Header Ads



தள்ளாடுகின்ற நல்லாட்சிக்காரர்களும், துள்ளிக் குதிக்கும் ராஜபக்ஷக்களும்

-நஜீப் பின் கபூர்-

ரீ 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டி காரணமாக அனைவரினதும் கவனம் இந்தியா மீது திரும்பி இருக்கின்றது. எனவே நாட்டில் அனேகம் பேர் கிரிக்கட் பேட்டிகள் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள். கிரிக்கட் ரசிகர்களும் சாதாரண மக்களும் மின்சாரம் சீராகக் கிடைக்காத காரணத்தால் நல்லாட்சியைத் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அரசியலில் ஆர்வமாக இருப்பவர்கள் 17ம் திகதி ராஜபக்ஷ விசுவாசிகளின் ஹைட் பார்க் கூட்டம் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த எதிர்பார்ப்புக்களுடன் கடந்த சில நாட்களாக இருந்தனர்.

எனவே நாடு மின்சாரம் - கிரிக்கட் - ஹைட் பார்க் என்ற வார்த்தைகளையே அதிகம் உச்சரித்துக் கொண்டிருக்கின்றது. 

கடந்த 15,17,19, என்ற நாட்களில் இலங்கையில் முக்கியமான பல அரசியல் கட்சிகள் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர்களை இலக்காகக் கொண்டு 10 இலட்சம் வேலை வாய்ப்புக்களுக்குக் குறுக்கே நிற்காதே என்ற தொனிப் பொருளில் ஒரு கூட்டத்தை கடந்த 15ம் திகதி கொழும்பு - ஹைட் பார்க்கில் ஏற்பாடு செய்திருந்தது. வழக்கம் போல் ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் தொகுதி அமைப்பாளர்களும் கூலிக்கு மார் அடிக்கின்ற ஒரு கூட்டத்தை கொழும்புக்கு அழைத்து வந்திருந்தது. இஞைர்களுக்கு குரல்;; கொடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்ட அந்தக் கூட்டத்திற்கு பெரும்பாலும் முதியவர்களே வந்திருந்தார்கள். வந்தவர்களின் எண்ணிக்கை 5000 முதல் 7000 வரைதான். 

கூட்டம் ஹைட் பார்க் மைதானத்தில் என்று சொல்லப்பட்டாலும் போதிய ஜனம் அங்கு வந்து சேராத காரணத்தால் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் லிப்டன் சுற்று வட்டாரத்துக்கு போய் சம்பிரதாயத்துக்கு சில கோஷங்களை ஏழுப்பிவிட்டு, அங்கிருந்து ஸ்கெப்பாகி இருக்கின்றார்கள். எந்த வகையிலும் உணர்வுபூர்வமான ஒரு கூட்டமாக இது அமைந்திருக்கவில்லை.  

ராஜபக்ஷ விசுவாசிகளின் கூட்டம் திட்டமிட்ட படி 17ம் திகதி  ஹைட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. அவர்கள் எதிர்பார்த்தது போல் பெரும் எண்ணிக்கையானவர்கள் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். எமது மதிப்பீட்டின் படி 25000 பேருக்கும் 30000 பேருக்கும் இடைப்பட்ட கூட்டம்தான் அங்கு கூடியது. அப்படி வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நாடு பூராவிலிருந்தும் அழைத்துவரப்பட்டவர்கள். இதற்கு சாட்சியாக நாட்டில் பல பாகங்களிருந்து வந்திருந்த தனியார் பேருந்துகள் அங்கு ஆதாரமாக நின்றிருந்தது. 

இவ்வாறான கூட்டங்களுக்கு ஆட்களை வெளியில் இருந்து அழைத்து வரும் கலாச்சாரத்தை வழக்கம் போல் வெற்றிகரமாக இந்தக் கூட்டத்திலும் ராஜபக்ஷக்கள் செய்திருந்தார்கள். தேர்தல் காலங்களில்; இதேவிதமாக ஏற்பாடு செய்திருந்த கூட்டங்களுக்கு அவர்கள் ஆட்களைச் சேர்த்து வருவது வழக்கமானது. தேர்தல் கூட்டமொன்று சிலாபத்தில் நடந்த போது யாழ்ப்பான அரச பேருந்து நிலையாத்துக்குச் சொந்தமான அரச பேரூந்து வண்டிகளில் மக்கள் அன்று அழைத்து வரப்பட்டிருந்தனர். இந்தக் கட்டுரையாளன்; நேரிலே பார்த்து, அந்த நாட்களில் இந்த விவகாரங்களைச்; சொல்லி இருந்தது நமது வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். கடந்த ஆட்சி காலத்தில் சேர்த்து வைத்துள்ள பணத்தை ராஜபக்ஷக்கள் இப்போதும் அரச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நல்ல விதமாக செலவு செய்து வருகின்றார்கள்.

இந்தக் கூட்டத்திற்குப் போகின்ற சுதந்திரக் கட்சிக்காரர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை கண்டிப்பாக  எடுக்கப்படும் என்று கட்சிச் செயலாளர் துமிந்த திசாநாயக்க உத்தியோகபூர்வமாக உறுப்பினர்களுக்கு அறிவித்திருந்தார். என்றாலும் சுதந்திரக் கட்சியில் உள்ள ராஜபக்ஷ விசுவாசிகள் எவரும் இதனைக் கண்டு கொள்ள வில்லை. கூட்ட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது  கடும் தொனியில் வார்த்தைகளை வெளியிட்ட சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் பின்னர் சற்றுத் தளர்வான வார்த்தைகளில் பேசத் துவங்கியதை அவதானிக்க முடிந்தது. 17ம் திகதி கூட்டத்தில்; கலந்து பொள்வோர் மீது கட்சிக்குப் பாதிப்பில்லாதவகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது தொனியை  மாற்றிக் கொண்டார்கள் சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள்.

அதேபோன்று மஹிந்த விசுவாசிகளும் இந்தக் கூட்டம் சுதந்திரக் கட்சிக்கோ ஜனாதிபதி மைத்திரிக்கோ எதிரான கூட்டம் அல்ல. இது முற்றிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான கூட்டம் என்று தமது நிலைப்பாட்டிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். எனவே இந்த முறை நடந்த கூட்டத்தில் நேரடியாக ஜனாதிபதி மைத்திரியை எவரும் பெரியளவில் விமர்சிக்க வில்லை. எமக்குக் கிடைக்கின்ற தகவல்களின் படி கூட்டம் நடைபெற இருக்கின்ற இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு மைத்திரிக்கும் மஹிந்த அணி சார்பில் கூட்;டத்தை ஏற்பாடு செய்தவர்களுக்குமிடையே இரகசிய சந்திப்பொன்று நடந்திருக்கின்றது. இந்த சந்திப்பில் மைத்திரியுடன் சுதந்திரக் கட்சியின் உதவித் தலைவர்களில் ஒருவரான டலஸ் அலகப்பெரும கலந்து கொண்டிருக்கின்றார் என்று தெரிய வருகின்றது.

நாம் மேற் சொல்கின்ற கூற்று உண்மையானால், கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் இல்லை என்பது சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாக இருக்கும். இதனைத்;தான் முன்னாள் அமைச்சர் டலஸ் அலகப்பெருமாவும் கூறுகின்றார். எனவே இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்று நாம் உறுதியாகக் கூறுகின்றோம். என்றாலும் எம்மைப் பொறுத்த வரை மார்ச் 17 சுதந்திரக் கட்சி வரலாற்றில் ஒரு கரிநாள். 

சுதந்திரக் கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டை 40 க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும், நூற்றுக் கணக்கான மாகாண சபை மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் பகிரங்கமாக மீறி இருக்கின்றார்கள். அத்துடன் சிரேஷ்ட தலைவர்கள் 5 பேரில் 4 பேர் இந்தக் கூட்டத்திற்குப் போய் இருக்கின்றார்கள். எனவே சுதந்திரக் கட்சியில் மைத்திரியின் தலைமைத்துவம் பிரித்தானியா யாப்புப்போல் இன்று நெகிழ்ந்து கொண்டிருக்கின்றது. என்றாலும் இந்த நெகிழ்வுத் தன்மையுடன் கட்சித் தலைமையை எவ்வளவு தூரம் மைத்திரிக்கு முன்னெடுக்க முடியும் என்பது கேள்விக் குறியே!

No comments

Powered by Blogger.