CCTV கெமரா பொருத்தி நவீன முறையில், கள்ளச்சாராயம் - நீர்கொழும்பு பொலிஸ் அதிரடி
-எம்.இஸட்.ஷாஜஹான்-
நீர்கொழும்பு - தளுபத்தை பிரதேசத்தில் நவீன ரக வீடொன்றில் சட்ட விரோதமான முறையில் நீண்ட காலமாக இயங்கி வந்த மதுபானம் தயாரிப்பு நிலையம் ஒன்றை சுற்றி வளைத்து இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாகவும், அங்கிருந்து 21 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய சட்டவிரோத மதுபானங்களையும், உபகரணங்களையும் கைப்பறியள்ளதாகவும் நீர்கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிஹேன - தளுபத்தை பிரதேசத்தில் வசிக்கும் 27 வயது மற்றும் 35 வயதுடைய திருமணமான இரண்டு பேரே கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர். இந்த சுற்றவளைப்பு கடந்த சனிக்கிழமை (5) இடம்பெற்றுள்ளது.
அதுதொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,
குறித்த வீட்டில் சி.சி.டி.வி. கெமரா பொருத்தப்பட்டு வேறு ஒரு இடத்திலிருந்து கண்காணிக்கப்பட்டள்ளது. வீட்டின் முன்பக்க அறை இளம் தம்பதி ஒருவருக்க அவர்களது குழந்தையுடன் வாடகைக்கு வழங்கப்பட்டு யாரும் சந்தேகிக்காத வகையில் சூட்சுமமான முறையில் சட்ட விரோதமாக மதுபானம் தயாரிப்பு இடம்பெற்றுள்ளது.
வீட்டின் இரண்டு அறைகளில் கேஸ் பயன்படுத்தப்பட்டு இந்த சட்ட விரோதமாக மதுபானம் தயாரிப்பு இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து வீடு சுற்றிவளைக்கப்பட்டதாகவும், குறித்த வீட்டின் கடந்த மாத நீர் கட்டணம் 3561 ரூபா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சுற்றிவளைப்பின்போது 2000 டிராம் சட்டவிரோத மதுபானம், 35000 கோடா டிராம், 3 கேஸ் அடுப்புகள், 4 கேஸ் சிலின்டர்கள், டி.சி.எல்0 பக்கட் 25, அலுமினியம் பானைகள் 6, சீனி கிலோகிராம் 50, பரல்33 ஆகியவற்றை பொலிஸார் கைப்பறியுள்ளனர். நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அனுர அபேவிக்ரமவின் ஆலோசனையின்பேரில், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.பி. கமகே, நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன்திலக்க வெலிவிட்ட, நீர்கொழும்பு பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவி;ன் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சாமர பிரதீப் மற்றும் பொலிஸ் குழுவினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் , சட்ட விரோத மதுபானங்களையும் உபகரணங்களையும் கைப்பறியுள்ளனர்.
Post a Comment