இலங்கை முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்க அனுமதிக்கமாட்டோம் - இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு
(அஸ்லம் எஸ்.மௌலானா)
இலங்கையின் அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின்போது அங்கு வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) தலைவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளனர்.
இலங்கையின் அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் முஸ்லிம்களின் அபிலாஷைகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் 57 அரபு, முஸ்லிம் நாடுகள் அங்கம் வகிக்கின்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தலைவர்களை நேற்று -17- ஞாயிற்றுக்கிழமை மாலை சவூதி அரேபியா ஜித்தா நகரில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் சந்தித்து உரையாடினர். இதன்போதே இவ்வுத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஐக்கியத்தையும் இன ஒருமைப்பாட்டையும் கருத்தில் கொண்டு இலங்கையின் அரசியல் யாப்பை மாற்றுவதற்கு எடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கையானது முஸ்லிம் சமூகத்திற்கு எந்த வகையிலும் பாதிப்பில்லாத முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதற்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் இதன்போது அமைச்சர் ரிஷாத் வலியுறுத்தினார்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு தமிழர் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. அதற்கு டயஸ்போரா எனும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளும் பின்னணியில் செயற்படுகின்றன. ஆனால் அது முஸ்லிம்களுக்கு பெரும் பாதகமான விடயம் எனவும் இன்று முஸ்லிம்களால் ஆளப்படுகின்ற கிழக்கு மாகாணம் வடக்கின் ஆளுகைக்குள் கொண்டு வரப்பட்டு, அங்கு வாழ்கின்ற முஸ்லிம்களை இன்னொரு சமூகத்திற்கு அடிமைப்படுத்துகின்ற ஒரு ஏற்பாடே இணைப்புக்கான முயற்சியாகும் எனவும் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டார்.
அவ்வாறு இரு மாகானங்களும் இணைக்கப்ப்படுமானால் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாண சபை அமைக்கப்பட வேண்டும் என முஸ்லிம்கள் தரப்பில் வலியுறுத்தப்படுவதாகவும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தலைவர்களிடம் அவர் சுட்டிக்காட்டினார்.
1980ஆம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தபோது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை ஸ்தாபித்து அதன் மூலம் முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் தூக்காதவாறு, ஜனநாயக வழியில் அவர்களை நெறிப்படுத்திச் சென்றார். இல்லா விட்டால் தமிழர்கள் அழிவுற்றது போன்று முஸ்லிம்களும் பாரிய அழிவை எதிர்கொண்டிருப்பார்கள். எவ்வாறாயினும் அந்த யுத்தத்தினால் முஸ்லிமகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்கள் எடுத்துக் கூறியதுடன் தமிழ் இளைஞர்களின் இத்தகைய ஒரு விரக்தி நிலை முஸ்லிம் இளைஞர்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படாதவாறு முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், அபிலாஷைகள் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.
ஆகையினால் இனப்பிரச்சினைத் தீர்வை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் அதிகாரப் பகிர்வு, நிறைவேற்று ஜனாதிபதி முறை மற்றும் தேர்தல் முறை மாற்றங்களின்போது முஸ்லிம்களும் ஒரு தேசிய இனம் என்ற ரீதியில் அவர்களுக்கு அநீதியிழைக்கப்படாமல் நேர்மையான அணுகுமுறையொன்று கடைப்பிடிக்கப்படுவதை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தலையிட்டு உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இலங்கை வாழ் தமிழர்களுக்காக பலமிக்க பல நாடுகள் முன்னின்று குரல் எழுப்பி, பாரிய அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றபோதிலும் அங்கு வாழ்கின்ற இன்னொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகம் தொடர்பில் அந்நாடுகள் எவ்வித கரிசனையும் கொள்வதில்லை. இந்நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கு அரபு, முஸ்லிம் நாடுகளைத் தவிர வேறு எந்த அரவணைப்பும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டினர்.
அதேவேளை கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பொது பல சேனா போன்ற பேரினவாத இயக்கங்களின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு காத்திரமான பங்களிப்பை செய்தமைக்காக அக்கூட்டமைப்புக்கு அவர்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டனர்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஆகியோரின் கருத்துகளை மிகவும் கரிசனையுடன் செவிமடுத்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தலைவர்கள், இலங்கையின் அரசியல் யாப்பு சீர்திருத்தம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் தாம் உன்னிப்பாக அவதானித்து, முஸ்லிம்களின் நலன்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்துவோம் எனவும் இலங்கையுடன் அரபு நாடுகளுக்கு இருந்து வருகின்ற நற்புறவை அதற்காக பயன்படுத்துவோம் எனவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்க இடமளிக்க மாட்டோம் எனவும் உறுதியளித்தனர்.
இதன்போது இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டதாக கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
They can not stop the burning issues in the middle east. But now they are going to concern on Sri Lankan Muslim issue? Hi hi what a joke?
ReplyDeleteNo question Many Muslims countries have done their best in past regarding Srilankan Muslims.
ReplyDeleteBut we do not know what they did ? Only people in authorities know it.