Header Ads



6 ஆம் திகதி சீனா புறப்படுகிறார் ரணில் - முக்கிய ஒப்பந்தங்களும் கைச்சாத்து

சீனாவின் அழைப்பையேற்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6ஆம் திகதி சீனா புறப்படுகிறார். கடந்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரதமர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின்போது அந்நாட்டு ஜனாதிபதி ஹீ ஜிங்பிங், பிரதமர் லீ கெக்கியாங் மற்றும் தேசிய மக்கள் காங்கிரசின் நிலையியற் குழுவின் தலைவர் ஜாங் டிஜியாங்க் ஆகிய உயர்மட்டத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்புக்களில் இரு நாட்டுக்கும் இடையிலான உறவுகளை புதிய மட்டத்துக்கு எடுத்துச் செல்வது குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் சீனாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் தொடர்ச்சியாகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவுக்கு நல்லெண்ண விஜயத்தை மேற்கொள்கின்றார். பொருளாதார விவகாரம், முதலீடு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய விடயங்களில் இரு நாட்டுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கள் குறித்த பொறிமுறைகள் பற்றி இவ்விஜயத்தின் போது முக்கியமான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

இது மாத்திரமன்றி விஞ்ஞானம், விளையாட்டு, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, நிதிச் சேவைகள் மற்றும் நீர்வள முகாமைத்துவம், சிறுநீரக நோயை கட்டுப்படுத்த நடமாடும் சிகிச்சை உள்ளிட்ட விடயதானங்களில் சீனாவின் ஒத்துழைப்பைப் பெறுவது பற்றியும் பிரதமர் தனது விஜயத்தின் போது கலந்துரையாடல்களை நடத்தவிருக்கின்றார். இவ்விஜயத்தில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் காணப்படும் வரலாற்று ரீதியான உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச அபிவிருத்தி தொடர்பான அமைச்சர் சோங் தவோவை சந்திக்கவுள்ளார்.

பிரதமரின் இவ்விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கம், இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜீ சியாலியான் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இதற்கும் அப்பால் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ரஞ்சித் உயங்கொட மற்றும் சீனாவிலுள்ள இலங்கைத் தூதுவர் கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு ஆகியோர் பயண ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

பிரதமருடைய சீன விஜயத்தின்போது இலங்கையிலிருந்து செல்லும் வர்த்தகக் குழு சீன வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, இலங்கையில் மேற்கொள்ளக்கூடிய முதலீடுகள் பற்றி விளக்கமளிக்கவுள்ளது.

பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால சில்வா, விசேட செயற்றிட்டங்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச, உபாயமார்க்க அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மேலதிக செயலாளர் சமன் அதாவுடஹெட்டி, ஐ.தே.கவின் சர்வதேச விவகார இணைப்பாளர் மஹிந்த உள்ளிட்டோரும் இவ்விஜயத்தில் கலந்துகொள்கின்றனர். 

No comments

Powered by Blogger.