Header Ads



“சினத்தில் அறுத்த மூக்கு, சிரித்தாலும் வராது” - அமீர் அலிக்கு, ஸ்ரீநேசன் உபதேசம்


அண்மையில் ஊடகங்கள் மூலமாக பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்‌வரனுக்கு எதிராகவும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் அறிவுமயப்படாத நிலையிலும் உணர்ச்சியவப்பட்டு மலினமான, மட்டரகமான கருத்துகளைக் கொட்டியிருந்தார்.
அதற்காக நாம் அவரைப் போல் ஆத்திரப்படாமல் அறிவு பூர்வமாக பதிலளிக்க வேண்டிய தார்மீக கடமைப்பாட்டினை கொண்டிருக்கின்றோம் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாம் பிரதியமைச்சர் அமீரலியைப் போல் சிந்திக்காமல் அவரது கட்சியையோ, அவர் சார்ந்த எமது சகோதரர்களான முஸ்லிம் சமுகத்தையோ நோகடிக்க விரும்பவில்லை. அவரது தனிப்பட்ட கருத்துகளை அவசரமான கருத்துக்களாக கருதி அவருக்கு மாத்திரம் பதிலளிக்க விரும்புகிறோம்.

தமிழர்களின் போராட்டம் “சைபரில்” ஆரம்பித்து சைபரிலேயே முடிந்ததாக பிரதியமைச்சர் கூறியிருந்தார். இது அவரது சைபர் நிலைப்பார்வையினையே வெளிக்காட்டுகிறது. ஏனெனில் 1987 இல் மாகாணசபை முறை கிடைத்தமை போராட்டத்தின் ஒரு விளைவு என்பதையும், சிறுபான்மை தமிழர்களின் இனப்பிரச்சனையினை சர்வதேச மயப்படுத்தியது, தமிழ் போராளிகளின் போராட்டம் என்பதனையும் பிரதியமைச்சர் அவர்களால் ஏன் விளங்கிக்கொள்ள முடியவில்லை..?

தமிழர்களின் போராட்டம் “சைபரில்” முடிந்தது என்றும், தமிழர்களை “பிச்சைக்காரர்கள்” ஆக்கியது என்றும் மட்டரகமான, மலினமான மொழியினைப் பயன்படுத்தியிருந்தீர்கள். இந்த அரசியல் உங்களை உயர்த்திவிடும் என்று கனவு காண வேண்டாம். நீங்கள் கூறிய அதே பிச்சைக்கார தமிழர்களும் தங்களுக்கு வாக்களித்திருந்தார்கள் என்பதை மறக்க வேண்டாம். இவ்வாறான கருத்துக்கள் எதிர்காலத்தில் தமிழர்களையும், உங்களையும் இரு துருவங்களாக தள்ளுவதற்கு இவ்வாறான வார்த்தைகள் வழிகோலலாம்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை நீங்கள் கேவலப்படுத்த நினைக்காதீர்கள். 2010 தேர்தலில் தோல்வியடைந்து நீங்களும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தீர்கள் என்பதையும், மிகக் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் தமிழர்களின் வாக்குப்பலத்தினால் தான் இம்முறை 2015 இல் தெரிவு செய்யப்பட்டீர்கள் என்பதையும், இவ்வளவு விரைவாக மறந்து விட்டீர்களே.! அந்த மக்களை மடையர்களாக எண்ணி விட வேண்டாம். உண்மையாக கூறுகின்றேன் இதில் இனவாதம் இல்லை. இனிமேலாவது தெளிந்து, தெரிந்து செயற்படுங்கள்.

அபிவிருத்தித் தலைமைக்காக எம்மைச் சார்ந்தவர்கள் “நாக்கு வழித்துத் திரிந்ததாக” கீழ் ரகமான மொழி ஒன்றினை மொழிந்திருந்தீர்கள். இந்த பதத்தினை எந்த அகராதியில் இருந்து தேடிக்கொண்டீர்கள்..?

கடந்த பொதுத்தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினருக்கே மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைமை வழங்கப் போவதாக நல்லாட்சி அரசின் தலைமை அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தமையை மறந்து விட்டீர்களா.?

கடந்த காலத்தில் பல்வேறு நெருக்கடிகளின் மத்தியிலும் விலை போகாமல், சோரம் போகாமல் தொடர்ந்தும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு கொள்கையோடு கூடிய அரசியலையே நாங்கள் செய்து வருகின்றோம். பதவிக்காக எமது மக்களை நாங்கள் பகடைக்காய்களாக உருட்டி விளையாட விரும்பவில்லை. நாங்களும் அமைச்சுப் பதவிகளுக்காக அங்கலாய்த்து நின்றிருந்தால், தங்களைப் போன்றோரின் நிலமை எப்படி  இருந்திருக்கும்.? என நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். நாங்கள் அவசரப்படாததால் பயனடைந்தவர்கள் யார்..? நன்றி அறிதலோடு இதனை மனதில் கொள்ளுங்கள். நாவைத் தொங்கவிட்டு எந்த வேளையிலும் நாம் பதவிக்காக அலையவில்லை. ஆனால் எமது மக்களின் உரிமையோடு கூடிய பல விடங்கள் இருக்கின்றன அவற்றை அடைமானம் வைத்து அமைச்சுப்பதவிகளை அலங்கரிக்க விரும்பவில்லை.

தனி மனிதன் ஒருவன் தவறாக சாடியிருந்தால் அம்மனிதனை நாகரிகமான முறையில் விமர்சிப்பதற்கும், உணர்த்துவற்கும் பாதிக்கப்படவனுக்கு உரிமையுண்டு. அல்லது தவறாகச் சாடியவரின் கட்சிக்கு முறையிட்டு அவ்வாறான பேச்சுகளைத் தவிர்த்துக் கொள்வற்கும், கட்டுப்படுத்துவற்கும் நாகரிக அரசியலில் இடமும் உண்டு. அதனை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சாடுவது என்பது அக்கட்சி சார்ந்த அனைவரையும் எதிரிகளாக்கிக் கொள்கின்ற அல்லது அதிகப்படியான அக்கட்சியின் தமிழ் ஆதரவாளர்களை கொச்சைப்படுத்துகின்ற குதர்க்கமான, குறுகிய சிந்தனையுடைய அரசியலின் அடையாளமாகவே தெரிகிறது. இது முற்போக்கான சகோதர முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் விளங்கும் என நான் கருதுகின்றேன்.

சிந்தித்து விட்டுக்கதைப்பதென்பது சிறப்பான அரசியலின் அடையாளமாகும். கண்டபடி கதைத்து விட்டு சிந்திப்பதென்பது விபரீத அரசியலின் வெளிப்பாடாகும். எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் மேற்படி விடயத்தினைக் கையாண்டு கௌரவமான அரசியலை மேற்கொள்ள வேண்டும் என நான் எதிர் பார்க்கிறேன், இதனை நீங்கள் மட்டுமல்ல அனைவரும் கருத்தில் கொள்ளுவோம்.

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு”, “சினத்தில் அறுத்த மூக்கு சிரித்தாலும் வராது”, “கோபமானாது பாவமாகும்” என்றெல்லாம் தமிழில் பல அறிவுரைகள் உண்டு. இதனை நாம் கடைப்பிடிப்போம். இனிமேலாவது கைதட்டலுக்கும், கலவரத்திற்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது சகலருக்கும் நன்மையளிக்கும்.

இந்த நாட்டில் இன ஐக்கியத்தை எற்படுத்துவற்கு கொந்தளிப்புப் பேச்சுகள் உதவாது, உபத்திரத்தையே தரும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

8 comments:

  1. Dear Minister Broth Ameer Ali,You are from muslim community and educated too, we should think twice before we leave our word from our mouth to anybody,Its not a healthy for us if we hurt anybody's heart, Tamils are also part of our community even we all were suffered by LTTE, The tongue is terrible than dangerous animal if we leave without control as Ali Rali (SW) said, As a muslims we dont want to over pass the Principle of Islam,kindly dont misunderstand, this not advise but humble request from Muslim community, if its true witnessed:

    ReplyDelete
  2. Very polite statement of the Hon.Srinesan

    ReplyDelete
  3. மிகவும் நாகரிகமான வார்த்தைகள்.நன்றி கௌரவ சிரிநேசன் அவர்களுக்கு.

    ReplyDelete
  4. ஒரு நாகரிமான முறையில் சில காட்டமான விடயங்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. அமீர் அலியும், யோகேஸ்வரனும் தங்களை சரிசெய்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். அதுதான் மனிதப் பண்பு. நன்றி திரு. ஸ்ரீநேசன் அவர்களுக்கு.

    ReplyDelete
  5. இதுவல்லோ பண்புசார் மறுப்புரை.

    அமீரலி போன்ற அவசரக்காரர்களும் யோகேஸ்வரன் போன்ற யோக்கியமற்றவர்களும் இவரைப் பார்த்து நாகரீகப்பேச்சு கற்றுக்கொள்ளுங்கள்!

    ReplyDelete
  6. இனவாதம் பேசிய அமீர் அலி அவர்களுக்கு நீங்கள் சொன்ன உபதேசம் சரியானதே. ஆனாலும் யோகேஸ்வரன் mp இனவாதம் பேசியதட்கு உங்கள் உபதேசம் எங்கே?

    ReplyDelete
  7. அமீரலீ போன்றல்லாது நாகரீகமாக நடந்து கொண்டீர்

    ReplyDelete
  8. Ithe advisai.indha pirachanaiayai arambiththa yougrajavukku sonnal nandraha irukkum.

    ReplyDelete

Powered by Blogger.