Header Ads



"வேதனைகளை உணர்ந்து கொள்வதற்காவது, அவர்கள் இதனைப் பார்க்க வேண்டும்"


துருக்கியிலிருந்து கிரேக்கம் நோக்கி படகுப் பயணம் மேற்கொள்ளும் குடியேறிகளில் இந்த ஆண்டில் இதுவரை 360க்கும் அதிகமானோர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர். துருக்கியில் கரை ஒதுங்கும் சடலங்கள் இஸ்மிர் என்ற இடத்தில் அடக்கம் செய்யப்படுகின்றன.

மத்தியதரைக் கடலில் மூழ்கி பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு உச்சத்தில் இருந்தது.

துருக்கியில் இவ்வாறு கரை ஒதுங்கிய பிரேதங்களில் அனேகமானவை இனம் காணப்படவில்லை.

இவ்வாறான சடலங்கள் இஸ்மிர் என்ற இடத்தில் உள்ள மயானம் ஒன்றில் அடக்கம் செய்யப்படுகின்றன.கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 100க்கும் அதிகமான பிரேதங்கள் இந்த மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக அதில் பணிபுரியும் இமாம் அஹ்மத் அல்டான் பிபிசியிடம் தெரிவித்தார்.

அனாதரவாக கண்டெடுக்கப்படும் பிரேதங்களை அடக்கம் செய்யும் மயானமாக இஸ்மிர் அண்மையில் மாறியுள்ளது எனவும் தெரிவித்தார்.

அடையாளம் காணப்படாத பிணங்கள் முதலில் பிணவறைக்கு எடுத்து செல்லப்படும். அதன் பிறகும் உரிமை கோரப்படாத சடலங்களை முழு சமய முறையுடன் நாங்கள் புதைத்து விடுவோம் என்றார் இமாம் அஹமட் அல்டான்.

"அவர்களுக்கு வேறு யாரும் இல்லாததால் நாம் இதனைச் செய்கிறோம். அவர்கள் அல்லாவிற்குள் அடைக்கலமாகி விடுகிறார்கள்" என்கிறார் அவர்.

இப்படி நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழக்கும் இந்த ஒரு துரர்திஷ்ட நிலைமையை நாம் தவிர்த்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்த அவர், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இங்கு வந்து இதனை பார்க்க வேண்டும் என்கிறார்.

"வேதனைகளை உணர்ந்து கொள்வதற்காவது அவர்கள் இதனைப் பார்க்க வேண்டும். இந்த படுகொலைகளை நிறுத்த வேண்டும். இந்த பிள்ளைகள் பலியாவதை நிறுத்த வேண்டும்" எனவும் கேட்டுக் கொண்டார்.

No comments

Powered by Blogger.