"HIV வதந்தி" சிறுவனுக்கு அடைக்கலம், கொடுக்க முன்வந்த முஸ்லிம் பாடசாலையின் முன்மாதிரி
-விடிவெள்ளி-
குளியாபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த ரொஹான் டில்சார எனும் சிறுவனுக்கு எயிட்ஸ் இருப்பதாக பரவிய வதந்தி காரணமாக அவன் கல்வி கற்று வந்த அப் பிரதேச பாடசாலையிலிருந்து விலக்கப்பட்டமை தொடர்பான தகவல்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள்
தற்சமயம் குறித்த சிறுவனின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. கண்டி திருத்துவ கல்லூரியில் ரொஹான் டில்சாரவை இணைத்துக் கொள்ளும் பொருட்டு நேற்று முன்தினம் கல்வி அமைச்சினால் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இச் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பான தகவல்கள் வெ ளியானதையடுத்து அச் சிறுவனை தமது பாடசாலையில் இணைத்துக் கொள்வதாக குருநாகல் ஸாஹிராக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் மஸாஹிம் (நளீமி) சமூக ஊடங்கள் வாயிலான அறிவிப்பொன்றை விடுத்திருந்தார்.
எனினும் பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரி மற்றும் கண்டி திரித்துவ கல்லூரி என்பனவும் குறித்த சிறுவனை தமது பாடசாலைகளில் இணைத்துக் கொள்ள முன்வந்திருந்ததால் குருநாகல் ஸாஹிரா கல்லூரியின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.
இந் நிலையில் ஒரு முஸ்லிம் பாடசாலை என்ற வகையில் குருநாகல் ஸாஹிரா கல்லூரி குறித்த மாணவனை இணைத்துக் கொள்ள முன்வந்தமைக்கான காரணம் என்ன என்று கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் மஸாஹிம் (நளீமி) யை விடிவெள்ளி தொடர்பு கொண்டு வினவியது.
இந்த மாணவனை இணைத்துக் கொள்ளுமாறு யாரேனும் உங்களிடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்தார்களா?
இல்லை.
சமூக ஊடங்களில் இந்த மாணவன் பாடசாலையிலிருந்து விலக்கப்பட்டமை பற்றிய செய்திகளை நான் அறிந்து கவலைப்பட்டேன். எனது நண்பர்கள் சிலரும் என்னைத் தொடர்பு கொண்டு நீங்கள் ஏன் இந்த மாணவனை உங்கள் பாடசலையில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று என்னிடம் கேட்டார்கள். அவர்களது கோரிக்கை சரி எனப்பட்டதால் நானும் அதற்கான சம்மதத்தினை பேஸ் புக் மூலமாக தெரிவித்தேன்.
எயிட்ஸ் நோய் பற்றிய வதந்தியினால் அம் மாணவனுக்கு குளியாபிட்டி பாடசாலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் என்ன நம்பிக்கையில் அந்த மாணவனை சேர்த்துக் கொள்ள நீங்கள் சம்மதம் வெளியிட்டீர்கள்?
முதலில் இந்த விடயம் ஓர் வதந்தி என்ற அடிப்படையிலும் எயிட்ஸ் நோய் என்றால் என்ன என்பது பற்றிய பூரண தெளிவு எனக்கிருக்கிறது என்ற அடிப்படையிலுமே நான் இதற்கான சம்மதத்தை வெ ளியிட்டேன்.
இந்த விடயத்தை நாம் மனிதாபிமான அடிப்படையிலேயே நோக்க வேண்டும். ஒரு மாணவனின் கல்வி உரிமையை எந்தக் காரணம் கொண்டும் எவராலும் மறுக்க முடியாது. இந்த நாட்டில் எந்தவொரு பாடசாலையிலும் கல்வியைத் தொடர்வதற்கான உரிமை அவனுக்குண்டு.
உங்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் இதனை எதிர்க்கமாட்டார்கள் என்று நம்பினீர்களா?
அதிபர் என்ற வகையில் நான் கடந்த மூன்றரை வருடங்களாக இந்தப் பாடசாலையை மிகச் சிறப்பாக வழிநடாத்தி வருகிறேன். அந்த வகையில் எனக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமிடையில் மிகச் சிறந்த உறவு இருக்கிறது.
நான் என்ன தீர்மானம் எடுத்தாலும் அதனை பெற்றோர் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த துணிச்சலில்தான் இந்த அறிவிப்பை நான் வெளியிட்டேன் என்றார்.
குருநாகல் ஸாஹிரா கல்லூரி அதிபரின் இந்த நிலைப்பாடு தொடர்பில் சமூக ஊடகங்கள் வாயிலாக பலரும் வரவேற்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளனர்.
இன மத மொழி வேறுபாடுகளுக்கப்பால் குறித்த சிறுவனின் கல்வி உரிமையை உறுதிப்படுத்த முன்வைந்தமை குறித்து பெரும்பான்மை இனத்தவர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment