அமெரிக்க தாக்குதலில், IS தீவிரவாத இயக்க மூத்த தளபதி பலி
ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் அதனை இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
சிரியாவில் மேலும் பல பகுதிகளை கைப்பற்றுவதற்கு ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கான போர்திட்டத்தை வகுத்து தருவதில் வல்லவனாக அறியப்பட்ட ‘ஒமர் தி செச்சென்’ என்ற பட்டப்பெயர் கொண்ட அபு உமர் அல் ஷிஷானி என்பவனை கொல்ல அமெரிக்கப் படைகள் தேடிவந்தன.
முன்னாளில் சோவியத் யூனியனோடு இணைந்திருந்த ஜார்ஜியா பகுதியில் கடந்த 1986-ம் ஆண்டு பிறந்த ஷிஷானி, ஐ.எஸ். தலைவன் அபுபக்கர் பக்தாதியின் போர் ஆலோசகராக விளங்கிவந்ததாக நம்பப்படுகிறது. ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் போர்மந்திரியாகவும், மூத்த தளபதியாகவும் இருந்துவந்த இவனது தலைக்கு அமெரிக்கா 50 லட்சம் டாலர்களை பரிசாக அறிவித்திருந்தது.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிடிக்கப்படும் வெளிநாட்டினரும், உள்நாட்டு எதிர்ப்பாளர்களும் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள ரக்கா நகரில் உள்ள ஒரு ரகசிய சிறையில் அடைத்துவைத்து சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இந்த சிறைசார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் ஷிஷானியின் மேற்பார்வையில்தான் நடந்து வந்தன.
இந்தநிலையில், கடந்த நான்காம் தேதி இவனது இருப்பிடத்தை குறிவைத்து அமெரிக்க விமானப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் அபு உமர் அல் ஷிஷானி உயிரிழந்ததாக நம்பப்படுவதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
Post a Comment