"வட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு"
இந்தியாவையும், இலங்கையையும் இணைக்கும் பாலம் தொடர்பில் கேள்விக்கணைகளைத் தொடுத்த உதயகம்மன்பில எம்.பியிடம், ஹிந்தி மொழியில் நான்கு வசனங்களை பேசிக்காட்டுமாறு பிரதமர் சவால் விடுத்ததால் சபையில் நேற்று பெரும் சிரிப்பொலி ஏற்பட்டது.
நாடாளுமன்றம் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. சபாநாயகர் அறிவிப்பு, பொதுமனுத்தாக்கல் ஆகியன முடிவடைந்தப் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று ஆரம்பமானது.
இதன்போது, இந்தியாவையும், இலங்கையையும் இணைக்கும் பாலம் நிர்மாணம் தொடர்பில் இந்திய அமைச்சரும், இலங்கையின் பிரதமரும் வெளியிட்டிருந்த கருத்துகளை மையப்படுத்தி, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிம் வினாக்களை தொடுத்திருந்தார் உதய கம்மன்பில எம்.பி.
எனினும், இவற்றுக்கு பிரதமர் பதில் வழங்குவார் என கூறிவிட்டு அமைச்சர் அமர்ந்து விட்டார். பின்னர் எழுந்த பிரதமர், "இந்திய லோக் சபாவின் ஹென்சாட் அறிக்கை ஆங்கில மொழியின் இன்னும் கிடைக்கவில்லை. ஹிந்தி மொழியில்தான் இருக்கின்றது. ஆகவே, உறுப்பினருக்கு ( உதயகம்மன்பில) ஹிந்தி மொழி தெரியுமாக இருந்தால் அதை சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எனக்கு வழங்கட்டும். அப்போது அவர் (இந்திய அமைச்சர்) என்ன கூறினார் என அறிந்துகொள்ள முடியும்” என்று பதில் வழங்கினார்.
இதன்போது இடையீட்டுக் கேள்வியொன்றை எழுப்பிய கம்மன்பில, "பிரதமரே, 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய வீதிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சர் இது தொடர்பில் ஆற்றிய உரை அந்நாட்டு ஆங்கில ஊடகங்களில் செய்தியாக வெளிவந்துள்ளன. ஆனால், நீங்கள் இல்லையென கூறுகின்றீர்கள். அப்படியானால், இந்திய அமைச்சர் பொய்யுரைத்துள்ளார். இதற்கு எதிராக இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” - என்றார்.
சிரித்தப்படியே ஆசனத்தில் இருந்து எழுந்த பிரதமர், "ஹென்சாட்டை வைத்துதான் பேச வேண்டும். ஆனால், அது ஹிந்தி மொழியில் இருக்கின்றது என ஏற்கனவே நான் கூறிவிட்டேன். ஹிந்தி மொழி தெரிந்தால் மொழிபெயர்த்துக் கூறுங்கள். அதைவிடுத்து இனவாதம் பேசவேண்டாம். ஹிந்தியை வாசித்தீர்களா, முடிந்தால் இந்தி மொழியில் நான்கு வார்த்தைகளை பேசிக்காட்டுங்கள் பார்ப்போம்" - என்றார்.
"பிரதமரே, நீங்கள் அவ்வாறு கூறவேண்டாம். ஹிந்தி மொழி புரியாதது என் தவறா? இந்தியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் ஹிந்தி மொழி தெரிந்த ஒரு அதிகாரிகூட இல்லையா? இது யாரின் தவறு?' என்று மீண்டுமொரு வினாவை தொடுத்தார் கம்மன்பில.
இதற்குப் பதிலளித்த பிரதமர், "சபாநாயகரே, கடந்த ஆட்சியின்போது இவர்கள் வெளிவிவகார அமைச்சை குழப்பிவிட்டார்கள். சீன மொழி தெரிந்தவர்களை இலண்டனுக்கும், ஐர்லாந்து மொழி தெரிந்தவர்களை சீனாவுக்கும் இவர்கள் நியமித்திருந்தனர். இப்படித்தான் வெளிவிவகார அமைச்சு செயற்பட்டது. இவற்றை தேடிப்பார்பதற்கு காலம் தேவை. பொது எதிரணியினராகிய இவர்களுக்கு இந்திய, மலையாளம் மொழி புரியாமல் இருக்கலாம். ஆனால், மலையாக மந்தீரிகம் நன்றாக தெரியும்” என்றார்.
இதனால், மற்றுமொரு வினாவையும் தொடுத்தார் உதயகம்மன்பில.
"சபாநாயகரே, வட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு ( கொய்த யன்னெ மல்லே பொல்) என்ற பாணியில்தான் பிரதமர் பதிலளிக்கின்றார். இப்படி நகைச்சுவையாக பேசி எங்களை மகிழ்விப்பதற்கு அவர் முயற்சிக்கின்றார். தேங்காய் உதாரணத்தை விடுத்து பதிலைக் கூறுங்கள்” என்றார்.
“ஆம். சீனிகம கோவிவில் தேங்காய் அடிக்கின்றீர்கள். ஆகவே, தேங்காய் பற்றி கூறினால்தான் சிறப்பாக அமையும்” என்று கூறிவிட்டு அமர்ந்தார் பிரதமர்.
இவ்வாறு பிரதமருக்கும், கம்மன்பிலவுக்குமிடையில் சபையில் மிகவும் சுவாரஷ்யமான முறையில் கருத்து பரிமாற்றல்கள் இடம்பெற்றதால் கேள்வி நேரத்தின் போது சபையில் பெரும் சிரிப்பொலி ஏற்பட்டது.
Post a Comment