Header Ads



ரணில் அரசாங்கத்தையும், கவிழ்க்குமா இந்தியா..?

இந்த சமிக்கையானது  மைத்திரி-ரணில் அரசாங்கத்தால் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டமானது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாது என்பதைக் குறித்து நிற்கிறது.

இவ்வாறு சிலுான் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

சீனாவிற்கான ரணிலின் பயணம் தொடர்பாக இந்தியா அமைதி காத்து வருகிறது. இந்த அமைதிக்குப் பின்னான இரகசியம் என்ன என்பது இந்தியாவிற்கு மட்டுமே தெரியும்.

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை நிறுத்துமாறு இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தன்னிடம் தெரிவித்ததாக, மகிந்தவின் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, அவரது சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய தெரிவித்திருந்தார். இத்திட்டத்தை இடைநிறுத்துமாறு இந்தியாவால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இத்தீர்மானத்தை தனது சகோதரரின் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள மறுத்தமையாலேயே இந்தியாவுடன் முரண்பாடு ஏற்பட்டதாக கோத்தபாய தெரிவித்தார்.

கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்துமாறு கோத்தபாயவிடம் டோவல் தெரிவித்திருந்தால், இதேவிடயத்தை இந்தியாவானது மைத்திரியிடமோ அல்லது ரணிலிடமோ கூறாமல் விடுவதற்கு எவ்வித காரணமும் இல்லை. எனினும், மைத்திரி மற்றும் ரணிலின் இந்தியப் பயணத்தின் போது, கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தைத் தொடர்வதற்கான அனுமதியை இந்தியா வழங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், காலிமுகத்திடலில் இடம்பெறும் கொழும்பு துறைமுக நகரத்திட்டத்தைச் சூழவுள்ள பிரதேசத்தை பரமாரிப்பதற்கான ஒப்பந்தமானது கிங்ஸ்பெரி விடுதியிடம் கையளிக்கப்பட்டது. இப்பராமரிப்புப் பணியைப் பிறிதொரு நிறுவனத்திடம் ஒப்படைக்க விரும்புவதாக அண்மையில் கிங்ஸ்பெரி விடுதி அறிவித்த போது, இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதற்கான தனது விருப்பத்தை இந்திய எண்ணெய் நிறுவனம் (IOC) வெளிப்படுத்தியிருந்தது.

திருகோணமலையில் எரிபொருள் தாங்கிகளை சீரமைக்கும் திட்டத்திற்கு இந்திய எண்ணெய் நிறுவனமே பொறுப்பாக உள்ளது. இதேவேளையில், இந்த நிறுவனமானது திருகோணமலைத் துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்கும் பொறுப்பாக உள்ளது. இந்நிலையில் இந்நிறுவனமானது சீனத் துறைமுகத் திட்டத்திற்கு அருகிலுள்ள வளாகத்தைக் பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவது தொடர்பாக சீனா எவ்வாறான கருத்தைக் கொண்டுள்ளது என்பது எமக்குத் தெரியாது. இதனை இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் கையளிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கமானது தனது ஒப்புதலை இன்னமும் தெரிவிக்கவில்லை.

சீனாவிற்கான ரணிலின் பயணம் தொடர்பாகவும், சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் சீனாவின் துறைமுகத் திட்டம் மற்றும் இதற்கு அருகிலுள்ள வளாகத்தை இந்திய எண்ணெய் நிறுவனம் பொறுப்பெடுத்தல் போன்றன தொடர்பாக இந்தியா அமைதி பேணுவதன் பின்னால் இரகசியம் ஒன்று புதைந்துள்ளது. மகிந்தவின் ஆட்சிக்காலத்தில், அம்பாந்தோட்டைக்கு அருகில் இந்தியத் துணைத்தூதரகத்தை அமைப்பதற்கு இந்தியா விரும்பியது. சீனாவின் துறைமுக நகரத் திட்டமானது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்காது என ரணில் இந்தியாவிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், சீனாவிற்கான ரணிலின் பயணம் தொடர்பான நிகழ்ச்சி நிரலை இந்தியா மிகவும் உற்றுநோக்கியது. ஆனால் இது தொடர்பாக ரணில் விழிப்புடன் இருந்தாரா என்பது தெரியவில்லை. சீனாவிற்கான தனது பயணத்தின் நிகழ்ச்சி நிரலை தனது அலரி மாளிகையிலிருந்து வெளியுறவுச் செயலகம் வரை ரணில் கவனமாகத்  தயாரித்திருந்தார். இந்த நிகழ்ச்சி நிரலானது மிகவும் இரகசியமாக அலரிமாளிகையில் வைத்துத் தயாரிக்கப்பட்டது. ஆகவே, இது தொடர்பான தகவலைப் பெற்றுக் கொள்வது மிகக் கடினமானது என்பதை இந்தியா கண்டறிந்தது.

ரணில் சீனாவிற்குச் சென்ற போது, சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்த ஜேர்மனிய நாடாளுமன்ற பிரதிநிதிகள் அடங்கிய குழுவினை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடினார். குறித்த ஒரு நாட்டுடனான உறவுநிலையைக் கருத்திற் கொண்டு அந்நாட்டின் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் சிறிலங்கா மேற்கொள்ளாது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இந்தச் செய்தியை மைத்திரி இந்தியாவிற்கே வழங்கியிருந்தார்.

சிறிலங்காவில் சீனாவின் செயற்பாடுகள் என்ன என்பதை அறிவதில் ஜேர்மனி ஆர்வங் காண்பிக்கும் ஒரு நாடாகும். மைத்திரி ஜேர்மனிக்குப் பயணம் செய்த போது, ஜேர்மனிய அதிபர் ஏஞ்சலா மார்க்கல், சிறிலங்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான உறவுநிலை குறித்துக் கலந்துரையாடுவதில் ஆர்வங் காண்பித்தார். மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் சீனாவுடனான சிறிலங்காவின் உறவு தொடர்பாக ஜேர்மனி அதிருப்தி அடைந்தததாக இந்நாட்டு அதிபர் மைத்திரியிடம் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் மைத்திரி-ரணில் அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவின என்பது வெளிப்படையான உண்மையாகும். சீனாவின் செல்வாக்கிற்கு சிறிலங்கா உட்பட்டிருந்ததே இதற்கான மிக முக்கிய காரணமாகும். எனினும், இந்த நாடுகள் சீனாவுடனான மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக எவ்வாறு ஆராய்வார்கள் என்பது எமக்குத் தெரியாது.

பண்டாரநாயக்காக்கள்   இந்தியாவுடன் நெருங்கிய நட்புறவைப் பேணினார்கள். எனினும், 1962ல், இந்திய-சீன யுத்தத்தின் போது, இந்த யுத்தத்தை நிறுத்துவதற்கான ஒரு அனுசரணையாளராக சிறிமாவோ செயற்பட்டார். ஆனால் இவர் சீனாவிற்கு ஆதரவாகச் செயற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இந்திய-சீன யுத்தம் இடம்பெற்றால், திருகோணமலைத் துறைமுகத்தை சீனாவிடம் கையளிப்பது தொடர்பான ஒரு இரகசிய உடன்பாடும் சிறிமாவோவால் எட்டப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டது.

1964ல், சிறிமாவோவைப் பதவி நீக்கம் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு இந்தியா உதவியாகக் கூறப்படுகிறது. சிறிமாவோ அரசாங்கத்தின் சீன ஆதரவு நிலைப்பாடே இதற்குக் காரணமாகும். 1970ல், சிறிமாவோ மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, 1971ல் இடம்பெற்ற ஜே.வி.பி கிளர்ச்சிக்கு துணைபோனதாக குற்றம் சுமத்தப்பட்டது. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியுடன் சிறிமாவோ நெருங்கிய உறவைப் பேணிய போதிலும், இந்திய – பாகிஸ்தானிய யுத்தத்தின் போது பாகிஸ்தானிய விமானமானது சிறிலங்காவில் தரித்து நின்று எரிபொருள் நிரப்புவதற்கு சிறிமாவோ அனுமதி வழங்கியிருந்தார். எனினும், இந்தியா சிறிமாவுடனான உறவை முறிக்கவில்லை.

சீனாவிற்கான ரணிலின் பயணத்தின் போது, இந்தியாவிற்கு சந்தோசமளிக்கும் செய்தியை சீன ஊடகங்கள் வெளியிட்டன. சீனப் பட்டுப்பாதைத் துறைமுகத் திட்டம் அமுல்படுத்தப்படும் இந்தவேளையில், சீனாவானது பாகிஸ்தானிய துறைமுகங்கள் மீதோ அல்லது பாகிஸ்தான் மீது தங்கியிருக்காது என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பாகிஸ்தானில் தோன்றியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலே இதற்குக் காரணம் எனவும் சீன ஊடகங்கள் சுட்டிக்காட்டின. இது இந்தியாவிற்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதற்கு கொழும்புத் துறைமுக நகரம் தளமாக அமையும் என்பதன் காரணமாகவே இத்திட்டம் தொடர்பாக இந்தியா அச்சமடைந்தது. பாகிஸ்தான் பாதுகாப்பற்ற ஒரு நாடு என்பதை சீனா தெரிவித்ததானது இந்தியாவிற்கு வழங்கப்பட்ட ஒரு சமிக்கையாகும். அதாவது இந்த சமிக்கையானது  மைத்திரி-ரணில் அரசாங்கத்தால் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டமானது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாது என்பதைக் குறித்து நிற்கிறது.

சீனாவின் இந்த சமிக்கைகளை எவ்வாறு இந்தியா ஏற்றுக்கொள்ளும்? மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்குப் பாடத்தைப் புகட்டுவதற்காக ராஜபக்சவுடன் இந்தியாவானது தனது உறவைப் புதுப்பித்துக் கொள்ளுமா என்பதைத் தற்போது கூறமுடியாது.

No comments

Powered by Blogger.