Header Ads



பகற்கனவான மகிந்தவின் நம்பிக்கை, நீதித்துறையை அச்சுறுத்த முனையும் ராஜபக்சாக்கள்

யோசித கைதுசெய்யப்பட்ட போது, இவரது கைதை எதிர்த்து நாடு முழுவதும் பாரிய மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும் என மகிந்த கருதினார். ஆனால் இவரது இந்த நம்பிக்கையானது பகற்கனவாக முடிந்துபோனது. இவ்வாறு சிலோன் ருடே நாளிதழில் உபுல் ஜோசப் பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி.

ராஜபக்சாக்கள் மற்றும் மைத்திரி-ரணில் அரசாங்கத்திற்கு இடையிலான முறுகல்நிலையானது தற்போது உச்சக் கட்டத்தை அடைந்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களுக்குள் ராஜபக்சாக்களின் ஊழல், மோசடிகள் அனைத்தும் வெளிக்கொணரப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் தெரிவித்துள்ளதுடன் ராஜபக்சாக்கள் அவர்களது வழக்கறிஞர்களுடன் தயாராக இருக்குமாறும் பிரதமர் எச்சரித்துள்ளார்.

ரணில் இந்த எச்சரிக்கையை விடுப்பதற்கு முன்னரும் கூட, தமக்கெதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சட்ட ஆலோசனைகளைப் பெறுவதில் ராஜபக்சாக்கள் நேரத்தைச் செலவிட்டுள்ளனர். சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்களைத் திசைதிருப்பி விடுவதன் மூலம் நீதிச்சேவை மீதான அச்சத்தை ஏற்படுத்துவது மட்டுமே ராஜபக்சாக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஒரேயொரு வழி என சட்ட ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான ஒரு சட்ட ஆலோசனையின் விளைவாகவே ‘ஹைட் பார்க்’ பேரணி இடம்பெற்றது.

யோசித கைதுசெய்யப்பட்ட போது, இவரது கைதை எதிர்த்து நாடு முழுவதும் பாரிய மக்கள் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படும் என மகிந்த கருதினார். ஆனால் இவரது இந்த நம்பிக்கையானது பகற்கனவாக முடிந்துபோனது. முதலாவது நாள் யோசித நீதிமன்றுக்குக் கொண்டு வரப்பட்ட போது, அங்கு ராஜபக்சாவின் விசுவாசிகளில் ஒரு சிலர் மட்டுமே சமூகம் தந்திருந்தனர். இதன்பின்னர் எப்போதெல்லாம் யோசித நீதிமன்றுக்கு அழைத்து வரப்படுகின்ற போதிலெல்லாம், ராஜபக்சாவின் சொற்ப விசுவாசிகளை மட்டுமே அங்கு காணமுடிந்தது. அப்போதுதான் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டால் இந்த நிலைதான் காணப்படும் என்கின்ற உண்மையை மகிந்த உணர்ந்து கொண்டதுடன் இவருக்கு பீதி ஏற்பட்டது.

ஆகவே, ‘ஹைட் பார்க்’ பேரணியானது  நீதித்துறைக்கு எச்சரிக்கை சமிக்கையை அனுப்புவதை நோக்காகக் கொண்டே மகிந்தவால் திட்டமிடப்பட்டது. தற்போதைய அரசாங்கத்தை விட நீதிச்சேவை மீதே மகிந்த அதிக அச்சம் கொண்டிருந்தார். மக்களை சிறையில் அடைக்கவோ அல்லது தடுத்து வைக்கவோ வேண்டாம் எனவும் இதனால் அவர்கள் துன்பப்படுவார்கள் எனவும் மகிந்த இந்தப் பேரணியில் தெரிவித்திருந்தார். இது நீதிச்சேவை மீதான மறைமுகமான அச்சுறுத்தலாகவே நோக்கப்படுகிறது.

ஹைட் பார்க் பேரணியானது பாரிய நிதிச் செலவில் மகிந்த விசுவாசிகளால் ஒழுங்குபடுத்தப்பட்டது. மக்களைக் கொண்டு செல்வதற்கான பேரூந்துகள் வாடகைக்கு ஒழுங்குபடுத்தப்பட்டது தொடக்கம் இடம்பெற்ற பல்வேறு செயற்பாடுகள் பாரிய செலவு மேற்கொள்ளப்பட்டதைச் சுட்டிநிற்கின்றன.

இதற்கும் மேலாக, இந்தப் பேரணியில் பாரியளவிலான மக்கள் கலந்து கொண்டனர் என்பதை உறுதிப்படுத்தும் முகமாக air-space camera தொழினுட்பத்தைப் பயன்படுத்திய முதலாவது அரசியல்வாதிகளாக ராஜபக்சாக்கள் காணப்படுகின்றனர். இவ்வாறானதொரு பேரணியில் அதிக எண்ணிக்கையான மக்கள் வருகைதந்துள்ளனர் என்பதைக் காண்பிப்பதற்காக இதற்கு முன்னர் எவ்வித அரசியற் கட்சிகளாலோ அல்லது பேரணியை ஒழுங்குபடுத்துபவர்களாலோ இவ்வாறானதொரு ஒளிப்பதிவுத் தொழினுட்பம் பயன்படுத்தப்படவில்லை.

மக்களைத் தவறாக வழிநடத்த விரும்பும் எவரும் மேலதிக தொழினுட்பத்தைப் பயன்படுத்த முடியும். ஆகவே, தனக்கு ஆதரவாக ஹைட்பார்க் மைதானத்தில் பெருந்தொகையான மக்கள் பேரணியில் கலந்து கொண்டனர் என்பதைக் காண்பித்து அதன்மூலம் நீதிச்சேவை மீது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மகிந்த மேற்கொண்டார். மேலும் இவர் தனது திட்டங்கள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக கோயில்கள் மற்றும் விகாரைகளில் தேங்காய் உடைப்பு வழிபாட்டிலும் ஈடுபட்டார். சிறிலங்கா அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுவதற்காக மட்டுமல்லாது நீதிச்சேவைக்கும் எச்சரிக்கை விடுவதற்காகவே மகிந்த தேங்காய்களை உடைத்து வழிபாட்டை மேற்கொண்டார்.

அரசாங்கத்திற்கு எதிராகத் தேங்காய்களை உடைத்து வழிபாடு செய்ததால் அரசாங்க அமைச்சர்கள் சிலர் இறந்துள்ளதாகவும் பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் மகிந்த தெரிவித்துள்ளார். மேலும், தனது குடும்பத்தினருக்கு எதிராக தீர்ப்பை வழங்கும் நீதிபதிகள் அதே நிலைமையை எதிர்கொள்ள வேண்டியேற்படும் எனவும் மகிந்த நீதிபதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பேரணிகளை ஒழுங்குபடுத்துதல்:

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பேரணியில் பங்குகொள்வார்கள் என்பதைக் கூறி மக்களை அச்சுறுத்திய முன்னைய அரசாங்கங்களில் முதலாவது தலைவர் திருமதி.சிறிமாவோ பண்டாரநாயக்க ஆவார். அப்போதைய ஜே.ஆர் அரசாங்கத்தால் சிறிமாவின் சிவில் உரிமை பறிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்ற போது அதனை முறியடிப்பதற்காக இவ்வாறானதொரு பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டது. ஆனால் ஜே.ஆர், சிறிமாவின் தந்திரோபாயத்தை தோல்வியுறச் செய்தார். ஜே.ஆர் ஜெயவர்தன தொடர்பான சுயசரிதை நூலில் விபரிக்கப்பட்டுள்ளது:

இதையொத்த தந்திரோபாயங்கள்:

சிறிலங்காவின் கடந்த கால வரலாற்றில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை ஆராய்ந்து இதிலிருந்து எதிர்காலத்திற்கான பாடங்களைக் கற்றுக்கொள்ளும் போது, ஜே.ஆர் போலவே மைத்திரி-ரணில் அரசாங்கமும் ஒரேவிதமான தந்திரோபாயத்தையே பயன்படுத்துகின்றது. இத்தந்திரோபாயமானது மைத்திரி-ரணில் அரசாங்கம், மகிந்த தொடர்பான அச்சுறுத்தல்களை ஒழிப்பதற்கு உதவும்.

யோசித கைதுசெய்யப்பட்ட போது, மகிந்தவின் இளைய மகனான றோகித தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கு தனது முகநூலின் ஊடாக எச்சரிக்கை ஒன்றை வழங்கியிருந்தார். அதாவது ‘அன்பிற்குரிய நல்லாட்சி அரசாங்கமே, நீங்கள் தற்போது சிங்கத்தின் வாலின் மீது நிற்கிறீர்கள். தற்போது இந்தச் சிங்கம் உங்களைத் துண்டு துண்டாக்கிவிடும் என நீங்கள் நினைக்கவில்லையா?’ என்பதே றோகிதவின் முகநூல் எச்சரிக்கையாகும்.

இது ராஜபக்சாக்களின் தற்போதைய பொதுவான போக்கைச் சுட்டிநிற்கிறது. ஆகவே ராஜபக்சாக்களிடமிருந்து எழும் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு எதிராக சட்டங்களை அமுல்படுத்துவதற்கு மைத்திரி-ரணில் அரசாங்கமானது காவற்துறை மற்றும் நீதிச் சேவையை மேலும் பலப்படுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது.

‘எல்லா இடங்களிலும் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களானது நீதிக்கான அச்சுறுத்தலாகும்’ என மார்டின் லூதர் கிங் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.