கொலை அச்சுறுத்தல் விடுத்த எம்.பி.க்களை, மறக்கத்துடிக்கும் கரு
தனக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது தொடர்பான விசாரணையில் சாட்சியமளிக்க நேரிட்டால் சக பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடவேண்டி ஏற்படும். அதனால் இந்த சம்பவத்தை தான் மறந்துவிடத் தயாராக இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்த வாசுதேவ நாணயக்கார எம்பி, சபாநாயகருக்கு தொலைபேசி மூலம் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் பற்றிய விசாரணை குறித்து கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்தபோதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கொலை அச்சுறுத்தல் தொடர்பான விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவந்து அது தொடர்பான முழுவிபரங்களை பாராளுமன்றத்துக்கு அறிவிக்குமாறு வாசுதேவ நாணயக்கார சபாநாயகரிடம் கோரினார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர், பொலிஸார் இது தொடர்பில் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனது தரப்பு தகவல்களை நான் இன்னும் வழங்கவில்லை.
அவ்வாறு வழங்குவதானால் இங்கு சபைக்குள் நடந்தவைகளையும் கூறவேண்டியிருக்கும். இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பதற்கு ஏதுவான அடிப்படைக் காரணங்களையும் வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.
இதன்போது சக பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை குறிப்பிடவேண்டியும் ஏற்படும். அவர்களை சங்கடத்துக்கு உட்படுத்த நான் விரும்பவில்லை.
எனவே இந்த விவகாரத்தை இத்தோடு மறந்துவிட எனக்கு முடியும் என்றார். தான் ஒருபோதும் எம்பிக்கள் மீது குற்றஞ்சுமத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment