Header Ads



யேமன் தீவிரவாதிகளுக்கு, ஈரானிலிருந்து ஆயுதம் - அமெரிக்கா பறிமுதல்


ஈரானிலிருந்து ஆயுதங்கள் ஏற்றி வந்த படகை நடுக்கடலில் அமெரிக்க கடற்படை மடக்கிப் பிடித்தது. அந்தப் படகில் இருந்த ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

 அமெரிக்க கடற்படை திங்கள்கிழமை -4- வெளியிட்ட அறிக்கையில் இது குறித்து தெரிவித்திருப்பது:

 அரபிக் கடலில் வழக்கமான ரோந்துப் பணியில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த யு.எஸ்.எஸ். ஸிரோக்கோ ஈடுபட்டிருந்தது.  கடந்த மார்ச் 28-ஆம் தேதி அரபிக் கடலில் சந்தேகத்துக்கு இடம் தரும் வகையில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு படகை கடற்படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

 அந்தப் படகில் 1,500 ஏ.கே.47 ரக தானியங்கித் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளை ராக்கெட் மூலம் ஏவும் கருவிகள் 200, கன ரக இயந்திரத் துப்பாக்கிகள் 21 ஆகியவை அந்தப் படகில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  அந்த ஆயுதங்களை அமெரிக்க கடற்படை பறிமுதல் செய்தது.

 இந்த ஆயுதங்கள் ஈரானிலிருந்து கொண்டு வந்ததாகத் தெரிய வந்தது. இவற்றை யேமனில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு கொண்டு செல்ல இருந்ததாகத் தெரிகிறது.  தீவிர விசாரணைக்குப் பிறகு படகில் இருந்த மாலுமிகளையும் அந்தப் படகையும் கடற்படை விடுவித்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 யேமனில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசின் படைகளுக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.  கிளர்ச்சியாளர்கள் யேமனில் கணிசமான இடங்களைக் கைப்பற்றியுள்ளனர். தலைநகர் சனா அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

 முன்னாள் அதிபர் அப்துல்லா சலேவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஷியா கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்கள் அளித்து உதவி வருகிறது என்று கூறப்படுகிறது.  சர்வதேச அங்கீகாரம் பெற்ற அதிபர் மன்சூர் ஹாதிக்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

 ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி தலைமையிலான 10 நாடுகளின் கூட்டுப் படை யேமனில் கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியிலிருந்து வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.  இந்த சண்டையில் இதுவரை சுமார் 6,100 பேர் பலியாகியுள்ளனர் என்று ஐ.நா. புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

No comments

Powered by Blogger.