Header Ads



மைத்திரி கவலைக்கிடம், காத்திருக்கும் மகிந்த, அக்கறையற்ற ரணில், எச்சரிக்கும் அநுரகுமார

-நஜீப் பின் கபூர்-

இந்த நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து ஏறக்குறைய 15 மாதங்கள் ஆகின்றன. பொதுத் தேர்தல் முடிந்து 10 மாதங்கள் ஆகின்றன. முதலாவது தேர்தலில் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வரமுயன்ற மஹிந்த ராஜபக்ஷ தோற்றுப் போனார். அதன் பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் பிரதமராக வர முயன்று அதிலும் அவர் பட்டுப் போனார். என்றாலும் ஆட்சி அதிகாரத்தைக் கைபற்றும் அவரது முயற்சிகள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்பதற்கு, தற்போது அவர் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளில் இருந்து தெளிவாகத் தெரிகின்றது.

ராஜபக்ஷ அணியிலுள்ளவர்கள் சொல்லுகின்ற படி இன்னும் ஆறு மாதங்களுக்குள் எமக்கு இந்த அரசைக் கவிழ்த்து விட முடியும் என்பது அவர்களது நம்பிக்கையாக இருந்து வருகின்றது. இதற்கிடையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் அராஜகமாக நடந்து கொள்கின்றது. உண்மையான எதிர்க் கட்சியான எங்களை அவர்கள் நிராகரிக்கின்றார்கள். எதிர்க் கட்சி அரசியல்வாதிகளை எல்லாம் குற்றவாளிகள் என்று கூறிக் கைது செய்கின்றார்கள்-அச்சுறுத்துகின்றார்கள், 

இப்படி ஒரு முறைப்பாட்டை இன்று அவர்கள் ஜெனிவாவில் அமைந்துள்ள சர்வதேச பாராளுமன்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கின்றார்கள் மஹிந்த அணியினர். இந்த அணியிலுள்ள விமல் வீரவன்ச போன்றவர்கள் இந்த ஜெனீவாவை கடுமையாக அண்மைக்காலம் வரை எதிர்த்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

நுகேகொடையில் துவங்கிய ராஜபக்ஷக்களின் எழுச்சிக் கூட்டம், ஹைட்பார்க் என்று போய் அடுத்த கூட்டம் பேருவளை என்று இருக்கின்றது. இந்தக் கூட்டத்தை பேருவளையில் நடத்துவதற்கு முக்கிய காரணம் அந்தக் கூட்டத்திற்கு பெரும் தொகையான முஸ்லிம்களைப் பங்கு கொள்ளச் செய்வதாகும்! இப்போது முஸ்லிம்களும் எல்லாவற்றையும் மறந்து ராஜபக்ஷக்களை ஆதரிக்கத் துவங்கி இருக்கின்றார்கள் என்று நாட்டுக்கும் உலகிற்கும் காட்டுவதற்கே அவர்கள் தமது அடுத்த கூட்டத்திற்கு பேருவளையைத் தெரிவு செய்ததற்கு முக்கிய காரணம். 

இதற்குப் பெரும் தொகையாக முஸ்லிம்களை அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கிடையில் அண்மையில் நடந்த முஸ்லிம்களுடனான ஒரு சந்திப்பில் பொது பலசேனாவே மஹிந்தவை முஸ்லிம்களிடமிருந்து அண்ணியப்படுத்தியது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபே ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்! இதே பாணியில் தற்போது முஸ்லிம்களைச் சந்திக்கின்ற நடவடிக்கைகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றார்கள் என்பதனை அவதானிக்க முடிகின்றது.

தற்போது மஹிந்த அணியினர் புதியதோர் அரசியல் கட்சி பற்றித் தினம் தோறும் ஏதாவது பேசிக்கொண்டும் செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றுவதையே இலக்காகக் கொண்டு செயலாற்றுகின்றார் என்றுதான் நாம் கருதுகின்றோம். எனவேதான் இப்போது அவர்கள் உத்தியோகபூர்வமாக ஸ்ரீ லங்க சுதந்திரக் கட்சிக்குத் தலைமைத்துவம் கொடுப்பவர்களுக்கு எதிரான போரட்டங்களை ஆரம்பித்திருக்கின்றார்கள்.

சுதந்திரக் கட்சியின் தற்போதய உத்தியோக பூர்வமான தலைவர் மைத்திரிப்பால சிரிசேன. அவர் நியமித்த செயலாளர் துமிந்த திசாநாயக்க. மற்றும் பொதுசன ஐக்கிய முன்னணியின் செயலாளர் மஹிந்த அமரவீர இவர்கள் கட்சியைப் புனரமைக்கின்ற  கூட்டங்களை ஏற்பாடு செய்து அங்கு சென்ற போது அந்தக் கூட்டங்கள் பலவற்றை மஹிந்த தரப்பினர் திட்டமிட்டுக் குழப்பியடித்திருப்பதுடன் அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் அவமானப்படுத்தப்பட்டு விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றார்கள். 

கண்டி, மாத்தறை, மாவனெல்ல, கேகல்லை, பத்தேகம, காலி ஆகிய இடங்களில் இந்த நிகழ்வுகளை கடந்த வாரம் பரவலாக பார்க்க முடிந்தது. எதிர்வரும் காலங்களில் சுதந்திரக் கட்சிக் கூட்டங்களில் ஜனாதிபதி மைத்திரி செல்லும் போது அவருக்கும் இந்த நிலை ஏற்பட நிறையவே வாய்ப்புக்கள் இருந்து வருகின்றது.

தற்போது நல்லாட்சியில் பங்காளிகளாக இருந்து செயலாற்றுக்கின்ற சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் முக்கியஸ்தர்களும் கடந்த சில நாட்களாக சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுக்கு ஏற்படுத்தப்படும் அவமானங்கள் தொடர்பில் பெரும் அச்சத்துக்குள்ளாகி இருக்கின்றார்கள். தமக்கும் இவ்வாறான நிலை ஏற்படுமோ என்று அவர்கள் தற்போது அஞ்சுகின்றார்கள்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் நடவடிக்கைகள் கட்சிக்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தனிப்பட்ட வைராக்கியத்துடன் செயலாற்றிக் கொண்டிருக்கின்;றார் என்று குற்றம் சாட்டுகின்றார் அமைச்சர் டிலான் பெரேரா.

புதிய யாப்புத் திருத்தம் தொடர்பாக மக்களின் கருத்தை அறியும் குழுவின் தலைவராக செயலாற்றுகின்ற சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க, உத்தேச யாப்புத் தொடர்பாக அக்கறையற்றவராகவே பிரதமர் ரணில் என்னிடத்தில் நடந்து கொண்டார். அவரது செயலாளரும் இது விடயத்தில் உணர்வுபூர்வமாக பணியாற்ற வில்லை. 

எமது தனிப்பட்ட வேலைகளைப் போல் கட்டாயப் படுத்தித்தான் இந்தப் பணியை நாம் செய்து முடித்திருக்கின்றோம் என்று குற்றம் சாட்டுகின்றார் லால் விஜேநாயக்க. எனவே தேர்தல் சீர்திருத்தம், புதிய யாப்பு போன்ற விடயங்கள் ஜனாதிபதி மைத்திரியின் அழுத்தம் காரணமாகத்தான் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று உணர முடிகின்றது. 

எனவே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும்கூட தேசிய பிரச்சினைகளில் புரிந்துணர்வு கிடையாது என்ற பாரதூரமான குற்றச்சாட்டை நாம் முன்வைக்க வேண்டியுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மறுசீரமைப்பு விடயத்திலும் ரணில் குழப்பியடிக்கின்ற ஒருவராகவே நடந்து கொண்டார் என்பது கடந்த காலங்களில் பார்க்க முடிந்தது. இதற்காக அவர் சிறுபான்மைக் கட்சித் தலைவர்களையும் உபயோகித்தார். எனவே ரணிலை நம்பிய அவர்கள் பழையபடிதான் தேர்தல் என்று கடைசி நேரம் வரை எண்ணிக் கொண்டிருந்தார்கள். 

சுதந்திரக் கட்சித் தலைமைத்துவம் தொடர்பாக சட்டம் என்னதான் சொன்னாலும் கட்சியின் பெரும்பாலான ஆதரவாளர்கள் மஹிந்தவுடனே இருக்கின்றார்கள். இதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிரான நடவடிக்கைகளை சுதந்திரக் கட்சியை முன்னிருத்தி மேற்கொள்ள ராஜபக்ஷக்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் இருந்து வருகின்றது.

அவரது இந்தப் பலயீனங்களை வைத்தக் கொண்டு மைத்திரியை சுதந்திரக் கட்சியில் செல்லாக்காசாக்கி அதன் பின்னர் அவரைக் கட்சியில் இருந்தும் வெள்ளியேற்றுவது தொடர்பாகவும் தற்போது மஹிந்த அணியினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதற்கு நல்ல உதாரணம் மைத்திரி கட்சித் தலைவராக ஏற்க முடியாது என்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருக்கின்றார்கள் கம்பஹ மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள். எனவே வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சுதந்திரக் கட்சியில் மைத்திரியின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற ஒன்றாக அமையும் என்று எதிர்பார்க்க முடியும். நாம் கடந்த வாரம் குற்றிப்பிட்டது போன்று 2016 மே தினமும் மைத்திரிக்கு ஒரு தலைவலியாகவே அமையும். 

எனது ஆட்சி காலத்தில் நான் தவறு செய்திருந்தால் அதற்கு மைத்திரியும் பொறுப்பாகும். அவரும் எனது அமைச்சரவையில் முக்கிய பதவிகளை வைத்திருந்தார் என்று குறிப்பிடுகின்றார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!  அத்துடன் 1700 அரச அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைகளை இந்த அரசங்கம் கைவிடாவிட்டால் இந்த அரசாங்கம் கொண்டுவரும் எந்தத் திட்டங்களையும் நாம் ஆதரிக்க மாட்டோம் என்று மஹிந்த அணியினர் எச்சரிக்கை செய்து வருகின்றனர். 

இந்த அரசாங்கத்தை கொண்டு வருவதற்கு முக்கிய பங்காளிகளாக செயல்பட்ட ஜேவிபித் தலைவர் அணுரகுமார திசாநாயக்க எந்த நேரம் வேண்டுமானாலும் அரசை வீட்டிற்கு அனுப்பிவைக்க முடியும். இதற்காக அடுத்த தேர்தல் வரும்வரை காத்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்று இந்த அரசாங்கத்தை எச்சரித்திருக்கின்றார். மக்கள் வீதிக்கிறங்கி அரசாங்கங்களை விரட்டியடித்திருக்கின்றார்கள். இந்த நாட்டிலும் அதற்கான முன்னுதாரணங்கள் இருக்கின்றது என்பது அவரது வாதம். 

ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இந்த நல்லாட்சிக்கு ஆயுள் குறைவு நல்லாட்சி அரசாங்கம் விரைவில் கவிழ்ந்து விடும் என்று சிலர் பகல் கனவு காண்கின்றார்கள். அப்படி நடப்பதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது. எனவே வீண் கனவுகளை விட்டு விட்டு எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்த நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு அணி சேருவோம் வாருங்கள் என்று அழைப்புக் கொடுத்திருக்கின்றார்.

No comments

Powered by Blogger.