Header Ads



ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நாம் ஈமான் கொண்டோரின் பகிரங்க மடல்


ஜனாதிபதி, பிரதமர் அவர்களுக்கு!

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நீங்கள் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்வதையிட்டு முதலில் எமது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன், அம்பாறை மாவட்ட முஸ்லிம்களும் உங்கள் வருகையை மனமுவந்து வரவேற்பதில் யமட்டற்ற மகிழ்ச்சியும் அடைகின்றனர். நல்லாட்சி நிறுவப்பட்டு  சுமார் ஒருவருடம் கழிந்த நிலையில் நீங்கள் இருவரும் இவ்வாறான விஜயமொன்றை அம்பாறை மாவட்டத்திற்கு மேற்கொள்வது அனைத்து தரப்பு மக்களாலும் மறுபக்கம் போற்றவும் படுகின்றது.

நல்லாட்சி அரசு ஆட்சிபீடமேற பூரண ஒத்துழைப்பு வழங்கிய முஸ்லிம் சமுகம் நல்லாட்சி அரசில் மத ஒடுக்குமுறையிலிருந்து ஓரளவு விடுபட்ட நிம்மதியிலும் குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் தாம் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு எதிர்காலத்தில் பூரண ஜனனாயக விழிமியங்களை சுவாசிக்கலாம் என்ற எதிர்பார்ப்பிலும் - நம்பிக்கையிலும் அவர்கள் இருப்பதை இந்த இடத்தில் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் அதிகபட்ச செல்வாக்கை பெற்ற கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் நீங்கள் பிரதம அதிதிகளாக கலந்து கொள்ளவிருப்பது இன்னொரு பக்கம் முஸ்லிம்கள் மத்தியில் தங்களது எதிர்காலம் தொடர்பான எதிர்பார்ப்புக்களையும் தோற்றுவித்துள்ளது. 

தேர்தல் முறை மாற்றம், இனப்பிரச்சினைக்கான தீர்வில் முஸ்லிம்களின் வகிபாகம் போன்ற விடயங்களில் முஸ்லிம்கள் மத்தியில் இன்று ஏற்பட்டுள்ள சந்தேகப் பார்வைக்கு மத்தியிலும் தான் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் உங்களை வாஞ்சையோடு வரவேற்கின்றனர். முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரும் நீங்கள் அப்பிரமாண்ட நிகழ்வில் பங்குகொண்டு பிரதான உரையும் நிகழ்த்தவுள்ளீர்கள். அதன்பிற்பாடு சில அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அறிகின்றோம்.

எனினும் இந்த கட்டிட அபிவிருத்தியல்ல அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு. 

அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மிக நீண்டகாலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் என பலவற்றை அடையாளம் கண்டிருக்கின்றனர். அவ்வாறு இனம் காணப்பட்ட விடயங்களை உங்களுக்கான இந்தக் கடிதத்தில் இறுதிப்பகுதியில் இணைத்துள்ளோம்.
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் உரையாற்றவுள்ள நீங்கள், அவற்றுக்கு ஒரு நிரந்தரமான தீர்வை வழங்கக்கூடிய மழுப்பலற்ற உத்தரவாதத்தை இந்த மாநாட்டில் மிகத் தெளிவாக குறிப்பிடுவதுடன் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமிழ், சிங்கள உறவுகளுடன் முரண்பாடு கொள்ளாமல் சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்வதற்கான தீர்வினை வழங்குவீர்கள், வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பின் அடிப்பiயில் தான் இந்த மடலை உங்களுக்கு எழுதுகின்றோம். 

அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் பல வருடங்களாக எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள்

பொத்துவில் - முஸ்லிம்களின் பூர்வீக காணிப்பிரச்சினை (இறத்தல், கரங்கோ, பொத்தான, தகரம்பொல, உடும்புக்குளம் ஆகிய காணிகள்) முஸ்லிம் மீனவர் பிரச்சினை, பாதுகாப்புத் தரப்பினரால் எதிர்நோக்கும் அசௌகரியங்களை உடன் தீர்த்து வைத்தல்.

அக்கரைப்பற்று - முஸ்லிம்களின் வட்டமடு மேச்சல் தரை மற்றும் விவசாயக் காணிகளை  பெற்றுக் கொடுக்க வேண்டும்

நுரைச்சோலை சுனாமி வீடமைப்புத் திட்டத்தை சுமுகமாக  கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நுரைச்சோலையில் முஸ்லிம்களால் செய்யப்பட்டு வந்த விவசாய நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள பொருத்தமான        தீர்வை வழங்க வேண்டும்.

அட்டாளைச்சேனை - அஷ்ரப் நகரில் உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவத்திரடமிருந்து மீட்டுத் தர வேண்டும்.
ஒலுவில )- துறைமுகத்திட்டத்தினால் பாதிப்படைந்துள்ள முஸ்லிம்களுக்கு உடன் நஷ்டஈட்டை பெற்றுக்கொடுத்தல், கடலரிப்பை தடுக்க உரிய திட்டத்தை வகுக்க வேண்டும்.

சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச சபையை பிரகடனப்படுத்துவதற்கான கால எல்லையை அறிவிக்க வேண்டும்.

சாய்ந்தமருது, கல்முனைக்குடி, இஸ்லாமாபாத் ஆகிய பிரதேச முஸ்லிம்கள் எதிர்நோக்கும் குடியிருப்பு நிலப் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்கான செயலணியை உருவாக்க உத்தரவிட வேண்டும்.


மருதமுனை சுனாமி வீடமைப்புத் திட்டத்தை உண்மையாக பாதிப்புற்ற மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சம்மாந்துறை - அம்பாறை நகருக்கிடைப்பட்ட முஸ்லிம்களின் விவசாயக் காணிப்பிரச்சினையை தீர்க்க வேண்டும்

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் நீங்கள் அந்தக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரபின் மரணத்தில் ஒழிந்துள்ள மர்மத்தை கண்டறிய விஷேட ஆணைக்குழு நியமிக்கப்படும் என்பதற்கான உத்தரவாதத்தை பிரகடனப்படுத்தல்

மேற்சொன்ன பிரச்சினைகள் அனைத்துமே அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் ஆண்டாண்டு காலமாக எதிர்நோக்கும் ஆதங்கங்கள். தேர்தல் காலத்தில் மட்டுமே இந்த ஆதங்கங்கள் அம்பாறை மாவட்ட அரசியல்வாதிகளால் மேடைதோறும் முழங்கப்பட்டு வந்ததேயொழிய காத்திரமான எந்தவொரு திட்டத்தையும் அவர்கள் தேர்தலின் பிற்பாடு எடுக்கவில்லை என்பதையும் மேன்மை தங்கிய உங்கள் இருவருக்கும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி, பிரதேச வாதம், அரச உயர் அதிகாரிகளின் இனவாதப் போக்கு போன்ற காரணிகளால் தான் மேற்சொன்ன முஸ்லிம்களின் பிரச்சினைகள் இன்றுவரை தீர்க்கப்படாமல் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. 

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே!, மாண்புமிகு பிரதமர் அவர்களே! 

அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கி வரும் இப்பிரச்சினைகளானது தீர்க்க முடியாதவை அல்ல. அரசியல் கலப்பில்லாமல் இதய சுத்தியுடன் சிந்திப்போமாக இருந்தால் இப்பிரச்சினைகளுக்கு மிக விரைவில் உரிய தீர்வினைக் காண முடியும். யுத்தத்திற்கு முன்பு விவசாயம் செய்கைப்பண்ணப்பட்டு வந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின்; காணிகள் தமிழ் ஆயுததாரிகளின் அச்சுறுத்தலினால் கைவிடப்பட்டன. ஆனால் யுத்தத்தின் பின்பு இக்காணிகள் முழுவதுமாக முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன.

அதே போன்று முஸ்லிம்கள் யுத்த காலத்தில் வைத்திருந்த பல ஆயிரக்கணக்கான முஸ்லிம் - சிங்கள எல்லைக் காணிகள் இன்று யுத்த முடிவின் பின்பு அவைகளும் முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. இக்காணிகள் இலங்கை மீது படையெடுத்து வந்த வல்லரசு நாடுகளினால் சுவீகரிக்கப்பட்;டவை அல்ல. இலங்கை ஜனனாயக அரசின் அமைச்சுக்களினாலும் திணைக்களங்களினாலுமே  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு காணிகளை இழந்தவர்கள் வறியவர்கள், இக்காணிகளில் விவசாயம் செய்து, மிருகங்களை வளர்த்து அதில் வரும் வருமானத்திலே தமது ஆயுளை ஓட்டியவர்கள். இன்றுவரை இக்காணிகள் இவர்களுக்கு கிடைக்காததினால் இவர்களின் வாழ்க்கை இடிவிழுந்தாற் போல்  உள்ளது. இந்த நிமிடம் வரை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் நல்லாட்சியை ஒரு துளிகூட அனுபவிக்கவில்லை என்ற உண்மையை எழுதுவதையிட்டு கவலையடைகின்றோம்.

இவ்வாறான பிரச்சினைகளை சுமந்த அம்பாறை மாவட்ட முஸ்லிம்களே நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு முன்நின்றவர்கள் . எனினும் அவர்களின் பிரச்சினைகள் இதுவரை உரிய தரப்பினரால் கருத்தில் கொள்ளப்படவில்லை.

நல்லாட்சியின் பிற்பாடு நாட்டில் சமுகங்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள இன ஒற்றுமையும் நல்லாட்சி என்ற சொற்பிரயோகம் அர்த்தப்புஷ்டியாகவும் அமைய வேண்டும் என்றால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் மேற்சொன்ன பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டே ஆக வேண்டும். அவ்வாறின்றேல் இந்த நல்லாட்சி என்பது  கேள்விக்குறியாகவே அம்பாறை மாவட்ட முஸ்லிம்களால் நோக்கப்படும்.

முஸ்லிம் காங்கிரஸின் மாநாட்டில் நீங்கள் ஆற்றப்போகும் உரையில் மேற்சொன்ன பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்ற அபார நம்பிக்கையுடன் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அணிதிரளவுள்ளார்கள் என்பதையும் இந்த இடத்தில் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்;.   

இப்படிக்கு

நாம் ஈமான் கொண்டோர் முன்னணி 

1 comment:

  1. சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயங்கள்.ஆனால் இதில் சுனாமியால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டுத்திட்டத்தில் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருப்பது.இது பிரதமர் ஜனாதிபதியின் குறைபாடல்ல சம்மந்தப்பட்ட பகுதியின் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் கலந்துரையாடி தீர்க்க வேண்டியது.இதன் உண்மைத்தன்மை கீழ் மட்ட கிரா உத்தியோகத்தரிடம் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டிய இலகுவான வேலை.ஆனால் நம் சமுதாயத்தில் உள்ள கண் கெட்ட சில அதிகாரிகளால் உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் பயனடயாமல் புறம் தள்ளப்படுகிரார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.