Header Ads



மகிந்தவை கைவிட்ட சீனா, ரணிலுடன் நெருக்கமாகிறது..!

முன்னர் சீனாவின் திட்டங்கள் தொடர்பாக மகிந்த ராஜபக்ச பெருமையாகப் பேசுவார். ஆனால் இவரது அண்மைய உரைகளில் சீனா மீதான புகழாரம் காணப்படவில்லை.

இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

கடந்த நவம்பரில் சீன அரசாங்கத்தால் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு விடுக்கப்பட்ட அழைப்புத் தொடர்பாக மகிந்தவின் விசுவாசிகள் பெருமையுடன் பேசிக்கொண்டனர். மகிந்த ராஜபக்ச கடந்த டிசம்பரில் சீனாவிற்கான பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தார்.

மகிந்த ஆட்சிக்கு வந்தால் மட்டுமே சீன அரசாங்கமானது சிறிலங்காவிற்கு உதவும் என மகிந்தவிற்கு நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

தனது நாட்டிற்கு வருமாறு மகிந்தவிற்கு சீனா விடுத்த அழைப்புக்கு முன்னர், அதாவது கடந்த ஒக்ரோபரில் சீனாவின் சிறப்புத் தூதுவர் லியு சென்மின் சிறிலங்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரைச் சந்திப்பதற்காகவே சீனத் தூதுவர் சிறிலங்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

எனினும், இப்பயணத்தின் போது  சென்மின், மகிந்தவையும் சந்தித்துக் கலந்துரையாடியதானது சீனாவின் சாதாரண அரசியல் வட்டத்திற்குள் குழப்பத்தை உண்டுபண்ணுவதாக அமைந்தது. சீனாவின் வழமையான இராஜதந்திர நடைமுறைகளை நோக்கும் போது, சீனாவின் இராஜதந்திரிகள் ஒரு நாட்டின் மிக முக்கிய அதிகாரிகளுடன் மட்டுமே பேச்சுக்களை மேற்கொள்வார்களே தவிர அந்நாட்டின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுக்களில் ஈடுபடமாட்டார்கள். சீனாவின் இந்த நிலைப்பாடானது மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் தெளிவாகத் தெரிந்தது.

அதாவது மகிந்தவின் ஆட்சிக்காலத்தின் போது எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவர்களும் பிறநாட்டு இராஜதந்திரிகளுடன் தனிப்பட்ட ரீதியான பேச்சுக்களை மேற்கொள்வதில்லை. இந்நிலையில் சென்மின், மகிந்தவைச் சந்தித்துக் கலந்துரையாடியதானது மைத்திரி-ரணில் அரசாங்கத்தால் சந்தேகத்துடன் நோக்கப்பட்டிருக்கலாம்.

சென்மின் கொழும்பிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் சிறிலங்காவிற்கான தனது பயணமானது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், குறிப்பாக சிறிலங்காவின் அதிபர் சிறிசேன, பிரதமர் விக்கிரமசிங்க மற்றும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடன் பேச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும் எனவும் அறிவித்திருந்தார். ஆனால் இவர் இதில் மகிந்தவுடனான பேச்சுக்கள் தொடர்பாகக் குறிப்பிடவில்லை.

மகிந்தவைச் சந்தித்தமை தொடர்பாகத் தெரிவித்தால் எவ்வாறானதொரு விளைவைச் சந்திக்க நேரிடும் என்பதை இவர் முன்கூட்டியே அறிந்திருந்தார். சென்மின் மற்றும் மகிந்தவிற்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றதாக மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் தகவல் வெளியிட்டிருந்தார்.

மகிந்தவின் சீனாவிற்கான பயணம் பின்னர் கைவிடப்பட்டது.  மகிந்தவின் சீனப்பயணம் பிற்போடப்பட்டுள்ளதாக மகிந்த விசுவாசிகள் அறிவித்தனர். முன்னர் சீனாவின் திட்டங்கள் தொடர்பாக மகிந்த பெருமையாகப் பேசுவார். ஆனால் இவரது அண்மைய உரைகளில் சீனா மீதான புகழாரம் காணப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சீனாவிற்கான பயணமானது, இலங்கை  வெளியுறவு அமைச்சுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக மகிந்தவின் மகனான நாமல் குற்றம் சுமத்தினார். சீன-சிறிலங்கா உறவை மேம்படுத்துவதற்காக சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கமானது மக்கள் தொடர்பாடல் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாகவும் நாமல் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

மைத்திரி-ரணில் அரசாங்கத்தால் சீனாவுடனான உறவை மீளக்கட்டியெழுப்புவதுடன், அதனை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை ராஜபக்சாக்கள் குழப்புகின்றனர் என்பதையே நாமலின் இந்தச் செய்தி சுட்டிநிற்கிறது. சீனாவுடனான உறவை மீளக்கட்டியெழுப்பும் மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் முயற்சியானது சீனா மீதான தமது பிடியைத் தளர்த்திவிடுமோ என ராஜபக்சாக்கள் அச்சங்கொள்வதையே நாமலின் இந்தச் செய்தி குறிக்கின்றது.

ரணில் விக்கிரமசிங்க வெளியுறவு அமைச்சுடனான உறவில் விரிசலை ஏற்படுத்துவதாக இங்கு கூறப்படுவதற்கு எவ்வித காரணமும் இல்லை. ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கான தனது பயணத்தை மேற்கொள்வது தொடர்பான திட்டத்தைத் தயாரித்த போது அதில் முழுமையான பொருளாதாரப் பங்களிப்பு உடன்பாடும் உள்ளடக்கப்பட்டிருந்த போது அது தொடர்பாக சிறிலங்காவின் வெளியுறவு அமைச்சானது தவறான தகவலை வழங்கியிருந்தது. இத்தவறு தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க, வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளைக் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்நிலையில் சீனாவிற்கான ரணிலின் பயணத்தின் திட்டம் தொடர்பாக முன்கூட்டியே வெளியுறவு அமைச்சிடம் தெரிவிக்கப்படவில்லை. இத்திட்டத்தை முன்கூட்டியே தெரிவிப்பதன் மூலம் வெளியுறவு அமைச்சில் தொழில்புரியும் மகிந்த விசுவாசிகள் இதனை வெளியில் கூறி இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விடலாம் என்பதே ரணிலின் எண்ணமாகும்.

சீனாவிற்கான தமது பயணத்தைத் திட்டமிட்ட போது இது தொடர்பாக ராஜபக்சாக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ணுவதில் மைத்திரி-ரணில் அரசாங்கம் விழிப்புடன் இருந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் ஜே.ஆர் கைச்சாத்திடுவதற்காக இந்தியாவின் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் நட்புப் பாராட்டிய போது, தான் இந்தியாவினதும் காந்திக்களினதும் நெருங்கிய உறவினர் என்கின்ற உணர்வு சிறிமாவோவுக்கு இருந்தது.

இந்தியாவானது சிறிலங்காவில் பயங்கரவாத யுத்தத்தை மேலும் தீவிரப்படுத்திய போது ஜெயவர்த்தன அரசாங்கத்தைத் தோற்கடித்து தான் சிறிலங்காவின் ஆட்சிப்பீடத்தைக் கைப்பற்றுவதற்கு தனது நண்பியான இந்திரா ஆதரவளிப்பார் என சிறிமாவோ கருதினார். இதனாலேயே சிறிமாவோ, இந்திரா காந்தி மற்றும் ஜெயவர்த்தனாவிற்கு இடையில் முறுகல்நிலையைத் தோற்றுவித்தார். ஜே.ஆர் கோபங் கொண்டதாலேயே இந்தியா பயங்கரவாத யுத்தத்திற்குத் துணையாக இருந்தது என்பதை சிறிமாவோ உணர்ந்திருப்பார். இந்திய உதவியுடன் பயங்கரவாத யுத்தத்தை முறியடித்தால் தான் அடுத்ததாக ஆட்சிக்கு வரலாம் என்கின்ற நிலைப்பாட்டை சிறிமாவோ கொண்டிருந்தார்.

இதன் பின்னர், ஜே.ஆர், ராஜீவுடன் நட்புப் பாராட்டி அவரைத் தனது நண்பனாக்கியமை மற்றும் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை போன்றன தொடர்பாக சிறிமாவோ  கோபங் கொண்டிருந்தார்.

ஆனால் சீனா இது தொடர்பில் பிறிதொரு மூலோபாயத்தைக் கைக்கொண்டுள்ளது. ஆட்சியிலுள்ள அரசாங்கத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும் செயலில் சீனா ஒருபோதும் ஈடுபடவில்லை. இவ்வாறானதொரு சூழலில் மகிந்த தவறாகச் செல்கிறார் என்பதும் இவர் எதனையும் புரிந்து கொள்ளவில்லை என்பதையும் அறியமுடியும்.

ஆசியாவின் ‘பெரிய சகோதரர்கள்’ தமது அரசியல் தொடர்பாக புலனாய்வு மற்றும் முறைமை தொடர்பாகக் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. ஆனால் இவர்கள் தமது ‘சிறிய சகோதரர்களுடன்’  ஒரு போதும் நிரந்தர நட்பைப் பேணவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதே.

1 comment:

  1. Mr ranil take care sir.CHINA GOVT WILL SERVE KIND OF FOOD IN THE TABLE.ITS WILL EFFECT YOUR BODY AFTER SOME TIMES.TAKE CARE ANYWAY

    ReplyDelete

Powered by Blogger.