Header Ads



"கூகுள் Street View" கண்களை திறக்கவேண்டியது யார்...?

(By : முஹம்மது மஸாஹிம்)

கூகுள் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டிருக்கும், Street View பற்றிய சாதக பாதக அலைகள் வலைத்தளங்கள், சமூக வலைகளில் இன்று அதிகம் பேசு பொருளாக மாறியிருக்கும் இத்தருணத்தில் – அதிலிருந்து  நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் சிலவற்றை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆம், கூகுள் Street View ஆனது இலங்கைக்குப் புதியதாயினும், மிக நீண்ட நாட்களுக்கு முன்பே உலகின் பல நாடுகளிலும் அறிமுகம் செய்யப் பட்டுவிட்டது. அறிமுகம் செய்யப்பட்ட காலம் தொடக்கம் தற்போதுவரை, அது சில குற்றச் செயல்களுக்கு காரணமாகவும், தனிநபர் சுதந்திரத்துக்கு இடையூறாகவும் அமைந்துள்ளதாக பல முறைப்பாடுகள் எழுந்தவண்ணமே உள்ளன. இருப்பினும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியொன்றை உலகம் அடைய முற்படும்போது அதனால் ஏற்படக்கூடிய பாதகங்களை விட சாதகங்கள் மக்கள் மக்கள் மனங்களை வென்றுவிடுவதனால், பாதகங்களை இட்டு அலட்டிக் கொள்வதை காலப் போக்கில் மறந்துபோய் விடுகின்றார்கள். இதுவே, தற்போது பூதாகாரமாக உருவெடுத்துள்ள Google Street View விடயத்திலும் நடக்கப் போகின்றதென்பதே நிதர்சன உண்மை.

இருப்பினும், இவ்விடயம் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. உதாரணமாக -

1. எமது தொழில்நுட்பம் எங்குள்ளது..? அவர்கள் எங்குள்ளார்கள்..? உலகையே புகைப்படம் எடுக்க முடியும் என களமிறங்கியிருக்கும் அவர்களது கடின உழைப்புக்கு முன்னாள், நாம் எந்தளவு சோம்பேறியாக உள்ளோம்..?

2. சுயநல அரசியல், அதிகார வர்க்கங்களால்  பூசி மெழுகி உலகிற்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கும், எமது சமூகத்தின் உள்வீடுகளிலுள்ள ஓட்டை உடைசலுகளுக்காக எம்மால் எதை செய்ய முடியும்..?

3. கமரா கண்கள் மொபைல் வடிவிலோ, வேறு வகையிலோ எம்மை சுற்றிக் கொண்டிருக்கும்போது, அலட்சியமாக வீட்டில் இருக்கும் பெண்களும் கூட,  எத்தகைய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய காலமிது..?

4. பாதகங்கள் பல இருந்தாலும், சாதகமான சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இதனை நாங்கள் எவ்வாறு மாற்றுவழியில் பயன்படுத்திக் கொள்ள முடியும்..?

5. ஏனைய பிரதேச வளர்ச்சிகளுடன் ஒப்பிடும்போது எமது கல்விக் கூடங்கள், ஏனைய கட்டிட வசதிகள், தொழில் தளங்களின் கட்டிட வடிமைப்புக்களை எவ்வாறு போட்டிநிறைந்த உலகிற்கு ஏற்ப சிறப்பாக வடிவமைக்க முடியும்..?

இதுபோன்று இன்னமும் பற்பல ஆக்கபூர்வமான விடயங்களில் நாம் எம் சிந்தனைகளை செலவிடலாம். ஒரு அவலம் சமூகத்தில் புதிதாக உருவெடுக்கும்போது, எமது கண்டனத்தை பதிவு செய்வது எந்தளவு முக்கியமோ அதேபோன்று மாற்று வழிகளும் ஆழமாக ஆராயப்பட வேண்டும். சில நாடுகள் சில இணைய சேவைகளுக்கு வரம்பு விதிக்கும்போது – அதற்கான மாற்று வடிகட்டிய சொந்த சேவையினை அறிமுகப்படுத்துவதால், அந்நாட்டு மக்களாலும் உலக மாற்றத்திற்கு ஈடு கொடுத்து பயணிக்க முடிகின்றது. 

எமது சமூகத்தின் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் சில சதிகார நாடுகளின் உற்பத்திகளை புறக்கணிக்கவேண்டும் என காலத்திற்கு காலம் கொதித்தெழும் நாங்கள் அவைகளுக்கு மாற்றுத் தீர்வாக எந்த ஒரு உற்பத்தியையாவது உலகிற்கு வழங்கியுள்ளோமா..? எனவே, இதுபோன்ற நிலமைகளாவது – எமது கண்களை திறக்க வேண்டும். அடுத்தவர் நிலமைகளை நோக்கும் நாம், எங்களை இறைவன் எவ்வளவு மேலான நிலமையில் வைத்துள்ளான் என எண்ணி – உங்கள், சொந்த பந்தம், ஊர், உறவுகள், ஏழை, எளியவர்கர்களின் வாழ்வாதாரத்தை முடிந்தளவு உயர்த்தி, கூகுளின் தொடரும் Street View பதிப்புக்களில் இறைவனின் உதவியால், நாம் உண்மையான மாற்றத்தை காட்டமுடியும்.

ஒருசில விதிவிலக்குகள் இருந்தாலும் - உலகம் தெரியாமல் வாழ்ந்த காலம் போய், உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகை சுற்றிப் பார்த்து எம்மை வளர்த்துக் கொள்ள வரப்பிரசாதமாக வந்துள்ள இதுபோன்ற வசதிகளின் வழிகளை இழுத்து மூட எத்தனிப்பதை விட எம் சமூகத்திற்கு சாதகமான அடைவுகளை கொண்டுவர எப்படிப் பயன்படுத்தலாம் என யோசிப்பதே தற்போது எம் முன் உள்ள கடமை.

சமூக வலைத் தளங்களின் மூலம், சாப்பாட்டையும் செல்பியையும் திருப்பித் திருப்பி போட்டுக் கொண்டு 4 லைக், 8 கொமன்ட் கிடைக்காதா என ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே இணையத்திலும் வாழும் நாம் – மேற்குலகம் Big Data என்ற புள்ளி விபரவியலைப் பயன்படுத்தி எப்படி எம்மை அடிமைப்படுத்தி ஆளுகின்றது என்ற ஆழமான விடயங்களுக்குள் சென்று அறிவைப் பெறத் தவறிவிடுகின்றோம்.  ஒன்று மட்டும் உண்மை, உலகிற்கு அப்பால் பலகோடி மைல் தூரமுள்ள கிரகங்களுக்கு தொழில்நுட்ப சாதனங்களை ராக்கட் மூலம் அனுப்பி, இருந்த இடத்தில் இருந்து கொண்டே புகைப்படங்களை பெற்றுக் கொள்ளும் அதிநவீன வசதிகள் கொண்டவர்கள், என்ன விலைகொடுத்தாவது அவர்கள் விரும்புவதை பெற்றுக் கொள்வார்கள்.

தங்களது எல்லைக்குள், ஒரு எறும்பு கூட நுழைந்தாலும் காரணம் கேட்கும் அதுபோன்ற நாடுகளிடமிருந்து – எது வந்தாலும் எதற்கென்று அறியாது புதினமாய் பார்த்துவிட்டு கலைந்துபோகும் நமது மக்கள் இன்னமும் நிறைய கற்றுக் கொள்ளவேண்டி இருக்கிறது. அப்படி அறிந்திருந்தால், ஒருவர் இறப்புச் செய்தியையே - ஊர் முழுக்க அறிவிக்கும், வழக்கமுள்ள எமது பிரதேசங்கள், குறைந்தபட்ச அறிவுறுத்தல்களையாவது பொதுமக்களுக்கு வழங்கியிருக்கும். எனவே தற்போது எமக்குத் தேவை வியாக்கியானங்களை விட, விழிப்புணர்வும், விவேகமுமே.

( குறிப்பு : இக்கட்டுரை யாருக்கும் மறுப்பு சொல்வதற்காக எழுதப்படவில்லை, இந்த விடயத்தை இன்னுமொரு கோணத்தில் இப்படியும் பார்க்கலாம் என தெளிவுபடுத்தவே எழுதப்பட்டது )   தனிப்பட்ட முறையில் அதிருப்தி உள்ளவர்கள் உங்கள் முறைப்பாடுகளை குறிப்பிட்ட படத்தின் மூலையில் உள்ள Report வசதி மூலமாக முறைப்பாடு செய்ய முடியும். மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள இணைப்பை பார்க்கவும்.

1 comment:

  1. புகையிரதம் அறிமுகமானபோது அதற்கு கல்லை வீசியவர்களும் உண்டு. பேசும் படம் அறிமுகமானபோது அது வேண்டாம் என்று கோஷமிட்டவர்களும் இருந்தார்கள். கேபிள் தொலைக்காட்சிக்கு எதிராக பேரணி நிகழ்த்திய பெரும் இயக்குனர் சிகரங்களே இருந்தார்கள்.

    புதிதாக ஒரு தொழிநுட்பம் அறிமுகமாகும்போது இத்தகைய சலசலப்புகள் சகஜமானதுதான். அது வெற்றிகரமானதாக இருந்தால் நிலைத்திருக்கும். இல்லையென்றால் வந்த சுவடுகூட இல்லாது மறைந்துபோகும்.

    அறிவியல் தொழினுட்ப வசதிகள் அதிகரித்தால் வாழ்க்கை முறையும் மாறத்தான் செய்யும். இணையத்தளங்கள் வந்ததும் பார்த்துப் பிரதி செய்யப்பட்ட பல திரைப்படங்களின் உண்மைகள் அம்பலமானதுபோல இதுவரை காலமும் பசப்பிக்கொண்டிருந்த பல ஆன்மீக, லௌகீக புருடாக்களின் சாயம் வெளுத்துப்போகும்.

    ReplyDelete

Powered by Blogger.