இலங்கையில் உள்ள IS பயங்கரவாத, ஆதரவாளர்களை கைதுசெய்யுங்கள் - ஜனாதிபதிக்கு கடிதம்
-ARA.Fareel-
ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் தடைசெய்து இங்கிருக்கும் ஐ.எஸ் ஆதரவாளர்களைக் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் முஸ்லிம்கள் தொடர்பில் அந்தந்த நாடுகளிடமிருந்து அறிக்கைகளைப் பெற்று தூதரகங்கள் மூலம் அவர்களைக் கண்காணிக்கும் படியும் சிங்கள ராவய அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கோரியுள்ளது.
ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தின் பிரதி உளவுப்பிரிவினருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் இவ்வேண்டுகோளை ஜனாதிபதியிடம் விடுத்துள்ளார்.
தற்போது ஐ.எஸ். தீவிரவாதத்திலிருந்தும் பாதுகாத்துக் கொள்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்லும் முஸ்லிம்கள் அங்கு தொழில் வழங்குநர்களிடம் தொழில் செய்கின்றார்களா? இன்றேல் அங்கிருந்தும் இடம்மாறிப் போயுள்ளார்களா?என்பது தொடர்பில் அரசு ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஏனென்றால் இவ்வாறு மத்தியகிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்பவர்கள் அங்கிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொள்கிறார்கள். எனவே அரசாங்கம் தூதுவராலயங்கள் மூலம் அவர்களை கண்காணிக்க வேண்டும்' என்று கோரியுள்ளார்.
அக்மீமன தயாரத்ன தேரர் இதுதொடர்பில் கருத்து வெளியிடுகையில், ' உளவுப் பிரிவினர் இலங்கையின் ஆறு பிரதேசங்களில் ஐ. எஸ். ஆதரவாளர்கள் இருப்பதாகவும் மொத்தம் 45 பேர் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சிங்கள ராவய அமைப்பு இரு வருடங்களுக்கு முன்பே இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாதம் நிலைகொண்டுள்ளதாக அரசாங்கத்தை எச்சரித்திருந்தது. தர்கா நகர் கலவரத்தின் பின்னணியில் ஐ.எஸ். ஆதரவாளர்களே செயற்பட்டார்கள். அவர்கள் பள்ளிவாசலுக்குள் ஆயுதம் தரித்திருந்தார்கள்.
இந்த விபரங்களை நாம் வெளியிட்டோம் அரசாங்கமும் உளவுப் பிரிவினரும் இதைத் தேடிப் பார்க்க வேண்டுமெனவும் கோரினோம்.
வில்பத்து பிரதேசத்தில் வெளிநாட்டவர் புதிய மொழி பேசுபவர்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள் என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தோம். ஐ.எஸ். தீவிரவாதத்துக்கு எதிராக செயற்படும் அமெரிக்க, ரஷ்ய நாடுகளின் இலங்கையிலுள்ள தூதுவர்களை சந்தித்து நாம் அவர்களைப் பாராட்டியதுடன் நன்றிகளையும் தெரிவித்தோம்.
மாலைதீவிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் வியாபார நோக்கில் வருவதாகக் கூறி ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கைக்குள் பிரவேசிக்கிறார்கள். கொழும்பிலிருந்து சிரியாவுக்கு செல்லும் முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். புடைவை வியாபாரம் என்ற பின்னணியில் வருகை தரும் இவர்கள் இங்கு காணிகள் வாங்கி வாழ்ந்தும் வருகிறார்கள்.
எமது உளவுப் பிரிவினர் இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டு முஸ்லிம்கள் தொடர்பிலும் அவர்களுடன் உறவுவைத்துள்ள முஸ்லிம் இளைஞர்கள் தொடர்பிலும் தீவிர கவனம் செலுத்தி அவர்களது நடவடிக்கைகளை ஆராய வேண்டும்.
ஐ.எஸ். அமைப்பை தடைசெய்வதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்றார்.
Post a Comment