ஈராக்கில் கடத்தப்பட்ட கத்தார், அரச குடும்பத்தவர் விடுவிப்பு, மேலும் 26 பேரை விடுவிக்க பேச்சு
இராக்கில் 4 மாதங்களுக்கு முன்னர் ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்ட கத்தார் நாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் விடுவிக்கப்பட்டார்.
அவருடன் கடத்தப்பட்ட பாகிஸ்தானியரும் விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை -07- கூறியதாவது:
இராக்கில் கடத்தப்பட்ட அரச குடும்ப உறுப்பினரும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் பேச்சுவார்த்தைக்குப் பின் விடுவிக்கப்பட்டனர். கடத்தல்காரர்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள மேலும் 26 பேரை விடுவிப்பதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று அந்த அமைச்சகம் தெரிவித்தது.
இராக்கில், ஷியாக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் முத்தான்னா மாகாணத்தில், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்தபோது, கடந்த டிசம்பர் மாதம் ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்டனர்.
ஷியா பிரிவைச் சேர்ந்த அந்த ஆயுதக் குழுவினரால் கடத்தப்பட்டவர்களில் கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்த சிலர் இருந்ததாக முத்தான்னா மாகாண ஆளுநர் ஃபலே அல்-ûஸயதி தெரிவித்தார்.
இந்த நிலையில், கடத்தல்காரர்களுடன் அதிகாரிகள் நடத்தி வந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்தவரும், பாகிஸ்தானியரும் விடுவிக்கப்பட்டதாக கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனினும், கத்தார் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேலும் சிலர் கடத்தல்காரர்களிடம் சிக்கியுள்ளனரா என்பது குறித்து அமைச்சகம் தெரிவிக்கவில்லை.
இராக்கில், ஷியாக்களுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தி வரும் சன்னி பிரிவு பயங்கரவாதிகளுக்கு வளைகுடா அரபு நாட்டு அரசுகள் ஆதரவு அளித்து வருவதாகக் ஷியாக்கள் அதிகம் வசிக்கும் தெற்கு மற்றும் மத்தியப் பகுதியில் கருதப்படுகிறது.
இதனால் அந்தப் பகுதிகளில் கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு எதிரான பகை உணர்வு நிலவி வருகிறது. அந்தப் பகுதிகளைச் சேர்ந்த, ஈரான் ஆதரவு பெற்ற ஷியா ஆயுதக் குழுக்கள், சிரியாவில் அதிபர் அல்-அஸாதுக்கு ஆதரவாகச் சண்டையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment