"நான் செல்லும் பஸ், இந்த வழியில் வருமா..?
ஜெர்மனியில் உள்ள முதியோர் இல்லங்களில், அல்சைமர் நோயாளிகளுக்கான போலி பஸ் நிறுத்தங்களை அமைத்துள்ளனர். அங்குள்ள முதியவர்கள் தங்கள் அறைகளை விட்டு வெளியே வந்து பஸ் நிறுத்தங்களில் காத்திருப்பது போலவும், அங்கு வரும் பஸ்களில் அவர்கள் பயணம் செய்வது போலவும் ஒரு மாயையான தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.
ஹேம்பர்க் ரிடையர்டு ஹோமின் இயக்குனர் சைமன்முரா தங்களுடைய புதிய முயற்சி பற்றி சொல்லும்போது, “ரிடையர்டு ஹோமில் தங்கியுள்ள முதியோர்கள் நாள் முழுவதும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளிலேயே முடங்கி இருப்பதால் விரக்தியான மனநிலையில் இருப்பார்கள். வெளியே செல்ல ஏங்குவார்கள். அல்சைமர் என்னும் மறதிநோய் உள்ளவர்களை தனியே வெளியே அனுப்ப முடியாது. வழிதவறி செல்ல வாய்ப்பிருப்பதால், உள்ளே இருக்கும் பூங்காக்களில் இதுபோன்ற போலி பஸ் நிறுத்தங்களை நிறுவி உள்ளோம்.
இந்த பஸ் நிறுத்தத்தில் மணிக்கணக்காக அமர்ந்திருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே தாங்கள் வசித்த அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து ஹோமிற்கு வந்துவிட்டதை அறியாமல், `நான் செல்லும் பஸ் இந்த வழியில் வருமா?’ என்று வராத பஸ்களுக்காக காத்திருக்கிறார்கள். பின்னர் பஸ் வரவில்லை என்றால், தான் வழிமாறி வந்துவிட்டதாகவும் அல்லது தன்னை அந்த பஸ் பிக்அப் செய்து கொள்ளவில்லை என்றும் கற்பனை செய்து கொள்கிறார்கள்.
சில நிமிடங்களிலேயே தான் எதற்காக அங்கு நிற்கிறோம் என்று மறந்தும் விடுகிறார்கள். அறையை விட்டு வெளியில் வரும் இவர்கள் சுதந்திர உணர்வைப் பெறுகிறார்கள். தாங்கள் செல்ல நினைக்கும் இடங்களுக்கு சென்று வந்ததைப் போன்ற மனதிருப்தி கிடைப்பதால் அவர்கள் மனம் அமைதியாகிறது. அல்சைமர் நோயாளிகளுக்கு இதைப்போன்ற அணுகுமுறை ஒரு நல்ல மனமாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் நோயாளிகளின் உறவினர்களும் இதை மகிழ்ச்சியோடு ஆதரிக்கின்றனர்.
வரும் நாட்களில் திறந்தவெளிகளில் கூரை அமைத்து அதைவிட்டு வெளியே சென்று மழையில் நனைவதைப் போன்ற பஸ் நிறுத்தங்களை ஏற்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறோம். மழையில் நனைவதால் மேலும் சந்தோஷம் அடைவார்கள்” என்கிறார். மற்றொரு இல்லத்தின் உரிமையாளரான ரெம்ஷெட், இதே திட்டத்தை நாங்கள் 30 வருடங்களுக்கு முன்பு இருந்ததைப் போல் பேருந்துகளின் கால அட்டவணை, விளம்பரப் பலகை போன்றவற்றை நிறுவி தத்ரூபமாக ஒரு பஸ் நிறுத்தத்தை நிறுவியிருக்கிறோம். இதனால் நோயாளிகளை அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு கொண்டு சென்று அவர்களுடைய நீண்டகால நினைவை மீட்டெடுக்க முடியும்” என்கிறார்.
Post a Comment