"மின்சாரத்தை துண்டித்து, அரசை கவிழ்ப்பதற்கு சதி"
நல்லாட்சி அரசை ஜனநாயக முறையிலும், மக்களுக்கு உண்மைகளைத் தெரிவித்தும், அவர்களின் போராட்டங்கள் மூலமாகவும் தான் கொண்டு வந்துள்ளோம். ஆனால் இன்று பொது எதிரணியினர் தேங்காய் உடைத்தும், மின்சாரத்தைத் துண்டித்தும் அரசைத் திசை திருப்புவதற்கும், கவிழ்ப்பதற்கும் சதிகளைச் செய்கின்றனர். இவ்வாறு யாழ்.வந்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஆனாலும் நாங்கள் அதற்கு அஞ்சப்போவதில்லை. மக்கள் ஆதரவோடு எதிர்வரும் ஐந்து- பத்து வருடங்களுக்கு நாட்டை அபிவிருத்திப் பாதை நோக்கி முன்னெடுத்துச் செல்லத் தயாராகவே இருப்பதாகவும் அவர் கூறினார்.
யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் தொல்லியற்பிரிவும் மத்திய கலாசார நிதியமும் இணைந்து வடக்கு மாகாணத்தின் கலாசார மரபுரிமையை பாதுகாப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகள் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் நடைபெற்றன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையர் என்ற வகையிலே சகலருக்கும், சமவாய்ப்புக்கள் வழங்கப்படவேண்டும் என்பது தான் எமது நோக்கம். எனவே தான் வட இலங்கையின் மரபுரிமைச் சின்னங்களைக் காக்கப் பெருமளவான நிதியை ஒதுக்கியுள்ளோம்.இன்று வடக்குக்கான கலாசார மத்திய நிதியத்தை ஆரம்பித்து வைக்கிறோம்.எல்லா இனங்களுடைய, மக்களுடைய கலாசார விழுமியங்களை, சின்னங்களை பாதுகாப்பது தான் எமது நோக்கம்.
இளைஞர், யுவதிகளின் எதிர்காலம் கருதி 10லட்ச் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தத் தீர்மானித்துள்ளோம். அதற்கு முன்னோடியாக பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளோம்.குறிப்பாகத் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளக்கூடிய பாடநெறிகளைக் வழங்கத் தீர்மானித்துள்ளோம். இதேபோன்று பாடசாலைக் கல்வி முறையிலும் எதிர்வரும் ஐம்பது வருட காலத்தைக் கருத்திற்கொண்டு மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளோம். மாணவர்கள் புத்தகமும் கையுமாகத் திரியும் நிலையை மாற்றி அனைவரும் தொழில்நுட்பங்களின் கையாளுகையுடம், மடிக்கணினிகளின் பயன்பாடுகளுடன் வினைத்திறன் பெறுகின்ற முன்னேற்றத்தைக் காண விரும்புகின்றோம். இந்த மாற்றத்தை நாங்கள் கொண்டு வராது போனால் எதிர்கால சந்ததிக்கு நாங்கள் செய்யும் அநீதியாகத் தான் அமையும் என்றார்.
Post a Comment