ரணில் குறித்து, மைத்திரி பொறுமை - சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் போர்க்கொடி
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளினால் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். இந்த நிலைமை நீடித்தால் நாங்கள் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்கவேண்டியேற்படும் என்று அமைச்சர் டிலான் பெரெரா தெரிவித்தார்.
எங்களுக்கு தெரியாமலேயே சில விடயங்களை பிரதமர் முன்னெடுத்துவருகின்றார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுமையுடன் இருக்கின்றார். ஆனால் நாஙகள் எவ்வளவு காலத்துக்கு பொறுமையாக இருப்போம் என்று கூற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும் என்ற உயரிய நோக்கத்துக்காகவே நாங்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் அரசாங்கத்தில் நீடிக்கின்றோம். ஆனால் சுதந்திரக் கட்சியின் ஆதரவை பெறுமதியற்றதாக பிரதமர் கருதக்கூடாது என்றும் அவர் கூறினார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளினால் சுதந்திரக் கட்சி அதிருப்தியுடனேயே இருக்கின்றது. நாங்கள் இந்த அரசாங்கத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மட்டும் மிகவும் திட்டவட்டமாக கூற முடியும். குறிப்பாக இந்த அரசாங்கத்திற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் வழங்கும் ஆதரவை பெறுமதி அற்றதாக கருதி செயற்படுகின்றனர்.
இது தொடர்பில் பால்வேறு உதாரணங்களையும் சம்பவங்களையும் நாங்கள் கூற முடியும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் எங்களுக்கு அரசியல் ரீதியல் பல முரண்பாடுகள் இருந்தாலும் நாங்கள் அவரின் பாராளுமன்ற ஜனநாயகப் பண்பை மதிக்கின்றோம். ஆனால் அவர் தற்போது பாராளுமன்றத்தில் பிரயோகிக்கும் வார்த்தைகள் எமக்கு கவலையளிப்பதாக அமைந்துள்ளன என்பதனையும் கூறவேண்டும்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி.க்கள் தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர். ஆனால் அவ்வாறு சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை மறந்துவிட்டே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் செயற்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களை எமக்கு தெரியாமல் கொண்டு வருகின்றனர். அது எமக்கு தெரியாது. அரசியலமைப்பினை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்தை பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் பிரேரணையை கொண்டு வரும் போதும் எம்முடன் பேச்சு நடத்தப்படவில்லை. பின்னர் நாங்கள் முன்வைத்த திருத்தங்களை ஏற்றுக் கொண்டனர். நாங்கள் 9 திருத்தங்களை முன்வைக்கவேண்டியேற்பட்டது என்பதனை இங்கு குறிப்பிடுகின்றோம்.
இவ்வாறு பல்வேறு விடயங்களில் தனித்து செயற்படுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் முயற்சிப்பதை அவதானிக்க முடிகின்றது. அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவருடன் பிரதமருக்கு முரண்பாடுகள் இருக்கலாம். அதற்காக அனைத்து டாக்டர்களையும் விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமென்றும் எந்த தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத தேர்தல் முறையை கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்துக்காகவுமே நாங்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றோம். ஆனால் அவ்வாறு கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பிரதமருக்கு நாங்கள் வழங்கும் ஆதரவு உரிய மதிப்பை பெறாமல் இருக்கின்றது.
இப்படியே சென்றால் தேசிய அரசாங்கத்தின் நோக்கம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற சந்தேகம் தற்போது எமக்கு ஏற்படுகின்றது. விசேடமாக கடந்த 17 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற பொது எதிரணியின் கூட்டத்தில் மஹிந்தவை ஆதரிப்பதற்காக மக்கள் வரவில்லை. மாறாக ஐ.தே.க யின் எதிர்பாளர்களே அன்றைய தினம் கொழும்பில் ஒன்றுகூடினர் என்பதை உறுதியாக கூறவேண்டும்.
எனவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் தமது பயணத்தில் மாற்றங்களை செய்வது மிகவும் அவசியமாகும். இல்லாவிடின் கடினமான தீர்மானமொன்றை எடுப்பதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஏற்படும் என்பதை தெ ளிவாகக் குறிப்பிடுகின்றோம். நாங்கள் தற்போதைய நிலைமையில் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் கலந்கொள்வதில்லை. இதுவும் தேசிய அரசாங்கத்தைப் பொறுத்தவரை வீழ்ச்சியான விடயமாகும்.
அந்தவகையில் கூறும்போது சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்பதனை குறிப்பிட முடியும். பிரதமரின் இந்த புறக்கணிப்புக்கள் தொடருமானால் நாங்கள் கடினமான தீர்மானம் ஒன்றை எடுப்போம்.
நாங்கள் இந்த அரசாங்கத்தைவிட்டு விலகினால் அரசாங்கம் கவிழ்ந்துவிடும். ஆனால் அந்த யதார்த்த நிலையை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் இல்லை என்பதே கவலைக்குரிய விடயமாகும். விசேடமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியின் விடயத்தில் மிகவும் பொறுமையுடன் செயற்படுகின்றார் என்பதை கூற வேண்டும.
கேள்வி ஜனாதிபதி பொறுமையுடன் செயற்படுவதாக ஏற் கூறுகின்றீர்கள் ?
பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுமையுடன்தான் செயற்படுகின்றார். உதாரணமாக இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கை தொடர்பில் ஜனாதிபதிக்கு எதுவும் தெரியாது. அமைச்சரவைக்கு வந்த பின்னரே ஜனாதிபதிக்கு அது தெரியவந்தது. அவ்வாறு பார்க்கும்போது ஜனாதிபதி மிகவும் பொறுமையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து ஜனாதிபதி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
ஆனால் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்ச்சியாக எமது ஆதரவின் பெறுமதியினைப் புரிந்து கொள்ளாது தேசிய அரசாங்கத்திற்குள் தனித்து இயங்க முயற்சிக்கின்றனர். அவ்வாறு அவர்கள் தனித்து இயங்க தொடர்ச்சியாக முயற்சிப்பார்களாயின் நாங்களும் அரசியல் ரீதியில் கடினமான ஒரு முடிவுக்கு செல்வதற்கு தயாராக இருக்கின்றோம்.
இதேவேளை கடந்த 17 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பில் கூட்டமொன்று நடத்தப்பட்டது அந்தக் கூட்டத்தையிட்டு நாங்கள் கவலைப்படவில்லை. உண்மையில் அந்தக் கூட்டம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியே கவலைப்படவேண்டியுள்ளது.
காரணம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாலுக்கு சமமான பிரிவினரே அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். இந் நிலையில் சுதந்திரக் கட்சியின் தலையும் உடலும் சேர்ந்து வந்தால் என்ன நடக்கும் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி புரிந்து கொள்ள வேண்டும்.
எமது கட்சியின் 39 உறுப்பினர்கள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் அவர்களில் யாரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விமர்சிக்கவில்லை. கூட்டத்திற்கு தலைமைதாங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷகூட மைத்திரிபால சிறிசேனவை விமர்சிக்கவில்லை. மாறாக ஐக்கிய தேசியக் கட்சியையே விமர்சித்தனர்.
எனவே இந்தக் கூட்டம் தொடர்பில் சிந்திக் வேண்டியது நாங்கள் அல்ல. மாறாக விடுக்கப்பட்டுள்ள மஞ்சள் வெ ளிச்சம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியே சிந்திக்க வேண்டியுள்ளது என்றார்.
Post a Comment