Header Ads



மூர்க்கத்தனம் குறையாத ஓலித - SLFP மத்திய குழுவில், மைத்திரி முன் அட்டகாசம்

ஆளும்கட்சியின் முக்கியஸ்தர்கள் குறித்து தாறுமாறாக விமர்சித்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, இறுதியில் வாலைச் சுருட்டிக் கொண்டு ஒளிந்து ஓடிய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த 02ஆம் திகதி இரவு சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுக்கான கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மேல் மாகாண சபை அமைச்சர் சுமித் லால் மெண்டிஸ், தாமரை மொட்டுடன் கூடிய அழைப்பிதழ் ஒன்றை சபையின் கவனத்துக்கு முன்வைத்து அதில் உள்ளவற்றை வாசித்துள்ளார்.

இதன்போது, கோபமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, தான் தாமரை மொட்டுடன் கூடிய கட்சியின் அமைப்புக் கூட்டங்களில் கலந்து கொள்வதை யாரும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன், வேறு கட்சிகளில் இருந்து தவளைகளைப் போன்று சுதந்திரக்கட்சிக்குள் தாவியவர்கள் தற்போது கட்சியின் மூத்த உறுப்பினர்களை விமர்சிப்பதாக குமார வெல்கம கடுமையான வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்.

இதனையடுத்து, அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுக்கும் குமார வெல்கமவுக்கும் இடையில் கடும் வார்த்தைப் போர் நடைபெற்றுள்ளது. எனினும், குமார வெல்கம கூட்டம் முடியும் வரை தொடர்ந்தும் சீறிக் கொண்டே இருந்துள்ளார்.

இந்தநிலையில், கூட்டம் நிறைவடையும் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓலித பிரேமதிரத்ன குமார வெல்கமவின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்க ஆரம்பித்துள்ளார். அவரிடமும் கோபத்தை குமார வெல்கம வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்போது, ஓலித பிரேமதிரத்ன பொறுமை இழந்து குமார வெல்கமவை நோக்கி அடிக்கப் பாய்ந்துள்ளார். குறித்த நேரத்தில், குமார வெல்கம கூட்டத்தின் மத்தியில் எழுந்து பின்நோக்கி வேகமாக நகர்ந்துள்ளார்.

இதற்கிடையே, ஓலித பிரேமதிரத்னவை அமைச்சர் மஹிந்த அமரவீர உள்ளிட்டோர் தடுத்துள்ளனர். இதேவேளை, குமார வெல்கம அங்கிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் கடந்த 2002-2004ஆம் ஆண்டு, கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஓலித பிரேமதிரத்ன, அப்போது ஒரு விவகாரத்தில் பொலிஸ் நிலையமொன்றுக்குள் அடாவடியாக நுழைந்து பொறுப்பதிகாரியின் கதிரையில் பலவந்தமாக அமர்ந்திருந்தார். இதன் காரணமாக அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டிருந்தார்.

எனினும், இன்று வரை அவரது மூர்க்கத்தனமாக போக்கு மாறாத நிலையில் அவரிடம் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட குமார வெல்கம ஓடியொளியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.