Header Ads



அஷ்ரபின் குடும்பத்துக்கும், SLMCகும் இடையில் தலைதூக்கியுள்ள பனிப்போர்

-எம்.எஸ்.எம். ஐயூப்- பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் நிலவிய பனிப்போரொன்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. ஆனால், இம்முறை அது அநாவசியமான சர்ச்சையாகவே முன்வந்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் காலஞ்சென்ற எம்.எச்.எம்.அஷ்ரபின் குடும்ப அங்கத்தவர் ஒருவருக்கும், அவர் தோற்றுவித்து வளர்த்தெடுத்த கட்சியின் தலைவர்களுக்கும் இடையிலேயே இந்தப் பனிப்போர் உருவாகியிருக்கிறது. அதுவும், அஷ்ரப் வாழ்ந்த காலத்தில், அவரது அரசியல் இலட்சியமாக இருந்தது என்ன என்பது தொடர்பாகவே இந்தச் சர்ச்சை உருவாகியிருப்பது ஒருவகையில் விசித்திரமானதும் விந்தையானதுமாகும். கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி, காத்தான்குடியில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது, முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் வெளியிட்ட கருத்தொன்றையடுத்தே இந்தப் பனிப்போர் மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இருக்கும் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் பிரதேசங்களை ஒன்றிணைத்த முஸ்லிம் மாகாண சபையே முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாகும் என சேகுதாவூத் அந்தக் கூட்டத்தின் போது கூறியிருந்தார். தமது கட்சியின் ஸ்தாபகத் தலைவரின் நிலைப்பாடும் அதுவாகவே இருந்தது எனவும் அவர் அப்போது கூறியிருந்தார். அதுதான் இம்முறை பனிப்போரின் வெளிப்பாட்டுக்கான ஆரம்பம். சேகுதாவூதின் கருத்தானது, தற்போது முஸ்லிம் காங்கிரஸின் உத்தியோகபூர்வக் கருத்தாக இருக்கிறது போலும். ஏனெனில், அதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலியும் இக் கருத்தை ஆமோதித்து, தமது கட்சி அக்கருத்தை அரசியலமைப்புத் திருத்தத்துக்கான மக்கள் அபிப்பிராயங்களைத் திரட்டும் குழுவிடமும் தெரிவித்துள்ளதாகக் கூறியிருந்தார். ஆனால், பெப்ரவரி 22ஆம் திகதி அஷ்ரபின் மகன் அமான், சேகுதாவூதின் கருத்தை விமர்சித்து, சேகுதாவூத்துக்குக் கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அது, 23ஆம் திகதி பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது. தமது தந்தை, ஒரு வகையிலும் பிரியாத ஐக்கிய இலங்கையையே வலியுறுத்தினார் என அமான் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். சேகுதாவூத், மாகாண சபையைக் கேட்கும் போது, அதனை விமர்சிக்கும் வகையில் தமது தந்தை நாட்டுப் பிரிவினையை கோரவில்லை என அமான் கூறுவது, மாகாண சபையென்றால் நாட்டுப் பிரிவினையாகும் என்று அவர் கருதுவதையே சுட்டிக் காட்டுகிறது. இது, தென் பகுதி இனவாதிகளின் கருத்தேயல்லாமல் வேறொன்றுமல்ல. மாகாண சபைகள் உருவாகி 28 ஆண்டுகளாகியும் தென்பகுதியில் தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச. சம்பிக்க ரணவக்க மற்றும் உதய கம்மன்பில போன்றோர்கள் இன்னமும் மாகாண சபைகளால் நாடு பிரியும் என்று கூறிக் கொண்டு திரிகிறார்கள். மாகாண சபைக் கோரிக்கையை மட்டுமன்றி, கல்முனையைத் தனி மாவட்டமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என அஷ்ரபும் அவரது மறைவின் பின்னர் அவரது மனைவி பேரியலும் கோரிய போதெல்லாம், தென் பகுதி இனவாதிகள் அதனை நாட்டை துண்டாட மேற்கொள்ளும் முயற்சியாகவே சித்திரித்தனர். அம்பாறை மாவட்டத்தில் வாழும் சிங்களம் தெரியாத தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள், தமது அலுவல்களைச் செய்து கொள்ள அம்பாறை கச்சேரிக்குச் சென்று படும் கஷ்டங்களுக்குத் தீர்வாகவே, அஷ்ரபும் பேரியலும் அக்காலத்தில் கல்முனைக்குத் தனி மாவட்ட அந்தஸ்தைக் கோரினர். அதனையாவது, தென் பகுதி இனவாதிகள் உணரவில்லை. மாகாண சபையென்றால் நாட்டுப் பிரிவினை என அஷ்ரப் ஒருபோதும் கூறவில்லை. அவர், அக்கருத்தை வெளியிட்டவர்களை விமர்சித்தவர். அதேவேளை, அஷ்ரப் ஒருபோதும் அதிகார பரவலாக்கலையும் அதன் கீழ் முஸ்லிம்களுக்கும் அதிகாரம் பரவலாக்கப்படவேண்டும் என்ற கருத்தையும் கைவிடாமலே இருந்தவர். தற்போதுள்ள மாகாண சபை முறையல்ல, அதற்கு அப்பால் செல்லும் பிராந்திய சபையே அஷ்ரப் தமது இறுதிக் காலத்தில் வலியுறுத்திய கருத்தாகும். 2000ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி மாவனல்லை அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தென்றில் அஷ்ரப் உயிரிழந்தார். அவரது மறைவுக்குச் சரியாக ஒன்றரை மாதங்களுக்கு முன்னர், 2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3ஆம் திகதி அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, அவர் இறுதிக் காலத்தில் சமஷ்டி முறையை ஆதரித்தார் என்பதற்குச் சான்றாகும். அன்று, அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, புதிய நகல் அரசியலமைப்பொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன் மூலம் ஒற்றையாட்சி என்ற சித்தாந்தம் வலியுறுத்தப்படவில்லை. அதில் இனப்பிரச்சினைக்காக முன்வைக்கப்பட்டிருந்த தீர்வுத் திட்டமானது, தாம் 1995ஆம் ஆண்டு முன்வைத்த தீர்வுத் திட்டமே தான் என சந்திரிகா அதனை முன்வைத்து உரையாற்றும்போது கூறினார். 1995ஆம் ஆண்டுத் திட்டத்தின் மூலம், இலங்கை ஒற்றையாட்சி உள்ள நாடாகவன்றி பிராந்தியங்களின் ஒன்றியமாகவே (Union of Regions) குறிப்பிடப்பட்டு இருந்தது. அதேபோல், தாம் 2000ஆம் ஆண்டு சமர்ப்பித்தது, சமஷ்டி அரசியலமைப்பொன்றே என்பதை சந்திரிகா ஒருபோதும் மறைக்கவில்லை. அன்று அந்த நகல் அரசியலமைப்பைச் சமர்ப்பித்துவிட்டு சந்திரிகா நாடாளுமன்றத்திலிருந்து சென்றுவிட்டார். அதன் பின்னர், அன்று முழு நாளும் எதிர்க்கட்சியின் வாதங்களை முறியடித்து, அந்த நகல்; சமஷ்டி அரசியலமைப்பை பாதுகாத்துத் தனித்து நின்று வாதாடியவர் அஷ்ரபே. அது, ஹன்சாட்டில் பதியப்பட்ட உண்மை. சமஷ்டி முறையோ, மாகாண சபைகளோ நாட்டுப் பிரிவினையல்ல என்பதை அஷ்ரப் நன்றான உணர்ந்து இருந்தார். 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்து களமிறங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் கல்முனைத் தொகுதிக்குப் போட்டியிட்ட ஏ.எம் சம்சுதீனுக்கு ஆதரவாக அஷ்ரப் பிரசாரம் செய்தார். அதில் ஒரு கூட்டத்தின் போது 'அண்ணன் அமிர்தலிங்கத்தினால் தமிழீழத்தைப் பெற்றுத்தர முடியாது போனால், தம்பி அஷ்ரப் அதனைப் பெற்றுத் தருவான்' என அஷ்ரப் சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டு இருந்தார். அதனைத் தவிர, அதன் பின்னர் அஷ்ரப் ஒருபோதும் தனி நாட்டுக் கொள்கையை ஆதரிக்கவில்லை. ஆனால், தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்படுமானால் மட்டுமே முஸ்லிம்களுக்கும் அவ்வாறானதொன்றை வழங்குவது நியாயமாகும் எனத் தமது தந்தை கூறியிருந்ததாக அமான் தமது கடிதத்தில் கூறியிருக்கிறார். அதாவது தமிழர்களுக்கு தனி நாடு வழங்குவதை அஷ்ரப் எதிர்க்கவில்லை என்றும் ஆனால், அவ்வாறு தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்படுமேயானால் மட்டும், முஸ்லிம்களுக்கும் தனி நாடு வழங்கப்பட வேண்டும் என்று தமது தந்தை கோரியதாகவும் அமான் கூறுகிறார். அமான் எந்த ஆதாரத்தைக் கொண்டு இக் கருத்தை முன்வைக்கிறார் என்பது தெளிவாகவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பத்திலிருந்தே அஷ்ரபுடனும் மு.கா.வுடனும் தொடர்பு வைத்திருந்த ஊடகவியலாளர்களான நாம், அஷ்ரப் இவ்வாறாவது தமிழர்களின் தனி நாட்டுக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் என்பதை அறிந்திருக்கவில்லை. நாம் அறிந்தவரையில், மு.கா.வும் மு.கா. தலைவர் என்ற முறையில் அஷ்ரப்பும் ஒருபோதும் தமிழர்களின் தனி நாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவும் இல்லை, நியாயப்படுத்தவும் இல்லை. அதனை நிபந்தனையாக வைத்து முஸ்லிம்களுக்குத் தனி நாடு கேட்கவும் இல்லை. உண்மையிலேயே முஸ்லிம்கள் தமது அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் வகையில், மு.கா.வை ஆரம்பித்ததன் மூலம் முஸ்லிம் இளைஞர்கள் தனித் தமிழ் நாட்டுக்கான தமிழர்களின் போராட்டத்தில் இணைவதைத் தடுத்தவர் எனப் பலர் அஷ்ரபை இன்றும் பாராட்டுகிறார்கள். ஆயினும், தமிழர்களுக்கு வழங்கப்படுவது முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அஷ்ரப் இருந்தார் என அமான் கூறியிருந்தால், அது உண்மை. 1987ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த அப்போதைய இந்திய வெளிவிவகார அமைச்சர் பி.வி. நரசிம்ம ராவ், இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவரைச் சந்தித்து முஸ்லிம்களின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க அவகாசம் தருமாறு மு.கா. தலைவர் என்ற முறையில் அஷ்ரப் கோரிக்கை விடுத்தார். இந்தியத் தூதரகம் அதற்கு அவகாசம் வழங்கவில்லை. அப்போது அஷ்ரப், அறிக்கையொன்றை விடுத்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு, அங்கு ஒரு மாகாண சபை உருவாகும் பட்சத்தில், அவ்விரு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினருக்குள் மற்றொரு சிறுபான்மையினராவதனால், தமிழர்களுக்கு அதிகாரம் பரவலாக்கப்படுமானால் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் அலகொன்றும் உருவாக்கப்பட வேண்டும் என அஷ்ரப் அதில் குறிப்பிட்டு இருந்தார். அதாவது, தமிழர்களுக்காக மாகாண சபையொன்று உருவாகுமானால் மட்டும் முஸ்லிம்களுக்கும் மாகாண சபையொன்று வழங்கப்பட வேண்டும் என்பதேயாகும். தமிழர்களுக்கு தனி நாடு வழங்கப்படுமானால் முஸ்லிம்களுக்கும் தனி நாடு வழங்கப்பட வேண்டும் என தமது தந்தை கூறினார் என அதனைத் தான் அமான் கூறுகிறார் போலும். நாம் ஏற்கெனவே கூறியதைப் போல், மு.கா.வோ அஷ்ரபோ ஒரு போதும் முஸ்லிம்களுக்கும் மாகாண சபையொன்று வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து விலகவில்லை. ஆனால், மு.கா. கோரிய மாகாண சபையின் வடிவம் அடிக்கடி மாறியுள்ளது. 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மு.கா. என்ற கட்சி ஆரம்பிக்கப்பட்ட போது, அதன் ஆரம்பக் கோரிக்கையாக முஸ்லிம் மாகாண சபையே இருந்தது. கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்ட ஒரு மாகாண சபையே அப்போது கோரப்பட்டது. 1988ஆம் ஆண்டு, மு.கா.வும் குமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டது. அதன் படி, வடக்கு, கிழக்கில் தமிழ் பகுதிகள் உள்ளடங்கும் வகையில் ஒரு மாகாண சபையும் இரு மாகாணங்களில்; நிலத்தொடர்பற்ற முஸ்லிம் பகுதிகள் நிர்வாக ரீதியாக ஒன்றிணைக்கப்பட்டு மற்றொரு மாகாண சபையும் உருவாக்கப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டது. அந்தவகையில், முஸ்லிம்களுக்கும் அதிகாரப் பரவலாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்ட முதலாவது தமிழ் தலைவர் குமார் பொன்னம்பலமே. அதேவேளை, நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாண சபை என்ற எண்ணக்கரு அந்த உடன்பாட்டின் மூலமே உருவாகியது. இனப் பிரச்சினைக்கு, இலங்கை, இந்திய ஒப்பந்தமே தீர்வாகும் என்று ஏற்றுக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஈ.என்.டி.எல்.எப் போன்ற கட்சிகளும் 1990ஆம் ஆண்டளவில் புதிய தீர்;வொன்றைத் தேட ஆரம்பித்தன. அதன்படி, 8 தமிழ் கட்சிகளும் மு.கா.வும் 1990ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தின. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் இரு மாகாண சபைகளை உருவாக்கி அவற்றுக்கு மேல் ஓர் உயர் சபையை (யுpநஒ ஊழரnஉடை) உருவாக்குவது என அப்போது முடிவு செய்யப்பட்டது. ஆனால், தமிழ் முஸ்லிம் சபைகளின் எல்லைகளை நிர்ணயிக்க முற்பட்ட போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக அந்தப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. 1996ஆம் ஆண்டு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆலோசனையின் பேரில் அப்போதைய அரசியலமைப்புத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் தலைமையில் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவான்று நியமிக்கப்பட்டது. அப்போதும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் அக்குழுவில் ஒருமித்த கருத்தை முன்வைப்பதற்காகப் பேச்சுவார்த்தை நடத்தின. மு.கா.உட்பட சுமார் 12 கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் 1990ஆம் ஆண்டு எட்டிய முடிவுக்கே வந்தன. பின்னர் 1990ஆம் ஆண்டு போலவே தமிழ், முஸ்லிம் மாகாண சபைகளின் எல்லைகளைக் கண்டறிய முற்பட்டபோது பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. பின்னர் தான், நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட நகல் சமஷ்டி அரசியலமைப்பை சந்திரிகா சமர்ப்பித்தார். மு.கா. அதன் மூலம் சமஷ்டி முறையையும் ஆதரித்தது. அந்தச் சம்பவத்தை அடுத்து ஒன்றரை மாதங்களில் அஷ்ரப் காலமானார். எனவே, அஷ்ரப் ஒருபோதும் மாகாண சபை முறையையோ முஸ்லிம் மாகாண சபை என்ற எண்ணக்கருவையோ கைவிட்டார் என்று கூற முடியாது. எனவே இப்போது அமானுக்கும் சேகுதாவூதுக்கும் இடையிலான சர்ச்சை அநாவசியமானது. அஷ்ரப் மறைந்தவுடன், மு.கா.வின் தலைமை பதவிக்காக அவரது குடும்ப உறவினருக்கும் மு.கா.வின் தற்போதைய தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான கட்சியின் தலைவர்களுக்கும் இடையில் சண்டை ஆரம்பித்தது. அந்தச் சண்டையில் ஹக்கீம் பிரிவு வெற்றி பெற்றது. ஆனால், பனிப்போர் சில காலமாக தொடர்ந்து பின்னர் மறைந்துவிட்டது. அது இன்னமும் ஓயவில்லை என்பதையே இந்த விவாதம் சுட்டிக் காட்டுகிறது.

No comments

Powered by Blogger.