Header Ads



அம்பாறை பள்ளிவாசல் சம்மேளனத்தினால், யாப்பு மறுசீரமைப்புக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆலோசனைகள்

(சுலைமான் றாபி) 

யாப்பு மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தினால் கடந்த 29.02.2016ம் திகதி விஷேட மகஜர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனத்தின் செயலாளர் எம்.ஏ.எம். றசீன் தெரிவித்தார். 

அவற்றுள்..

யாப்பு மறுசீரமைப்பு ஆணைக்குழுவிற்கு எமது சம்மேளனத்தினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளின் விபரம்.

ஆலோசனைகள்:

01. 1978ம் ஆண்டய யாப்பில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமே ஒழிய புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவது அவசியமற்றது.

02. வடக்கு கிழக்கு ஒன்றாக இணைக்கப்படாது தொடர்ந்தும் தனித்து செயற்பட அனுமதிக்க வேண்டும்.

03. அரச நிலங்கள் ஒவ்வொரு பிரதேச மக்கள் தொகைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும்.

04. விகிதாசார தேர்தல் முறை தொடர்ந்தும் அமுலில் இருக்க வேண்டும். மாற்றம் செய்வதாயின் இனங்களின் விகிதாசாரத்திற்கு பங்கம் ஏற்படாதவாறு அமைதல் வேண்டும்.

05. தற்போதுள்ள ஜனாதிபதி முறை தொடர்ந்தும் அமுலில் இருக்க வேண்டும்.

06. இரண்டு உப ஜனாதிபதிகள் சிறுபான்மையினர் சார்பாக நியமிக்கப்படல் வேண்டும். (முஸ்லிம், தமிழ்)

07. இனவாத மதவாத தீவிரவாத கருத்துக்கள், குழுக்கள்,  அமைப்புகள் யாப்பு ரீதியாக தடைசெய்யப்படல் வேண்டும்.

08. தொழில் வாய்ப்புகள் வழங்குவதில் சிறுபாண்மையினருக்கும் நன்மையளிக்கும் வகையில் யாப்பில் ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும்.

09. நாட்டில் தமிழ் சிங்கள மொழிகளின் பயன்பாடு யாப்பு ரீதியாக கண்டிப்பாக உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.

10. தேசிய கீதம் தொடர்ந்தும் தமிழ், சிங்கள மொழிகளில் இசைக்கப்படுவதற்கு யாப்புரீதியான உத்தரவாதம் வழங்கப்படல் வேண்டும்.

ஏனைய ஆலோசனைகள்:

01. கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய தொகுதிகளில் வாழும் தமிழ் பேசும் மக்களின் நலன் கருதி கரையோர அரசாங்க அதிபர் காரியாலயம் ஒன்று அமைக்கப்பட்டு சிறுபான்மையினரில் இருந்து அதற்கு பொருத்தமான மாவட்ட அரசாங்க அதிபர் ஒருவர் நியமிக்கப்படல் வேண்டும். அதேவேளை அம்பாரை அரசாங்க அதிபர் காரியாலயம் தொடர்ந்தும் இயங்க வேண்டும்.

02. அம்பாரை மாவட்டத்தில் வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை திட்டமிட்ட அடிப்படையில் குடியேற்றி இன விகிதாசாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும்.

03. பயங்கரவாதம் நிலவிய காலத்திற்கு முன்பு மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகள் பயங்கரவாத சூழ்நிலை காரணமாக பயன்படுத்தப்படாமல் காடுகளாக மாற்றமடைந்துள்ளன. எனவே, அவை மீண்டும் அம்மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதற்கு தடையாக இருக்கின்ற வன இலாகா மற்றும் காணி பயன்பாட்டு ஆணைக்குழு என்பவற்றுக்கு மேற்படி விடயம் தொடர்பாக தெளிவான ஆலோசனைகள் வழங்கி, அம்பாரை மாவட்ட விவசாய புரட்ச்சிக்கு அடித்தளம் இடுதல் வேண்டும்.

04. சமய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களை நியமிக்கும் போது ஒரு இனத்திற்கு மட்டும் முன்னுரிமை வழங்காது எல்லா இனங்களைச் சேர்ந்தவர்களுக்கும் நன்மையளிக்கும் வகையில் சமய பாடங்களுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படல் வேண்டும் எனவும் அந்த மகஜரில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.