டபூர்வமான காணி உரிமை வழங்கப்படுமென கடந்த ஆட்சியாளர்கள் உறுதியளித்தனர். ஆனால் இன்றும் 5 வருடங்கள் கழிந்தும் அம்மக்களுக்கு தாம் வாழும் காணிக்கு சட்ட உரிமை கிடைக்கவில்லை.
இதேபோன்று கொக்கிளாய், நாவற்குழி பிரதேசங்களிலும் 40 வருடங்களுக்கு மேலாக சிங்கள மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கும் இன்று வரை தமது காணிகளுக்கு சட்ட பூர்வமான அந்தஸ்து கிடைக்கவில்லை.
இவை தொடர்பில் அரசு அதிக கவனம் செலுத்தி தீர்வுகளை காண வேண்டும் இல்லா விட்டால் நாட்டில் மீண்டும் இனங்களுக்கிடையே முரண்பாடுகள் தலைதூக்கும் என்றும் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்தார். s
Post a Comment