Header Ads



கார்லோஸ் பிராத்வெய்ட் யார்..?


உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் சற்றும் எதிர்பாராதவிதமாக 4 மிகப்பெரிய சிக்சர்களை அடித்த அந்த நெடிய, வலுவான வீரர் பிராத்வெய்ட் பார்படாஸைச் சேர்ந்தவர்.

இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடைசி ஓவர் வரை இங்கிலாந்தே வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தனர், பிராத்வெய்ட் இப்படியொரு ராட்சத ஹிட்டராக இருப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முதல் பந்தே ஸ்டோக்ஸ் லெக்ஸ்டம்பில் ஹாஃப்-வாலி லெந்தில் வீச டீப் பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசைக்கு பறந்தது. ஆனால் அடுத்த பந்து ஃபுல் லெந்த் என்று கூற முடியாது, ஆனாலும் பிராத்வெய்ட் இதனை லாங் ஆனில் சிக்ஸ் அடிக்க ஸ்டோக்ஸ் அதிர்ச்சியடைந்தார். அடுத்த பந்து மிஸ் ஹிட், அதுவே லாங் ஆஃபில் சிக்ஸ். கடைசியில் மிட்விக்கெட்டில் வின்னிங்ஸ் சிக்ஸ்.

இன்னும் 2 பந்துகள் வீச முடிந்திருந்தால் அதுவும் கூட சிக்ஸராகியிருக்கலாம். யுவராஜ் சிங் சாதனை சமன் ஆகியிருக்கலாம், ஆனால் அதற்குள் மே.இ.தீவுகள் வெற்றி ஈட்டியது. பந்துவிச்சிலும் 4 ஓவர்களில் 23 ரன்கள் 3 விக்கெட் என்று அசத்தினார். எங்கிருந்து வந்தார் இந்த அதிரடி ஆல் ரவுண்டர்?

2011-ம் ஆண்டு முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமான பிராத்வெய்ட் 8 ஆட்டங்களில் 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்காக இதே ஆண்டில் தேர்வு செய்யப்பட்டார்.

2015-16 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பிராத்வெய்ட்டின் பங்களிப்பினால்தான் இவருக்கு ஐபிஎல் ஒப்பந்தம் கிடைத்தது. டெல்லி டேர் டெவில்ஸ் அணி இவரை ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுத்தனர்.

முதல் தர கிரிக்கெட்டில் டிரினிடாட் அணிக்கு எதிராக தனது அறிமுகப் போட்டியிலேயே 90 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி தன்னை நிரூபித்தார்.

2011-ம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டுக்கு பிராத்வெய்ட் வந்தாலும் அடுத்த வாய்ப்புக்காக அவர் 3 ஆண்டுகள் காக்க நேரிட்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2015-ம் ஆண்டு இவர் மீண்டும் ஒருநாள் போட்டிகளுக்காக தேர்வு செய்யப்பட்டார். டிசம்பர் 2015-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

இதில் பாக்சிங் டே, மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில், தனது அறிமுகப் போட்டியில் 8-ம் நிலையில் இறங்கி 59 ரன்கள் எடுத்தார். மழையால் பாதிக்கப்பட்ட சிட்னி டெஸ்ட் போட்டியில் 71 பந்துகளில் 69 ரன்கள் விளாசினார்.

2 டெஸ்ட் போட்டிகளில் 130 ரன்கள் எடுத்த பிராத்வெய்ட்டின் சராசரி 43.33. இந்த 130 ரன்களில் 9 பவுண்டரிக்ள் 5 சிக்சர்கள் அடங்கும். டி20 கிரிக்கெட்டில் நேற்று அவர் 10 பந்துகளில் 34 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோர், மொத்தம் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 8 போட்டிகளில் 59 ரன்களை மட்டுமே அவர் எடுத்துள்ளார், ஆனால் இதில் 7 சிக்சர்கள் 1 பவுண்டரி அடங்கும்.

இந்நிலையில் வரவிருக்கும் காலங்களில் அதிக சிக்சர்களுக்கான சாதனைகளை பிராத்வெய்ட் முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments

Powered by Blogger.