வரட்சியான காலநிலை நீடிக்கும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்
நாட்டில் தற்போது காணப்படும் வரட்சியான காலநிலை இந்த மாதம் 15ம் திகதி வரை நீடிக்கும் என காலநிலை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் காலங்களில் பருவபெயர்ச்சி காலநிலை நிலவுவதால் இதன்போது மாலை நேரங்களில் நாட்டில் மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக காலநிலை மத்திய நிலையத்தின் அதிகாரி மலித் பிரனாந்து தெரிவித்துள்ளார்.
தற்போது காணப்படும் வரட்சியான காலநிலையால் இரத்தினபுரி மாவட்டத்தில் அதி கூடிய வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் என்றும் அதி குறைந்த வெப்பநிலை 26 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக காலநிலை மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு, கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், கண்டி, திருகோணமலை மற்றும் மன்னார் போன்ற மாவட்டங்களில் 31 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், நுவரெலிய மாவட்டத்தில் அதி கூடிய வெப்பநிலையாக 22 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருப்பதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
2
நீரேந்தும் பகுதிகளில் வறட்சியுடனான காலநிலை நிலவுவதால் நீர் விநியோகம் கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் நீரின் அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுமக்கள் நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறும் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் நீர் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு பௌசர் மூலம் எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தற்சமயம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடிநீருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு சில நகர் புறங்களிலும் இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் நகர்புறங்களில் உள்ளவர்கள் கடைகளில் நீரை கொள்வனவு செய்து உபயோகப்படுத்துவதாகவும் அன்சார் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment