Header Ads



சிக்னல் - Signal


-ஜே. ஜாஹிர் மிஸ்பாஹி-                  

வேடன் ஒருவன் வேட்டையாட காட்டிற்குச் சென்றான். எதிரே, அழகான கொழு கொழு என ஒரு மான் மேய்ந்து கொண்டிருந்தது. வில்லை எடுத்து குறி வைத்தான். மான் தப்பி ஓடியது. துரத்தினான். ஓடியபோது காலில் ஏதோ கடித்தது போன்ற உணர்வு. இருந்தாலும் அவன் கவனிக்கவில்லை. கடைசியில் மானை அடித்து சாய்த்துவிட்டான்.

அவன் காலில் ஏற்பட்ட வலி அதிகரிக்கவே என்ன என்று பார்த்தான். அப்பொழுதுதான் அவனுக்குத் தெரிந்தது தன்னை ஒரு பாம்பு கடித்திருக்கிறது என்று. என்ன செய்வது என்று ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்பே இறந்து கீழே விழுந்தான்.

அந்த வழியாக ஒரு நரி வந்தது. மானும், மனிதனும் மரணித்துக் கிடந்ததைப் பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊறியது. உடனே தனது மனதுக்குள் திட்டம் போட்டது. இதனை எடுத்து நமது குகைக்கு செல்வோமேயானால் மான் கறி ஒரு வாரத்திற்கும், மனிதனின் கறி நான்கு நாளைக்கும் வரும், என்று மனக்கோட்டைக் கட்டியது.

சற்று நேரத்தில் அதன் கண்ணில் வேடன் கொண்டு வந்த வில் தென்பட்டது. என்னவென்று ஆராய்ச்சியில் இறங்கியது நரி. முகர்ந்து பார்த்தது. ஒன்றும் தெரியவில்லை. கடித்துப் பார்ப்போம் என அம்பில் கட்டப்பட்டிருந்த நூலைக் கடித்தது. ஐயோ பாவம்! நூல் அறுந்த வேகத்தில் அம்பு அதனை ஓங்கி அடிக்க உயரமாய் விழுந்து உயிரை விட்டது.

இது மனித வாழ்க்கைக்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டு. மனிதன் பெரிது பெரிதாக மனக்கோட்டை கட்டுகிறான். பங்களா வாங்க வேண்டும், காரில் உல்லாசமாய் பவனி வர வேண்டும், வெளிநாட்டுக்குச் சென்று உலகைச் சுற்றி வர வேண்டும் என்றெல்லாம் கற்பனையை வளர்த்துக் கொள்கிறான். ஆனால் சிலருக்கு அதற்கு முன்னரே மரணம் முந்திக் கொள்கிறது.

வாழ்வின் பல கற்பனைகளோடு புது மனைவியோடு உல்லாசமாயத் தேனிலவு செல்கிறான். சிலருக்கு அதுகூட பரிதாபமாய் முடிந்து விடுகிறது. பல கனவுகளோடு வெளிநாடு செல்கிறான். நஷ்டப்பட்டுத் திரும்புகிறான். அல்லது பணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மனைவி மக்களுக்கு அவனது பிணமே வந்து சேருகிறது.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனை அழகிய முறையில் சமுதாயத்திற்கு விளக்கினார்கள். ஒருநாள் தோழர்களுக்கு மத்தியில் உரையாடிக் கொண்டிருக்கையில் மூன்று குச்சிகளை எடுத்தார்கள். ஒன்றை ஓர் இடத்தில் நட்டினார்கள். மற்றொன்றை அதன் அருகாமையில் நட்டினார்கள். மூன்றாவது குச்சியை சற்றுத் தொலைவில் நட்டினார்கள்.

பிறகு சொன்னார்கள், ‘இதுதான் மனிதன். தூரத்தில் இருக்கும் குச்சியோ அவனது மேலெண்ணங்கள். ஆனால், அவன் அதனை அடைவதற்கு முன்னரே அருகாமையில் இருக்கும் மரணம் அவனை பிடித்துக் கொள்கிறது.’

மனிதனின் மேலெண்ணத்திற்கு எல்லையே இல்லை. மனிதன் வயோதிகத்தை அடைய அடைய அவனுடைய ஆசை மட்டும் வாலிபமாகிக் கொண்டே வருகிறது.

ஆனால், நம்மோடு மரணம் நெருங்கியிருக்கிறது என்பதை ஏனோ அவன் உணர்வதில்லை.

சரித்திரத்தைத் திருப்புங்கள். கற்பனைக்கோட்டை கட்டியவர்களெல்லாம் அதனை அடைவதற்கு முன்னரே இறந்து போனார்கள் என்பதை உணர முடியும்.

‘நான் சுவர்க்கத்தைக் கட்டுவேன்’ என்று உறுதி கொண்டு கோடான கோடி முதலீட்டில் பல வருடங்களாக பல்லாயிரக்கணக்கான நபர்களின் கடின உழைப்பில் ஓர் பிரம்மாண்டமான அதிக சுகபோகமிக்க பூலோக சுவனத்தைக் கட்டினான் ஹாமான். ஆனால் அதனுள்ளே செல்வதற்கு முன்னரே மரணத்தை எய்தி விட்டான்.

கஃபாவை இடித்துவிட்டு, உலகிலேயே ஹஜ்ஜு செய்வதற்கு தகுதியான ஒரே கட்டிடம் நான் கட்டிய கட்டிடமாகத்தான் இருக்க வேண்டும், உலக மக்கள் அனைவரும் தரிசிக்கும் நாடாக எனது நாடே திகழ வேண்டும், அதற்கு ஒரே மன்னனாக நானே ஆக வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு கஃபாவை இடிக்க யானைப்பட்டாளத்தோடு வந்த ஆப்ரஹாம் மன்னனின் கதை என்ன ஆனது? சுவைத்துத் துப்பப்பட்ட வைக்கோலைப் போன்று ஆகிப்போனான்.

மக்களைத் திரட்டிக்கொண்டு எனக்கு எதிராகச் செயல்படும் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களையும், அவர்களது கூட்டத்தாரையும் அழித்தொழித்து எதிரி இல்லா சர்வாதிகாரியாகத் திகழ வேண்டும் என மனக்கோட்டைக் கட்டிய ஃபிர்அவ்ன் நிலைமை? நைல் நதியில் அல்லவா மூழ்கடிக்கப்பட்டு இறந்து போனான்!

‘அந்த ஆண்டவனே நினைத்தாலும் இதனை ஒன்றும் செய்துவிட முடியாது’ என்று சவால் விட்டார் டைட்டானிக் கப்பலைத் தயாரித்தவர். அதன் நிலை என்னவாயிற்று? சென்ற இடம் புல் முளைத்துவிட்டது.

( இந்த இடத்தில் அவசியம் கருதி ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்லியே தீரவேண்டும். தமிழகத்தில் சிலர், குறிப்பாக அரசியல்வாதிகள் அடிக்கடி உதிர்க்கும் ஒரு சொல் ‘ஆண்டவனே வந்தாலும் எங்களை அசைக்க முடியாது!’ இப்படிச் சொல்கின்றவர்களைவிட வடிகட்டிய அறிவிலிகள் வேறு எவரும் இருக்க முடியாது. ஏனெனில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை எந்த மனிதனாலும் அருதியிட்டு உறுதிகூற முடியாது. இறைவன் படைத்த அற்பமான கொசுவுக்குக்கூட அவன் அசைந்து கொடுத்துத்தான் வாழ வேண்டியிருக்கிறது. இந்த வாய்ச்சவடால் பேச்சுக்கு மனிதன் தகுதியானவன்தானா? அந்த அளவுக்கு பலமுள்ளவனா? இந்த அகங்காரப்பேச்சுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பதை அவன் அறிவானா? இந்த லட்சணத்தில் மேற்கண்ட வெற்றுக்கூச்சல் தேவைதானா? இன்ஷ அல்லாஹ், நாளை வெளிவரும் ‘ஆண்டவனே வந்தாலும் அசைக்க முடியாது!’ கட்டுரையில் இதன் விரிவாக்கத்தைக் காணலாம்.- adm. nidur.info )

சரித்திரக் குறிப்புகள் நீண்டுகொண்டே போகின்றது. மனிதன் நினைப்பது ஒன்று, நடப்பது வேறொன்று. இது இறைவனால் வகுக்கப்பட்ட இயற்கை நியதி. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது மனிதனக்குத் தெரியாது.

விஞ்ஞானத்தின் உச்சியை அடைந்திருக்கும் மனிதன் தனது எல்லா சக்திகளையும் பயன்படுத்தினாலும் அடுத்த நிமிடம் நடக்கப்போவதை அவன் விளங்க முடியாது. இதனால்தான் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், ‘நீங்கள் மரணிப்பதற்கு முன்னால் மரணித்துக் கொள்ளுங்கள்’ என்று. இதன் கருத்து எந்நேரமும் மரணத்திற்குத் தயாரான நிலையில் வாழுங்கள் என்பதாகும்.

இன்று எத்தனைப்பேர் அப்படி வாழ்கிறார்கள்? நூறு வயது வயோதிகன் கூட ஆசை அடங்காமல் ‘வயாக்ரா’வை தேடிக் கொண்டிருக்கிறான்.

சம்பாதித்தது போதும், இனி முழுமையாக தீனியாத்தில் இறங்கிவிடுவோம் என்று நினைப்பது எத்தனைப் பேர்? நரை என்பது மனிதனுக்கு இயற்கை காட்டும் ஓர் சிக்னல். ஏ மனிதா! உனக்கு நேரம் நெருங்கி விட்டது, இனிமேலாவது உஷாராக இரு என்று!

ஏனென்றால், சிறுவயதில் ஏதாவது பிழை ஏற்பட்டுவிட்டால் அது சிறுபிள்ளைத்தனம் என அதனை தட்டிக் கழிப்பதற்கு ஒரு லேசான வாய்ப்புண்டு. ஆனால் வயோதிகனுக்கு அந்த வாய்ப்பு அறவே கிடையாது. ஒரு தவறைச் செய்து விட்டு அவர் சொல்லும் தங்கடத்ததை மக்கள் மட்டுமல்ல இறைவனேகூட ஏற்றுக்கொள்ள மாட்டான்.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், ‘அறுபது வயது வரை வாழ்ந்தும் திருந்தாதவன் கூறும் தங்கடத்தை இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை.’

ஆனால் இவனோ நரையை மறைக்க ‘டையை’ தேடுகின்றான்! மனக்கோட்டைக் கட்டுவதை நிறுத்திவிட்டு சுவனத்தில் நம் பேரில் ஒரு கோட்டையைக் கட்டுவதற்கு அமல் செய்வோமாக.

( சுவனத்தில் அதிகமான மாடமாளிகைகள் - கோட்டைகள் கிடைக்க ஸ_ரத்துல் இக்லாஸ்’ எனும் ‘குல்ஹுவல்லாஹு அஹது’ ஸூராவை அதிகமதிகமாக ஓதுங்கள். – அல் ஹதீஸ் )

2 comments:

  1. இதில் இடப்பட்டிருக்கும் ஹதீஸ்களுக்கு ஆதாரமும் இட்டால் நன்றாக இருக்கும்..

    ReplyDelete
  2. சிந்திக்கவைக்கும் சிறப்பான துளிகள்!
    மறதியிலும் மரணத்தை மறக்காதிருப்போம்!

    ReplyDelete

Powered by Blogger.