"குழப்பமானதொரு சூழலை ஏற்படுத்திவிடுமோ, என்று எண்ணத் தோன்றுகின்றது"
-Vidi-
இலங்கையின் இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்தான பேச்சுக்கள் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் அனுசரணையுடன் நடைபெற வேண்டும்.
தற்போது இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து எதிரணியினரால் முன் வைக்கப்படும் கருத்துக்கள் மீண்டும் இனப் பிரச்சினைக்கான தீர்வுகளை காண முடியாத குழப்பமானதொரு சூழலை ஏற்படுத்திவிடுமோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இவ்வாறு, முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹஸன்அலி தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இன்றைய ஆட்சி எற்படுவதற்கு பிரதான காரணமாக இருந்த சிறுபான்மையினரின் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொடுக்கப்படுமா என்று சந்தேகிக்க வைக்கும் வகையில் பாராளுமன்றத்தில் எதிர்த் தரப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அணியினரின் கருத்துக்கள் அமைந்துள்ளன.
இன்றைய நல்ல சூழலிலும் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு முன் வைக்கப்படாது போனால் அது வரலாற்றுத் தோல்வியாக இருக்கும். தற்போது சிறுபான்மையினரை மீண்டும் ஒரு தடவை ஏமாற்றுவதற்கானதொரு சூழல் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. எதிரணியினர் அரசியல் தீர்வினை குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆதலால், அரசாங்கமும் பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டவர்களும் நேரடியாகப் நடத்தும் பேச்சுக்கள் வெற்றியளிக்காது. இந்தியா, தென்ஆபிரிக்கா ஆகிய நாடுகளின் அனுசரணையுடன் நடைபெறும் போதுதான் தீர்வுகளை காண முடியும். இதற்கு மாற்றமாக சம்பந்தப்பட்டவர்கள் மாத்திரம் பேசும் போது கடந்த காலங்களைப் போன்று ஏமாற்றமடைவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
கிழக்கு மாகாணத்தில் அம்பாரை, திருகோணமலை மாவட்டங்களில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள சனத் தொகைப் பரம்பலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மட்டுமன்றி, மேலும், இம்மாவட்டங்களுடன் வேறு மாவட்டங்களின் சிங்களப் பிரதேசங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து செய்வதற்கும் திட்டமிட்டமிட்டுள்ளார்கள். 1948 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம் இருந்தமையைப் போன்று அமைய வேண்டும். கிழக்கு மாகாணத்தை தமது ஆதிக்கத்தின் கீழ் தொடர்ந்து வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது. திருகோணமலை, அம்பாரை மாவட்டங்களில் சிறுபான்மையினர் அதிகமாக இருக்கின்ற போதிலும் தமிழ் பேசும் ஒருவரை அரசாங்க அதிபராகப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.
இதற்கு காரணம் இம்மாவட்டங்களை சிங்கள ஆதிக்கத்தின் கீழ் வைத்துக் கொண்டு சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்காகவாகும்.அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்களின் வசம் இருந்து கரும்புச் செய்கை காணிகள் பலவந்தமாக பறிக்கப்பட்டு பெரும்பான்மைச் சமூகத்திற்கு வழங்கப்பட்டன. மேலும், இவ்விருமாவட்டங்களிலும் முஸ்லிம்களின் காணிகள் திட்டமிடப்பட்ட வகையில் பல்வேறு பெயர்களில் பறிக்கப்பட்டன.
இச்செயற்பாடுகள் இம்மாவட்டங்களில் பெரும்பான்மைச் சமூகத்தின் ஆதிக்கத்தை அதிகரிக்கச் செய்து தமிழ், முஸ்லிம் இனப் பரம்பல்களை குறைப்பதற்கான திட்டமிட் நடவடிக்கைகளாகும். ஆகவே, இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இவற்றையும் கருத்திற் கொள்ள வேண்டும்.
அரசாங்கம் இனப் பிரச்சினைக்கான தீர்வுகளை உண்மையாக காண வேண்டுமென்ற சிந்தனையை தூய்மையாக நிறைவேற்ற வேண்டுமாக இருந்தால் சிறுபான்மையினரின் இனப் பரம்பலை குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மாற்றியமைக்க வேண்டும்.
Post a Comment