டீச்சர் சொல்லித் தரலையா..?
நான்கில் ஒரு குழந்தைக்கு பருமன் மற்றும் நீரிழிவு ஏற்படும் அபாயம் உள்ளது. காரணம், உணவுமுறை. இதுவே diabesity என்ற புதிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.(டயாபடீஸ் + ஒபிசிட்டி = டயாபிசிட்டி)
மிக இளம் வயதிலேயே டைப் 2 நீரிழிவின் தாக்கம் அதிகரித்து வருவதைப் பற்றிய செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. உணவுமுறை மற்றும் வாழ்க்கை நடைமுறைகளில் ஓர் ஒழுங்கு கொண்டு வருவது மட்டுமே, இந்தப் பிரச்னையில் இருந்து விடுபட வழி வகுக்கும்.இதன் முதல் அத்தியாயத்தை பள்ளி களில் இருந்தே தொடங்க வேண்டும்.
சிலபல பள்ளிகளில் செயல்படும் கேண்டீன்களில் சிப்ஸ், பாட்டில் பானங்கள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் வகைகள் விற்பனை செய்யப்படுவதில்லை. மாறாக ஆரோக்கிய உணவுகள் மட்டுமே அங்கு கிடைக்கச் செய்திருக்கின்றனர். இதே போல ஆர்வமுள்ள ஆசிரியர்களும் துரித உணவுகளைத் தவிர்க்கும்படி மாணவர்களிடம் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த இரு நடைமுறைகளையும் பள்ளிகள் மேற்கொள்ளும் போது, நிச்சயம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதற்கு இரு உதாரணங்களையும் காட்ட முடியும்.
1. ‘நூடுல்ஸ், சிப்ஸ் எல்லாம் சாப்பிடவே மாட்டேன்’ என்று அதைத் தந்த அம்மாவிடமே அடம்பிடித்து அழுத குழந்தையை சமீபத்தில் நேரடியாகவே கண்டேன். காரணம், அந்தக் குழந்தையின் வகுப்பு ஆசிரியர் ‘இதுபோன்ற ஜங்க் ஃபுட் வகைகளால் எந்தச் சத்தும் இல்லை... சாப்பிடவே கூடாது’ என்று அடிக்கடி வலியுறுத்தி வந்ததுதான். ‘டீச்சர் சொல்லியிருக்காங்களாம்... அதான் சாப்பிட மாட்டேங்கறா’ என்று அலுத்துக் கொண்டார் குழந்தையின் அம்மா.
2. சென்னையில் உள்ள எம்.வி. நீரிழிவு ஆராய்ச்சி மையம் சமீபத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டது. அதன் முடிவுகளை டாக்டர் விஜய் விஸ்வநாதன் அறிவித்தார்.
’‘சென்னையில் உள்ள 7 சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்து 357 மாணவர்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்தனர். இவர்கள் 4ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை உள்ளவர்கள். இம்மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். உணவுக் கட்டுப்பாடு, ஃபாஸ்ட் ஃபுட் / ஜங்க் ஃபுட் தவிர்த்தல், ஆரோக்கிய உணவு அறிமுகம், உடற்பயிற்சி ஆகியவை குறித்து இவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் வாயிலாக இவர்களது உணவுப் பழக்கம் கண்காணிக்கப்பட்டது.
முதல் குழுவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மீண்டும் மீண்டும் உணவுப் பழக்கம் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. இரண்டாவது குழுவினருக்கு நினைவூட்டலோ, ஆலோசனையோ வழங்கப்படவில்லை. ஆய்வின் முடிவில், உணவுப்பழக்கம் குறித்து அடிக்கடி அறிவுறுத்தப்பட்ட முதல் குழுவினரில் 19.1 சதவிகிதத்தினர் ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளைத் தவிர்த்திருந்தனர். அவர்களது ஆரோக்கியமும் மேம்பட்டிருந்தது. நினைவூட்டல் அளிக்கப்படாத குழுவில் 16.9 சதவிகிதத்தினர் மட்டுமே ஒழுங்கான உணவுமுறையைப் பின்பற்றி இருந்தனர்’’என்கிறார் டாக்டர் விஜய் விஸ்வநாதன்.
இந்த ஆய்வு நமக்குச் சொல்வதென்ன?
பள்ளி மாணவர் இடையே உணவுப்பழக்கம் குறித்த தெளிவான அறிவுறுத்தல் செய்யப்பட்டால் நல்ல மாற்றம் ஏற்படும் என்பதே உண்மை. இவ்விஷயத்தில் தீவிரமாகச் செயல்படும் கடமை ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் உள்ளது என்பதையும் நினைவில் கொள்வோம்.
Post a Comment