Header Ads



ஒரே வருடத்தில் 3 உலகக்கிண்ணம் வென்று, புதிய வரலாறு படைத்த மேற்கிந்திய தீவுகள்


ஜூனியர், மகளிர் டி20, ஆடவர் டி20 என மூன்று உலகக்கிண்ணத்தையும் ஒரே ஆண்டில் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.
11வது ஜூனியர் உலகக்கிண்ண (19 வயதுக்குட்பட்டோருக்கான) கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் ஜனவரி 22ம் திகதி தொடங்கியது.

இதில் பெப்ரவரி 14ம் திகதி நடந்த இறுதிப் போட்டியில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அதேபோல் நேற்று கொல்கத்தாவில் நடந்த மகளிர் உலகக்கிண்ண டி20 இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும், அவுஸ்திரேலிய அணியும் மோதின.

இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணி சாம்பியன் பட்டத்தைத் முதன்முறையாக தட்டிச் சென்றது.

அதே மைதானத்தில் நடந்த ஆடவர் டி20 உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்தை சந்தித்தது.

பரபரப்பான ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகளால் இங்கிலாந்தை வீழ்த்தி 2வது முறையாக கிண்ணம் வென்றது.

இதன் மூலம் ஒரே வருடத்தில் நடந்த 3 உலகக்கிண்ணத்தையும் வென்று புதிய வரலாறு படைத்துள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.

இதற்கு முன் ஒரே வருடத்தில் ஒரு நாட்டின் ஜூனியர், மகளிர் மற்றும் ஆடவர் அணிகள் 3 உலகக்கிண்ணங்களை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.