SLFP க்கு எதிர்ப்பு, விலகப் போவதாக மூத்தவர்கள் எச்சரிக்கை, பரிதாபமாகும் மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி தரப்பிற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தரப்பினால் கடும் எதிர்ப்பு வெளியிட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, முன்னாள் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் நேற்றைய தினம் பங்கேற்ற சுதந்திரக் கட்சியின் கூட்டங்களில் மஹிந்த தரப்பு ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
கிராம மட்டத்தில் நடத்தப்பட்டு வரும் சிறு கூட்டங்களில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றது.
பெத்தேகம பிரதேசத்தில் பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றின் போது, மஹிந்த அமரவீரவிற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது. உரையை கேட்குமாறு நிசாந்த முத்துஹெட்டிகம குழுமியிருந்த மக்களிடம் கோரிய போதிலும், அதனை மக்கள் நிராகரித்திருந்தனர். இதனால் மஹிந்த அமரவீர உரையாற்றாமலேயே மேடையை விட்டு வெளியேற நேரிட்டது. அமைச்சர் மேடையை விட்டு வெளியேறி வாகனத்தில் ஏறிச் செல்லும் வரையில் கூக்குரல் எழுப்பி சிலர் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் கண்டியிலும் மஹிந்த அமரவீரவிற்கு இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.
மானவல்ல பிரதேசத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் கட்சி உறுப்பினர்கள் சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
அமைச்சருக்கு கூக்குரல் எழுப்பி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். திட்டமிட்ட வகையில் இவ்வாறு கூட்டங்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்படுகின்றதா என மைத்திரி தரப்பைச் சேர்ந்தவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
2
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு தோன்றியுள்ளமையை அடுத்து சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் கட்சியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்களான பீலிக்ஸ் பெரேரா, இது தொடர்பில் கருத்துரைக்கையில்,
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த மற்றும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால ஆகியோர் கட்சியின் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இது இடம்பெறாவிட்டால் கட்சியின் உறுப்பினர்கள் விலகிச் செல்வதை தடுக்க முடியாது போய் விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் பியசேன கமகே, முன்னாள் பிரதியமைச்சர்கள் மில்ரோய் பெர்ணான்டோ, சரண குணவர்த்தன ஆகியோர் இதற்கு சமமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை தாம் விரைவில் மரணம் எய்தப் போகின்ற போதும் கட்சி மரணம் எய்தாது என்று முன்னாள் பிரதமர் டி எம் ஜெயரட்ன அண்மையில் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Muthuhetti created the drama against to Mahinda Amarweera
ReplyDelete