மியான்மர் அதிபர் பதவிக்கு ஆங் சான் சூகியின், சாரதியின் பெயர் பரிந்துரை
மியான்மர் பொதுத் தேர்தலில் வெற்றியடைந்துள்ள அந்த நாட்டின் தேசிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகி, அந்த நாட்டுக்கான அடுத்த அதிபர் பதவிக்குத் தனது கார் ஓட்டுநரும், நெருங்கிய உதவியாளருமான ஹிடின் கியாவின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார்.
ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த மியான்மரில் ஜனநாயகத்தைக் கொண்டு வருவதற்காக ஆங் சான் சூகி போராடி வந்தார்.
அதற்காக, அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் அந்த நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகி-யின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி அபார வெற்றி பெற்றது. மியான்மரின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவர்களின் வாழ்க்கைத் துணைகளோ, பெற்றோரோ அதிபராக முடியாது.
ஆங் சான் சூகி-யின் மறைந்த கணவரும், மகன்களும் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர்கள் என்பதால, தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியின் தலைவராக இருந்தும் ஆங் சான் சூகி-யால் அதிபர் பதவியை ஏற்க முடியாத சூழல் உள்ளது.
இந்த நிலையில், ஆங் சான் சூகி அதிபராவதைத் தடுக்கும் அரசியல் சாசனப் பிரிவை நீக்குவதற்காக, தற்போதைய ராணுவ ஆட்சியாளர்களுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.
இதையடுத்து, மியான்மரின் அடுத்த அதிபர் பதவிக்கு ஆங் சான் சூகி-யின் கார் ஓட்டுநரும், நெருங்கிய உதவியாளருமான ஹிடின் கியாவின் பெயரைப் பரிந்துரைக்கப் போவதாக தேசிய ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் வலைதளத்தில் ஆங் சான் சூகி கூறியதாவது:
வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பையும், கட்சித் தொண்டர்களின் விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
மியான்மர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தேசிய ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மை பலம் உள்ளதால் ஹிடின் கியா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்று கூறப்படுகிறது.
ஹிடின் கியா தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதது மட்டுமின்றி, அண்மையில்தான் அவர் தேசிய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். இருந்தாலும், கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளரின் மருமகனும், கட்சி எம்.பி.யான சூ சூ லிவின்னின் கணவருமாகிய அவரை, கட்சியின் அனைத்துப் பிரிவினரும் அதிபராக ஏற்றுக் கொள்வார்கள் என்று கருதப்படுகிறது.
Post a Comment