பொட்டு அம்மான் இறந்துவிட்டார், என்றே உறுதிப்படுத்துகிறேன் - சரத் பொன்சேகா
விடுதலைப் புலிகளின் கடைசித் தாக்குதல் நடந்த போது தான், பீஜிங்கில் இருந்து கொழும்பு வந்து கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட அவர்,
“2009 மே 17ஆம் நாள் அதிகாலை இறுதிச்சமர் நடந்த போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் பொட்டு அம்மானும் இருந்தார்.
அவர்கள் நந்திக்கடலின் வடக்குப் பகுதி நோக்கிச் சென்றனர். ஆனால், பிரபாகரன் தனது புலனாய்வுப் பிரிவுத் தலைவரை விட்டுச் சென்றார். பெரும்பாலும் அவர் சுடப்பட்டிருக்கலாம்.
அதிகாலை 2.30 மணியளவில் விடுதலைப் புலிகள் கடைசித் தாக்குதலை நடத்திய போது, நான் பீஜிங்கில் இருந்து விமானத்தில் கொழும்பு வந்து கொண்டிருந்தேன்.
2009 மே 17ஆம் நாள் காலை 9 மணியளவில் தான் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினேன். மோதல்கள் மே 19ஆம் நாள் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன.
இறுதிக்கட்டப் போரில் பொட்டு அம்மான் இறந்து விட்டார் என்றே உறுதிப்படுத்துகிறேன்.
போரில் ஏற்பட்ட வெற்றிகளுக்கு மட்டுமன்றி பின்னடைவுகளுக்கும் நான் பொறுப்பேற்கத் தயாராக இருக்கிறேன்.
2006 ஒக்ரோபர் மாதம், முகமாலையில் உள்ள புலிகளின் நிலைகளை அழிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கையில், 150இற்கும் மேற்பட்ட அதிகாரிகளையும் படையினரையும் இழந்த பின்னடைவுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.
முகமாலைச் சமரில் சிறிலங்கா இராணுவம் பல கவச போர் ஊர்திகளை இழந்தது.
80 கவசப் போர் ஊர்திகளுடன் தொடங்கப்பட்ட போர், மூன்று ஆண்டுகளின் பின்னர், 2009 மே மாதம் முடிவுக்கு வந்த போது, 30 கவச ஊர்திகள் மட்டுமே எஞ்சியிருந்தன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment