Header Ads



நம் சமூகம் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றது - உதுமாலெப்பை

(ஏ.எல்.ஜனூவர்)

புதிய அரசியலமைப்பு, தேர்தல் முறைகளில் எதிர் காலத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் விழிப்புணர்வு ஏற்படக் கூடிய வகையில் எழுத்தாளர்களின் படைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

ஒலுவில் வஹாப்தீன் ஆசிரியர் எழுதிய “கலவங்கட்டிகள்” நாவல் வெளியீட்டு விழா ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலயத்தில் அதிபர் எம். சரிபுடீன் தலைமையில் நடைபெற்றது இதன்போது கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்…

தமிழ் சமூகம் தங்களின் உரிமைகளுக்காக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது. ஆயுதப் போராட்டம் தோல்வி அடைந்த போதிலும் தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்காக அரசியல் ரீதியில் ஒற்றுமைப்பட்டு ஜனநாயக ரீதியில் செயல்பட்டு தமது மக்களை ஒன்றினைத்து தமிழ் சமூகத்திற்கான சுதந்திரமான பாராளுமன்ற பிரதிநிதித்துவங்களைப் பெற்றுள்ளனர். இதனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேசம் வரை எடுத்துச் சென்று தங்களின் சமூகத்தின் உரிமைகளையும், யுத்த பாதிப்புகளையும், இனப் பிரச்சினைகளுக்கான இறுதி தீர்வு விடயத்திலும் பல தியாகங்களுக்கு மத்தியில் செயல்பட்டு வருகின்றனர். தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த தமது காணிகளை தற்போது படிப்படியாக மீட்டு வருகின்றனர். இது குறித்து நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்கின்ற விடயத்திலும் ஒற்றுமைப் பட்டு பல அழுத்தங்களை கொடுத்து வருகின்றனர். தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், புத்திஜீவிகள் பெரும் பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர். இப்போதும் இவர்கள் தமிழ் சமூகத்திற்காக தியாகத்துடன் செயற்பட்டு தங்களின் பங்களிப்பினை வழங்கி வருவது பாராட்டப்பட வேண்டியதாகும். யுத்தத்தால் நேரடியாக பெரும் பாதிப்புக்குள்ளான தமிழ் சமூகத்திற்கு அதிகாரங்கள், அபிவிருத்தி பணிகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் முஸ்லிம் சமூகம் எப்போதும் உடன்பாடான நிலைப்பாட்டில் உள்ளது. அதே நேரம் யுத்தத்தினால் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டதுடன் நமது நாட்டில் உள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இனவாதக் குழுக்களின் செயற்பாடுகளினாலும் முஸ்லிம் சமூகம் பாதிப்படைந்துள்ளது,

தமிழ் மக்களின் போராட்டத்திற்கு தமிழ் எழுத்தாளர்கள் வழங்கி வரும் ஒத்துழைப்புக்களை போன்று புதிய அரசியலமைப்பு முயற்சிகளில் முஸ்லிம் சமூகம் எதிர்காலத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சமூகத்தின் மத்தியில் வெளிக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ் சமூகம் போன்று புதிய அரசியலமைப்பு விடயத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம் சிவில் அமைப்பு தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவது குறித்து நாம் சற்று ஆறுதல் அடையக் கூடிய நிலமை ஏற்பட்டுள்ளது. இந்த விடயத்தில் தமிழ் சமூகம் அரசியல் ரீதியாக ஒற்றுமைப்பட்டு பொதுவான இறுதி தீர்மானத்தை எடுக்கும் நிலைக்கு வந்திருப்பது போல் முஸ்லிம் சமூகமும் தனது சமூகத்தின் பொதுவான இறுதி தீர்மானத்தை எடுக்கும் காலகட்டத்திற்கு நாம் வந்துள்ளோம். இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் கருத்து வேற்றுமைகளை மறந்து நமது சமூகத்தின் நலனை முன்னிட்டு ஒரு பொதுவான தீர்மானத்திற்கு வரவேண்டிய நிலமையும் ஏற்பட்டுள்ளது. நமது நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு சிறுபான்மை சமூகம் பாரிய பங்கினை வழங்கியுள்ளது. குறிப்பாக முஸ்லிம் சமூகம் நல்லாட்சி ஏற்படுவதற்கு பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளது. ஆட்சி மாற்றம் ஏட்பட்ட போதும் முஸ்லிம் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த காணிகளையும், பாரம்பரிய விவசாயக் காணிகளையும் இதுவரை மீற்கப்பட நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பது குறித்து நம் சமூகம் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றது. சாதாரன மக்களும் புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக விழிப்புணர்வு பெறும் நிலமையினை நாம் எல்லோரும் இணைந்து ஏற்படுத்த வேண்டும்.

எழுத்தாளர்களின் படைப்புக்களினால் சமூகத்தில் பல மாற்றங்களும், தாக்கங்களும் ஏற்படுகின்றன. இன்றைய நவீன உலகில் வாசிப்பு பழக்கம் மக்கள் மத்தியில் குறைந்து வருகின்றன, மனிதன் தனக்குள் அடங்கி கிடக்கும் எண்ணங்களை, கவலைகளை, எதிர்பார்ப்புக்களை இன்னும் ஒரு மனிதனிடம் சொல்வதற்கும், கேட்பதற்கும் சந்தர்ப்பம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றன. இன்றைய நவீன உலகத்தில் மனிதர்கள் தங்கள் எல்லா நடவடிக்கைகளிலும் புதிய தொழில்நுட்பத்தை பாவித்து வாழும் நிலமை உருவாகி வருகின்றன.

எழுத்தாளர் வஹாப்தீன் ஆசிரியர் பல்வேறு துறைகளிலும், பிரதேச மாவட்ட, மாகாண தேசிய மட்டங்களில் பல வெற்றிகளை பெற்று இருப்பது நமது பிரதேசத்திற்கு கிடைத்த பெருமையாகும். “கலவங்கட்டிகள்” என்ற நாவல் ஊடாக ஒலுவில் மக்களின் பல்வேறு விதமான உணர்வுகளை வெளிக்கொண்டு வந்துள்ளார்.

இந்நிகழ்வில் பாடசாலை சமூகம், அரசியல் பிரமுகர்கள், ஊர் பிரமுகர்கள், அரச உயர் அதிகாரிகள், எழுத்தாளர்கள், பல்வேறுபட்ட பொது இயக்கங்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்ததன் ஊடாக நமது எழுத்தாளர்கள் மகிழ்ச்சி அடைவதுடன், எதிர்காலத்தில் இன்னும் பல நாவல்களை எழுத்தாளர்கள் உருவாக்குவதற்கும் நம்பிக்கையும் பிறந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.