சம்பந்தன் முஸ்லிம்கள் பற்றியும் பேச வேண்டும், றிசாத் தொடந்தும் காடுகளை அழிக்கிறார்
எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ் மக்களினதும் தமிழ் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களினதும் பிரச்சினைகளையும், உரிமைகளையும் பற்றியுமே பேசுகிறார். இது தவறானதாகும். அவர் முஸ்லிம், சிங்களவர்களின் பிரச்சினைகளைப் பற்றியும் பேசித் தீர்வுகள் பெற்றுத்தர வேண்டும் என சிங்கள ராவயவின் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்தார்.
கிருலப்பனையிலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, வடக்கின் உரிமை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கோ, அமைச்சர் சுவாமிநாதனுக்கோ இல்லை. வடக்கு அனைத்து இனமக்களுக்கும் சொந்தமானதாகும். இந்நிலையில் விக்னேஸ்வரனும் சுவாமிநாதனும் தமிழ், முஸ்லிம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுபவர்களாகவே இருக்கின்றார்கள். மீள்குடியேறியுள்ள வடக்கு மக்களுக்கு சமமான வசதிவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
அங்கு முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் வழங்கப்படும் வசதிவாய்ப்புகள் சிங்களவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. வடக்கில் போகஸ்வெவ பகுதியில் வாழும் சிங்கள மீள்குடியேற்றவாசிகளுக்கு எவ்வித வசதிகளும் வழங்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி, சுகாதார வசதிகள் இல்லை.
முல்லைத்தீவு கொக்கிலாய் பிரதேசத்தில் வாழும் சிங்களவர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமெனக் கூறியுள்ளது. நல்லிணக்கத்தை வடக்கு, கிழக்கில் உருவாக்க வேண்டுமென்றால் ஏன் அங்கிருக்கும் சிங்களவர்கள் வெளியேற்றப்பட வேண்டும். புதிய எல்லை நிர்ணயத்தின் மூலம் போகஸ்வெவ பிரதேசத்தை வடக்கிலிருந்து பிரித்து விடுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.
மீள்குடியேறியவர்களுக்கென 65 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. இவற்றில் சிங்களவர்களுக்கு 375 வீடுகள் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளன. சிங்களவர்களுக்கென 5000 வீடுகள் ஒதுக்கப்பட வேண்டும். போகஸ்வெவக்கென தனியான பிரதேச சபையொன்று அமைக்கப்பட்டு அங்கு வாழும், மக்களின் பிரச்சினைகள் அந்தச் சபை மூலம் தீர்க்கப்பட வேண்டும்.
வில்பத்துவில் புதிய குடியேற்றம்
வில்பத்து வனப் பிரதேசத்துக்கு அருகில் தற்போது புதிய குடியேற்றம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அடியாட்கள் இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
சிலாபத்துறை, முருங்கன் பகுதிக்கு இடையில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் காடுகளை அழித்து வருகிறார். புதிய குடியேற்றத்துக்கான பெயர் பலகையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான பூரண விபரங்களை நாம் இரண்டொரு தினங்களில் வெளியிடவுள்ளோம்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் என்போர் இவ்வாறான செயற்பாடுகளைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்கக்கூடாது. இதனால் பெரும்பான்மைச் சமூகமே பாதிக்கப்படுகிறது என்றார். -ARA.Fareel-
Post a Comment