இஸ்லாமியப் பெண் தனது பெயருடன், எவரது பெயரை இணைக்க வேண்டும்...?
-அஷ் ஷெய்க் அல் ஹாபிள் M Z M Shafeek -
எமது முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலானோர் ஷரீஆவுக்கு மாற்றமாக புரிந்து வருகின்ற ஒரு அறியாமையை இக் கட்டுரையினூடாக வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நீளமானது என்று அசட்டை செய்து விடாது முழுமையாக வாசித்து தெளிவை பெற்றுக் கொள்வோம்.
இவ்வாரங்களில் WhatsApp, Viber, Facebook உள்ளிட்ட சமூக இணையத் தளங்களை ஆக்கிரமித்திருந்த செய்திகளில் " ஒரு பெண் திருமணம் முடித்த பின் தனது பெயருடன் தனது தந்தையின் பெயரை தவிர்த்து தனது கணவனின் பெயரை இணைத்து உபயோகிப்பது இஸ்லாமிய பார்வையில் கூடுமா " என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவிலான சிறு கட்டுரையொன்றும் இடம்பெற்றிருந்ததை நாம் அறிவோம்.
குறித்த கட்டுரையை வாசித்த பலர் தெளிவின்மையின் காரணமாக தடுமாற்றமான, குழப்பகரமான மனோநிலையில் இருந்து வருகின்றார்கள் என்பதை சில சமூக இணையத் தளங்களில் குறித்த கட்டுரையின் கீழ் அவர்கள் வழங்கியிருந்த பின்னூட்டங்களை அவதானித்த போது அனுமானிக்க முடிந்தது. அத்துடன் பலர் எம்மை நேரடியாகவே தொடர்பு கொண்டு குறித்த பதிவு சம்பந்தமான விளக்கங்களை வினவிக் கொண்டிருந்தனர். ஆம் குறித்த கேள்வி பதிலை முதலில் படித்து விட்டு அது சம்பந்தமாக மேலும் சில தெளிவுகளை பெற்றுக் கொள்வோம்.
கேள்வி : திருமணம் முடித்த பின் மனைவி, தந்தையின் பெயரின்றி கணவனின் பெயருடன் தனது பெயரை இணைத்துக் கொள்வது இஸ்லாமிய பார்வையில் கூடுமா ???
பதில் : ஒரு மனிதன் தந்தை அல்லாத வேறொருவரோடு (பெயரில்) தன்னை இணைத்துக் கொள்வது ஆகுமாகாது . அல்லாஹு தஆலா கூறுகிறான் " அவர்களை அவர்களது தந்தைகளுக்கு ( இணைத்து) அழையுங்கள் , அதுவே அல்லாஹ்விடத்தில் மிகவும் நீதமானது " .
எவர் தந்தை அல்லாதவரை தம்மோடு (பெயரில் ) சேர்த்துக் கொள்கிறாரோ அவர் மீது உறுதியாக கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது . இதன் பிரகாரம் இறை மறுப்பாளர்களிடம் (காபிர்களிடம் ) இருக்கும் வழக்காறுகள் போன்று , ஒரு பெண் தனது கணவனின் பெயருடன் தன்னை சேர்த்துக் கொள்ள முடியாது . " எவர் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அக்கூட்டத்தையே சார்ந்தவர் " இறைவனே அனுகூலம் புரிய போதுமானவன் .எமது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் , அவர்களது தோழர்கள் மீதும் அல்லாஹ் ஸலவாதும் ஸலாமும் சொல்லியருள்வானாக .
அரபியில் : இமாம் இப்னு பாஸ்(z) அவர்களின் தலைமையிலான மார்க்கத் தீர்ப்புகளுக்கான நிரந்தர மையம்
தமிழாக்கம் : அ(z)ஸ்ஹான் ஹனீபா 09/03/2016
கேள்வியும் அதற்கான மார்க்கத் தீர்ப்பும் முடிவுற்றது.
எமது சமூகத்தில் மிகப் பெரும்பாலானோர் (பெரும்பாலான பெண்கள் ) குறித்த விவகாரத்தில் இதற்கு மாற்றமான போக்கையே தொடராக கையாண்டு வருவதால் தெளிவுக்காக தற்போது சற்று விரிவாக முன்னோக்குவோம். குறித்த கேள்வி பதிலின் அரபி மூல வாசகங்களை தேடியதில் அதனை உறுதி செய்து கொள்ள முடிந்தது. விரிவை அஞ்சி இங்கு அரபு மூல வாசகங்களை பதிவதை தவிர்த்துள்ளேன். ஆம் குர்- ஆன் சுன்னஹ் அடிப்படையில் ஒருவர் (அதாவது ஆண் பெண் இருசாராரும்) தமது பெயருடன் தமது தந்தையின் பெயரை இணைத்தே உபயோகிக்க வேண்டும் என்ற குறித்த பதில் மிகச் சரியாகவே வழங்கப் பட்டுள்ளது.
குறித்த இத் தீர்ப்பை வழங்கியதாக இங்கே குறிப்பிடப் பட்டுள்ள இமாம் இப்னு பாஸ்(z) அவர்களின் தலைமையிலான மார்க்கத் தீர்ப்புகளுக்கான நிரந்தர மையம் என்பது இன்றைய உலகின் மிகவும் பலமான, முதன்மைப் படுத்தப்படக் கூடிய, உறுதிமிக்க சபையாகும். ஆகவே குறித்த சட்டம் சம்பந்தமாக குர்-ஆன் ஸு ன்னஹ் நிழலில் மேற்குறிப்பிட்ட சபை வழங்கியுள்ள குறித்த கேள்விக்கான பதிலானது மீளாய்வுக்கு அப்பாற்பட்டது என்பது திண்ணம்.
பார்க்க : ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّهِ (ஸூரத்துல் அஹ்சாப் - வசனம் 05) அவர்களை அவர்களின் தந்தைகளுக்கு (தந்தந்தைகளின் பெயர்களுக்கு இணைத்து) அழையுங்கள் (ஸூரஹ் அல் அஹ்சாப் - வசனம் 05)
இமாம் இப்னு ஜரீர் அத் தபரி (ரஹிமஹுள்லாஹ் உள்ளிட்ட பல தப்ஸீருடைய உலமாக்கள் மேற்கண்ட திருவசனம் அருளப் படும் வரை நபி ஸல்லள்ளாஹு அலைஹி வசல்லம் அவர்களின் வளர்ப்பு மகன் ஸைத் (ரழியள்ளாஹு அன்ஹு) அவர்களை ஸைத் பின் முஹம்மத் என்றே மக்கள் அழைத்து வந்தார்கள் என்றும் குறித்த வசனம் அருளப் பட்டதன் பிற்பாடு அவ்வாறு அழைப்பதை தவிர்த்துக் கொண்டார்கள் என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆண்கள், பெண்கள் என இரு சாராருக்கும் பொதுவானதாகவே மேற்கண்ட சட்டம் அமையப் பெற்றுள்ளது. எனினும் இன்றைய எமது நடைமுறையை அவதானிப்போமாயின் எமது இஸ்லாமிய ஆண்களை பொருத்தவரை திருமணத்திற்கு முன்பும் பின்பும் தமது தந்தையர்களின் பெயர்களை தமது பெயர்களுடன் இணைத்தே பெரும்பாலும் உபயோகித்து வருகின்றனர். அனால் இஸ்லாமியப் பெண்களில் மிகப் பெரும்பாலானோர் தமது தந்தையர்களின் பெயர்களை தவிர்த்து திருமணத்திற்கு பின்பு தமது பெயருடன் தமது கணவர்களின் பெயர்களை புகுத்திக் கொள்கின்றனர். இது ஷரீஆவிற்கு முற்றிலும் மாற்றமான நடைமுறையாகும்.
ஏனெனில் அவ்வாறு திருமணத்தின் பின்பு கணவரின் பெயரை இணைத்து உபயோகிக்கும், அழைக்கும் நடைமுறையை இஸ்லாம் அனுமதித்திருந்தால் பல மனைவியருக்கு கணவராக வாழ்ந்து காட்டிய நபி (ஸல்லள்ளாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் கண்ணியத்தை அள்ளாஹ் மிகவும் உயர்த்தி வைத்திருக்கின்ற நிலையில் நபி (ஸல்லள்ளாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் மனைவிமார்களும் தமது பெயர்களுடன் நபியவர்களின் பெயரை இணைத்து உபயோகித்திருப்பர். எனினும் அவர்களோ தமது தந்தையர்களின் பெயர்களையே தமது பெயர்களுடன் இணைத்து உபயோகித்து வந்துள்ளனர்.
உதாரணத்திற்கு : ஆயிஷா பின்தி அபீ பக்ர், ஹப்ஸா பின்தி உமர், சைனப் பின்தி ஜஹ்ஷ், சபிய்யஹ் பின்தி ஹுயய், ஃஹதீஜா பின்தி ஃகுவைலித்..... ( நபி ஸல்லள்ளாஹு அலைஹி வசல்லம் அவர்களின் மனைவிமார்களில் பலரது தந்தையர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தும் அவர்கள் நபியவர்களை திருமணம் செய்த பின்பும் தமது தந்தையர்களின் பெயர்களையே தமது பெயர்களுடன் இணைத்து உபயோகித்து வந்துள்ளனர் என்பதில் இருந்து இஸ்லாம் குறித்த விடையத்தில் எவ்வளவு தெளிவானதொரு நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம் ) *குறித்த தவறான நடைமுறையை கையாள்வதில் முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்களையே அறியாமையினால் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.
பார்க்க : عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم : مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ - رواه أبو داود وغيره நபி (ஸல்லள்ளாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் அருளியதாக இப்னு உமர் (ரழியள்ளாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள். யார் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகின்றாரோ அவர் அவர்களில் உள்ளவராவார். ( இமாம் அபூ தாவூதும் இன்னும் பலரும் இந்த ஹதீஸை அறிவித்துள்ளனர் ) ஷரீஆ நடைமுறைக்கு மாற்றமாக இன்றைய எமது பெண்களில் மிகப் பெரும்பாலானோர் திருமணத்தின் பின் தமது கணவர்களின் பெயர்களை புகுத்திக் கொல்வதற்கு எவ்வித ஞாயமும் கற்பிக்க முடியாது என்பதே உண்மை. மார்க்கத்தில் போதிய தெளிவின்மையின் காரணமாக அல்லது பொதுவான நடைமுறை அவ்வாறுதான் இருக்கின்றது என்ற சிந்தனையில் அல்லது கணவர்களிடம் குடிகொண்டுள்ள ஆணாதிக்க போக்கின் காரணமாகவே பெண்கள் இத் தவற்றை செய்கின்றனர். அதன் விளைவாக அவர்கள் தமது திருமணத்தின் பின்பு அன்றாட பழக்க வழக்கங்களில் இருந்து பிறப்புச் சான்றிதழ், கடவுச் சீட்டு, அடையாள அட்டை உள்ளிட்ட சகல ஆவணங்களிலும் தமது தந்தையின் பெயருக்கு பதிலாக தமது கணவர்களின் பெயரை உபயோகிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள்.
நான் அறிந்த வரை ஒரு பெண் தனது பெயருடன் தனது தந்தையின் பெயரை தவிர்த்து தனது கணவனின் பெயரையே உபயோகிக்க வேண்டும் என்ற கட்டாய நடைமுறை அல்லது அரசியற் சட்டம் உலகில் அனேகமாக எந்த நாடுகளிலும் இல்லை. ஆம் தேடித் பார்த்ததில் அமெரிக்காவின் ஒரு மாநிலத்தில் மட்டும் அவ்வாறானதொரு அரசியற் சட்டம் இருப்பதாக நம்பகமற்ற ஒரு செய்தியை காணக் கிடைத்தது. ஆகவே அவ்வாறான நிர்ப்பந்த நிலை உலகில் எங்கேயாவது இருந்தால் அங்கு மட்டும் கீழ்காணும் திருவசனங்களையும் மேலும் சில திருவசனங்கள், சட்டவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு இஸ்லாமியப் பெண் தனது தந்தையின் பெயருக்கு மாற்றீடாக பொருத்தமான வேறு ஒருவரின் பெயரை உபயோகிக்க அனுமதி வழங்கப் படலாம்.
பார்க்க : * فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلاَ عَادٍ فَلاَ إِثْمَ عَلَيْهِ إِنَّ اللهَ غَفُوْرٌ رَّحِيْمٌ (ஸூரத்துல் பகரஹ் - வசனம் 173) அர்த்தம் : எவரேனும் பாவம் செய்யும் நோக்காமில்லாமலும் வரம்பு மீறாமலும் நிர்பந்திக்கப் பட்டு விட்டால் அவர் மீது குற்றமாகாது. நிச்சயமாக அள்ளாஹ் மிக்க மன்னிப்பவனும் மிகக் கிருபையுடையவனும் ஆவான். وَقَدْ فَصَّلَ لَكُم مَّا حَرَّمَ عَلَيْكُمْ إِلَّا مَا اضْطُرِرْتُمْ إِلَيْهِ (ஸூரத்துல் அன்ஆம் - வசனம் 119) அர்த்தம் : எதன் பக்கம் நீங்கள் நிர்ப்பந்திக்கப் பட்டவர்களாகி விட்டீர்களோ அதைத் தவிர, அள்ளாஹ் உங்கள் மீது ஹராமாகி விட்டவைகளை அவன் உங்களுக்கு தெளிவு படுத்தி விட்டான்.
மேற்குறிப்பிட்ட நிர்ப்பந்த நிலை ஏற்பட்டாலோ அல்லது தனது தந்தை யார் என்பதை எவ் வகையிலும் அறிந்து கொள்ள முடியாது போனாலோ அன்றி வேறு எக் காரணத்திற்காகவும் ஒருவர் (ஆணோ பெண்ணோ) தனது பெயருடன் தனது தந்தையின் பெயரை தவிர்த்து வேறு ஒருவரின் பெயரை உபயோகித்து வருவது ஷரீஆவிற்கு மாற்றமானதே. (பலரும் செய்கின்றார்கள் என்பதற்காக ஒரு தவறு சரியென ஞாயப்படுத்தப் பட ஷரீஆ ஒரு போதும் இடமளியாது) அள்ளாஹ்வே மிக அறிந்தவன்.
குறித்த விவகாரத்தில் இதற்கு மாற்றமான ஷரீஆவின் கூற்றுகள் ஏதும் இல்லை என்பதே தெளிவானது. எனினும் கண்ணியத்திற்குரிய உலமாக்கள் யாரேனும் இதில் ஏதும் அபிப்பிராயங்களை தெரிவிக்க விரும்பின் இக் கட்டுரையின் கீழ் தமது கருத்துக்களை ஆதாரத்துடன் பின்னூட்டம் செய்வதுடன் shafeek.uk@mail.com என்ற எனது இணையத் தளத்தினூடாக தெரியப் படுத்துங்கள். ஜசாக்குமுள்ளாஹ்
தெளிவூட்டியதற்கு நன்றி. இஸ்லாத்தின் பால் மதம் மாறி ஒரு முஸ்லிமை மணமுடித்த பெண்ணின் பெயர் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சற்று தெளிவு படுத்த முடியுமா?
ReplyDeleteஇது முட்டாள்தனமான வாதம்!
ReplyDeleteஒரு பெண் தன்னுடைய பெயரைக்கூட சுதந்திரமாகப் பயன்படுத்த முடியாதவளா என்ன..? அரேபிய மண்ணின் கலாசாரத்தை கபடத்தனமாக மதம் எனும் வாகனத்திலேற்றி உலகமெல்லாம் பரப்பும் முட்டாள்தனமான முயற்சி இது. இது நிச்சயம் திரிபுபடுத்தப்பட்ட ஒன்றுதானே தவிர வேறில்லை.